full screen background image

“ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்..?” – இயக்குநர் இரா.சரவணன் விளக்கம்..!

“ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்..?” – இயக்குநர் இரா.சரவணன் விளக்கம்..!

நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு தனியார் அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் பேசும்போது கோவில்களுக்கு செய்யும் செலவுகளைப் போலவே அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கும் செலவிடலாமே என்று சொல்லியிருந்தார்.

ஆனால் ஜோதிகா சொன்ன கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் திரிக்கப்பட்டு “கோவில்கள் அவசியமா..?” “கோவில்களுக்கு செலவு செய்ய வேண்டுமா…?” என்றெல்லாம் ஜோதிகா கேட்டதுபோல் மாற்றிப் பேசப்பட்டது.

இதையடுத்து ஜோதிகா பேசியதில் தவறே இல்லை என்று அவரது பேச்சை ஆதாரமாக வைத்தே பலரும் வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா தஞ்சாவூருக்கு சென்றதே இயக்குநர் இரா.சரவணன் இயக்கி வரும் இன்னமும் பெயர் குறிப்பிடாத ஒரு படத்தின் படப்படிப்புக்காகத்தான்.

இப்போது இயக்குநர் இரா.சரவணன் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனையைப் பற்றி அந்த விழாவில் எதற்காகப் பேசினார் என்பதை விவரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ இங்கே :

raa.saravanan

நான் தற்சமயம் சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின்போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா.

இத்திரைப்படம் தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதையில் தயாராகிறது என்பதால் எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் நான் விடாப்பிடியாக இருந்தேன்.

அதனால் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதியைப் பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். அன்றைக்கு ஜோதிகா நடிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார்.

வரலாற்றின் அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.

அதனால்தான் கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று ஜோதிகா கோரிக்கை வைத்தார்.

ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்றுதானே ஜோதிகா பேசி இருக்கிறார். இதில் எங்கே வந்தது பிழை..?

கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகள் எனச் சொல்வது எப்படி கோயிலுக்கு எதிரானதாக அமையும்…? சில வருடங்களுக்கு முன்னர் ‘கோயில் கட்டுவதைவிட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசினார் நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா…?

ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பார் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்கு பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர்.

இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால்தான் இந்த விளக்கம்.

அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன்.

ஜோதிகாவை உச்சி வெயிலில் விவசாய மக்களோடு களை கொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்குவதைக் காட்டிக் கொள்ளாமலேயே சமாளித்தார்.

தனக்கு ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார்.

தஞ்சை மக்களின் வாழ்வியலை அறிய, அப்படியே வாழ அவர் கற்றுக் கொண்டார். தஞ்சைக்கே உரிய வாஞ்சை கலந்த வார்த்தைகளைப் பேசக் கற்றார். இந்த சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும்.

ஆனால், “சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல் மனதுதான் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்களைப் பற்றி அவரைப் பேச வைத்தது.

இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது…”

இவ்வாறு இயக்குநர் இரா.சரவணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Our Score