full screen background image

“ஊராட்சிப் பகுதிகளில் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும்” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

“ஊராட்சிப் பகுதிகளில் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும்” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

தாய் தந்தை மூவிஸ் சார்பில் ராஜேந்திரன் குப்புசாமி தயாரித்திருக்கும் புதிய படம் ‘தகடு’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், ‘பட்டியல்’ சேகர், நடிகர் ரவி மரியா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Thagudu Audio Launch Stills (44)

விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்தைக் காக்க புதிய வியாபார முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார்.

ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இன்றைக்கு சினிமாவில் படைப்பாளிகளுக்கு மரியாதையும், அங்கீகாரமும் இல்லாமல் போய்விட்டது.

ஒரு முறை இயக்குநர் ராஜசேகர், நடிகர் சத்யராஜிடம், ‘நீங்க ‘காக்கிச்சட்டை’ படத்துல நான் எழுதிக் கொடுத்த ‘தகடு’ டயலாக்கை வைச்சுத்தான் முன்னுக்கு வந்தீங்க.. ஆனால் அதை ‘நான்தான் எழுதினேன்’னு ஒரு இடத்துலகூட நீங்க சொல்றதேயில்லை. ஆனால் மணிவண்ணன் பெயரை மட்டும் போற இடமெல்லாம் சொல்றீங்களே?’ன்னு கேட்டாரு.

அதுக்கு சத்யராஜ், ‘ஸார் நீங்க ‘தகடு’ன்னுதான் சொன்னீங்க.. ஆனா நான்தான் அதை என்னோட ஸ்டைல்ல ‘தகடு தகடு’ன்னு மாத்திப் பேசினேன். அதுனாலதான் அது பிரபலமாச்சு. ஆனால் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களேன்’ற வசனத்தை மாடுலேஷன், ஆக்சனோட மணிவண்ணன் ஸார்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாரு. அவர் சொன்னதைத்தான் அப்படியே செஞ்சு கை தட்டல் வாங்கினேன். அதுனாலதான் அவர் பெயரைச் சொல்றேன்’னு சொன்னாராம்.

இதுபோல பேசுறதுக்கு இப்போ யார் இருக்கா..? இதைப்போல் இன்றைக்கும் ஒரு படைப்பாளிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு படத்தில் நடிகர், நடிகைகள் பிரபலமாகும்போது அவர்களை பிரபலப்படுத்திய அந்தப் படத்தின் கதாசிரியர், வசனகர்த்தா பற்றி வெளியில் சொல்வதில்லை.. அதன் பின்பு அவர்களை யாரும் கண்டு கொள்வதுமில்லை. முதலில் இந்த நிலைமை மாற வேண்டும். எழுத்தாளர்களையும் நாம் மதிக்க வேண்டும்.

தமிழ்த் திரையுலகம் இன்றைக்கு இருக்கும் நிலைமையில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் தள்ளாட்டத்தில் இருக்கிறது.

இதைப் போக்க வேண்டுமெனில் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சிகளில் மினி தியேட்டர்கள் கட்டப்பட வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தில் 20000 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு மினி தியேட்டரை கட்டினாலே போதும்.. இவைகளின் ஒரு வாரத்திய மொத்த வசூலே 5 கோடியை தாண்டிவிடும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது நிச்சயம் பலனுள்ளதாக இருக்கும்.

இந்த மினி திரையரங்கு திட்டம் முன்பே அரசு கொண்டு வருவதாகச் சொன்னது. அப்போது நமது திரையுலகப் புள்ளிகள்தான் பெரிய தியேட்டர்கள் பாதிக்கப்படுமென்று அரசிடம் சொல்லி தடைபோட்டுவிட்டார்கள். ஆனால் இன்றைக்கு அதுதான் நமக்கு தேவையாய் இருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்தினர் இப்போதைய நமது சிக்கலான சூழலை உணர்ந்து, இந்த மினி தியேட்டர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்த வேண்டும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் முனைப்பு காட்ட வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

மினி திரையரங்குகளை கட்டலாம் என்று அரசு இப்போது முனைந்தால்கூட திரையரங்கு உரிமையாளர்கள் சும்மாவிட்டுவிடுவார்களா..? ‘அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவோம்’ என்கிற எண்ணம் திரையுலகத்தினர் அனைவருக்கும் வந்தால் ஒழிய இந்த நிலைமை மாறவே மாறாது..!

Our Score