கிட்டத்தட்ட 101-வது முறையாக இந்தச் சம்பவத்தை மேடையில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.
‘வைதேகி காத்திருந்தாள்’ படம் உருவான விதம் குறித்து இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பல முறை, பலவிதங்களில் இளையராஜா முன்பாகவேகூட சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவிதத்தில் வேறொரு அர்த்தத்தில் நேற்றைக்கு ‘கங்காரு’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.
‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது படத்தின் ஷூட்டிங்கை லைட்மேன்கள் தடுத்து நிறுத்தியதாக மேடையிலேயே பகிரங்கமாக புகார் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக பேசிய இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் உருவான விதத்தையும் சேர்த்தே பேசினார்.
“ஒரு முறை இளையராஜா ஏழு டியூன்களை போட்டு வைத்துக் கொண்டு, ‘கொடுத்தால் 7 டியூன்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன்..’ என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும், ‘எங்க படத்தில் நாலு சீக்வென்ஸ்தான் உள்ளன. 4 பாடல்கள் போதும்.. இதிலிருந்து 4 டியூன்களை மட்டும் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். இளையராஜா கொடுக்க மறுத்துவிட்டார்.
‘ஒரு இசையமைப்பாளருக்கே இவ்வளவு திமிர் இருந்தால், எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்..?’ அப்படி என்ன டியூன் என்று நினைத்து நான் போய் அவைகளை கேட்டேன்.. நானே அந்த ஏழு டியூன்களையும் வாங்கினேன். அவைகளுக்கு ஏற்றார்போல கதையெழுதி படமாக்கினேன். அந்தப் படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. இதுதான் வித்தை திமிர்.
இதுபோல தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும். தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால், ஒற்றுமை இல்லாவிட்டால் உங்களை யாரும் மதிக்கவும் மாட்டார்கள். உங்களை காப்பாற்றவும் முடியாது..” என்றார்.
சொல்ல வந்த கருத்தான திமிர் அவசியம் என்பது ஓகேதான். அதுக்கு இந்த உதாரணம்தா்ன் கிடைத்ததா..?
ஏற்கெனவே இசைஞானி போட்டுக் கொடுத்த பல அருமையான மெட்டுக்களை பல இயக்குநர்கள் காட்சிப்படுத்தும்விதத்தில் கொத்து புரோட்டா போட்டதில் அவரே மனம வெதும்பிப் போய் இருந்தார்.
இந்த அருமையான, அழகான டியூன்களெல்லாம் ஒரே படத்தில் இருந்தால் நிச்சயம் அந்தப் படம் சூப்பர்ஹிட்டாகும் என்கிற எண்ணத்தில்தான் இசைஞானி இந்த ஏழு டியூன்களையும் ஒரே படத்தில் வைக்க வேண்டும் என்று கருதியிருக்கிறார்.
இதை போய் ‘திமிர்’ என்று கருதினால் எப்படி..?