ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் தேவையில்லை என்று இயக்குநரோ, தயாரிப்பாளரோ கருதினால் அதனை கட் செய்துவிட்டு படத்தை ஓட்டச் சொல்லுவார்கள். அல்லது சில காட்சிகளை கட் செய்து வேறொரு இடத்தில் பொருத்தி ஓட்டச் சொல்வார்கள். இப்படி சில படங்களுக்கு நடந்திருக்கிறது. இது மக்களின் ரசனையைப் பொறுத்தது..
ஆனால் ஒரு படத்தின் பிற்பாதி முழுவதையும் தூக்கி முதற் பாதியாகவும், முதற் பாதியைத் தூக்கி இரண்டாம் பாதியாகவும் மாற்றி படத்தை ஓட்டிய கதை தெரியுமா..? அது நடந்தது ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில்..!
1986 செப்டம்பர் 12-ம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸான இந்தப் படத்தில் மோகன், அமலா, ராதா ஆகியோர் நடித்திருந்தனர். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டு..!
இப்படம் ரிலீஸான சில நாட்களில் மதுரை ‘சினிப்பிரியா’ தியேட்டரில்தான் இந்த சோதனை முயற்சி நடைபெற்றது. அப்போது இந்தப் படத்தின் மதுரை, ராமநாதபுரம் ஏரியா விற்பனையை வாங்கியிருந்த நாகராஜன்ராஜா, அதுவரையில் இண்டர்வெலுக்கு முன்பாக ஓடிக் கொண்டிருந்த பகுதியை இடம் மாற்றி ஓட்டினார். இப்போது படம் முன்பைவிட நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூற.. இது அப்படியே படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம். நிறுவனத்திற்குச் சொல்லப்பட்டது.
அவர்கள் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு விநியோகஸ்தர்களின் திருப்தியே நமக்கு போதுமென்று சொல்லி தமிழ்நாடு முழுவதும் இப்படியே மாற்றச் சொல்லிவிட்டு. இதற்கும் தனியே சென்சார் போர்டில் புது சர்டிபிகேட்டும் வாங்கி வெளியிட்டார்கள். தமிழ்ச் சினிமா வரலாற்றில் இப்படியொரு புதுமையான இட மாற்றம், வேறெந்த படத்துக்கும் நிகழ்ந்ததாக இதற்குப் பின்பும் வரலாறு இல்லை.
இன்றைக்கு ‘கன்னக்கோல்’ திரைப்பட விழாவில் இது பற்றி பேசிய இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், விநியோகஸ்தர்கள் அதை மாற்ற விரும்பியதற்கு என்ன காரணம் என்று விளக்கியபோது தமிழ்ச் சினிமாக்களின் வெற்றிக்கான காரணத்தை யாராலும் கண்டறிய முடியாது என்பது புரிந்தது.
“இதுக்கு முன்னாடி வெளியான ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படம் நல்ல ஓட்டம் ஓடியது.. அந்தப் படத்தில் நடிகை ராதா சம்பந்தப்பட்ட காட்சிகள், பிற்பாதியில்தான் அதிகம் வரும். இதனாலேயே ‘அமமன் கோவில் கிழக்காலே’ படம் நன்றாக ஓடியதாக விநியோகஸ்தர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதனையே ஒரு ராசியாகவும் எடுத்துக் கொண்ட மதுரை விநியோகஸ்தர், இந்தப் படத்திலும் ராதா வரும் காட்சிகள் பிற்பாதியில் இருந்தால் படம் ஓடிருமே என்று நினைத்து அப்படி இடம் மாற்றிப் போட்டுவிட்டார். நானும் ஏவி.எம். ஆபீஸ்ல பேசிப் பார்த்தேன்.. அவங்க கேக்கலை. ஆனா, அதுக்கப்புறமும் படம் நல்ல ஓட்டம் ஓடுச்சு..” என்றார் ஆர்.சுந்தர்ராஜன்.
இப்படி முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டிருந்தாலும்கூட, ஒரு கதையை தலைகீழாக மாற்றிப் போட்டு… அதனையும் ரசிகர்களால் ரசிக்க வைக்க முடியுமெனில் இது இயக்குநரின் வெற்றிதானே..?! பெருமைப்பட வேண்டிய விஷயம்..!