full screen background image

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் ‘பசி’ துரை காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் ‘பசி’ துரை காலமானார்!

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாசிரியருமான பசி துரை வயது மூப்பு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

இயக்குநர் துரை பாளையங்கோட்டையில் 1940-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பிறந்தார். அங்கு அவர் பத்தாம் வகுப்புவரையிலும் படித்தார். அதன் பிறகு அவரது தந்தைக்கு சென்னை ஆவடியில் வேலை கிடைக்க, குடும்பத்துடன் ஆவடிக்கு இடம் பெயர்ந்தார்.

சென்னையில் சினிமா பார்ப்பது, அது பற்றி நண்பர்களுடன் விவாதிப்பது. கதை எழுதுவது என்று துரை ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பத்தாம் வகுப்புக்கு மேல் அவர் படிக்கவில்லை.

மகன் இப்படி சினிமா நினைவாக இருக்கிறானே என்று ஆத்திரப்பட்ட அவரது தந்தை, ஒரு நாள் அவரை கண்டித்தார். அதனால், கோபத்துடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டுக்கு துரை சென்றார். அங்கிருந்தபடி சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்.

துரையின் சகோதரி மருதநாயகம் என்பவரின் மருத்துவமனையில் பணியாற்றி இருக்கிறார். அங்கு மருத்துவரை பார்க்க இயக்குநர் யோகானந்த் செல்வதுண்டு. அவரைப் பற்றி தெரிந்து கொண்ட துரையின் சகோதரி, தனது தம்பியின் சினிமா ஆர்வத்தை அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

“முதலில் சினிமா பற்றிய புரிதல் உன் தம்பிக்கு தேவை. அதை வளர்த்துக் கொள்ளட்டும்” என்று ரேவதி ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் எஞ்சினியரிங் உதவியாளராக துரையை சேர்த்துவிட்டார் இயக்குநர் யோகான்ந்த்.

அங்கு வேலை பார்த்துக் கொண்டே அங்கு வரும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர்கள் என எல்லோரிடமும் நன்றாக பழகி நட்பை வளர்த்துக் கொண்டார் துரை. அந்த ஸ்டூடியோவில் துரைக்கு நடிகர் கல்யாண்குமாரின் நட்பு கிடைத்து அது அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

நடிகர் கல்யாண்குமார்தான் துரையை ஜி.வி.ஐயர் என்கிற இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரியம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். 

கல்யாண் குமார் மூலமாக தமிழ் மட்டுமல்லாது கன்னட படங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. இதனால், கன்னட மொழியும் நன்கு கற்றுக் கொண்டார்.

கன்னடத்தில் பணியும்போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் நூறாவது படமான ‘பாக்கியத பாகலு’ படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து துரைக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.

நடிகை பண்டரிபாய் நடிக்கும் படங்களுக்கும் துரை கதை எழுதி இருக்கிறார். இதனால், பண்டரிபாய், அவரது கணவர் ஆகியோரின் நட்பு அவருக்கு இருந்தது. அவர்கள் தமிழில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த போது, அந்தப் படத்தில் துரைக்கு வாய்ப்பு கொடுத்து இயக்குனராக அறிமுகப்படுத்தினார்கள். அந்தப் படம்தான், ‘அவளும் ஒரு பெண்தானே’.

ஒரு விலை மாது பற்றிய அந்த கதையில் நாயகியாக சுமித்ராவை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் துரை. அந்தப் படம் 1974-ம் ஆண்டு வெளியாகி,  அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

1978-ல் மட்டும் ரஜினிகாந்த் நடித்த ‘சதுரங்கம்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உட்பட நான்கு படங்களை இயக்கியிருந்தார் துரை.

இவருடைய படங்களில் பெண்களை பெருமைப்படுத்துவார். பெண்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர வைப்பார். அந்தப் படங்கள் இயல்பான படங்களாகவும் அமைந்திருக்கும்.

இவர் கதை எழுத ஹோட்டலில் அறை போடச் சொல்லிக் கேட்க மாட்டார். கடற்கரையில் அமர்ந்து கதை எழுதுவதுதான் இயக்குநர் துரைக்கு ரொம்பவும் பிடிக்கும். நேரம் போவதே தெரியாமல் கதை எழுதுவார். அப்படி ஒரு முறை கதை எழுதி முடித்த பிறகு கடைசி பஸ் போய்விட்டதை அறிந்தார். அதன் பிறகு ரிக்ஷா  பிடித்து வீட்டுக்கு திரும்பினார்.

அந்த ரிக்ஷாவில் வரும்போது அந்த ரிக்ஷாகாரனிடம் பேசிக் கொண்டு வந்தார் துரை. அந்த ரிக்ஷாக்காரர் சொன்ன தகவல்களை வைத்து ‘பசி’ படத்தின் கதையை உருவாக்கினார் துரை.

இதற்கு முந்தைய படமான ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தில் நடித்த ஷோபாவையே இந்தப் பசி படத்திலும் நடிக்க வைத்து இயக்கினார். அந்தப் படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

மேலும் அந்தப் படத்தில் நடித்த ஷோபாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருது பெற்று தந்தது. மத்திய, மாநில அரசுகளின் சிறந்த படத்துக்கான விருது தயாரிப்பாளருக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் டெல்லி கணேசனுக்கும் கிடைக்கக் காரணமாக இருந்தது.

அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த ‘நீயா’, ‘மரியா மை டார்லிங்’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் ‘நீயா’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘எங்க வாத்தியார்’ என்கிற படத்தையும் இயக்கினார்.

மோகன் நடித்த ‘கிளிஞ்சல்கள்’ படத்தை இயக்கி, அந்தப் படத்தின் மூலம் பூர்ணிமா ஜெயராமை தமிழில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் 175 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ‘கிளிஞ்சல்கள்’ படத்தை இந்தியில் இயக்கி இந்தி திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குநர் துரை, ‘பசி’ படத்தை இந்தியில் இயக்கி-தயாரித்து, தயாரிப்பாளராகவும் உயர்ந்தார்.

அடுத்து சிவாஜி கணேசன் நடித்த ‘துணை’ படத்தை தமிழில் இயக்கியவர், மலையாளத்தில் பூர்ணிமா ஜெயராம் நடித்த ‘வெளிச்சம் விதறுன்ன பெண்குட்டி’ படத்தை இயக்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கும் இயக்குநர் துரை, தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார்.

அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. பிலிம்பேர் பத்திரிகை சிறந்த இயக்குநருக்கான விருதினை ‘பசி’ படத்திற்காக வழங்கியது.

தேசிய திரைப்பட விருது விழா கமிட்டியில் உறுப்பினராகவும் இருந்துள்ள இயக்குநர் துரை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர், கமிட்டி உறுப்பினர் போன்ற பதவிகளையும் வகித்திருக்கிறார்.

சென்னை அருகேயிருக்கும் திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த இயக்குநர் துரை வயது மூப்பு காரணமாக இன்று காலையில் காலமானார்.

இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

– ஜி.பாலன்

Our Score