ஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் L.L.P. தயாரிப்பில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, விதார்த் நடிப்பில்… நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகியிருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, இன்று காலை சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய, வித்தியாச ‘மாணவரான’, நடிகர்-இயக்குநர் பார்த்திபன் தன் குருவின் குருவான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவை வித்தியாசமாக பாராட்டினார்.
பார்த்திபன் பேசுகையில், “நமது ‘இயக்குநர் இமயம்’, பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டு மொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எடுக்கவேண்டும்.
இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன். பாரதிராஜா ‘சிறந்த இயக்குநர்’ன்னு எல்லாரும் சொல்வாங்க. ‘சிறந்த மனிதர்’ன்னும் சொல்வாங்க.
ஆனால், நான் என்ன சொல்றேன்னா… பாரதிராஜா ஒரு சிறந்த ‘குரங்கு’. ‘குரங்கு’ – நான்கு எழுத்து. ‘கு’ – நல்ல குணவான், ‘ர’ – சிறந்த ரசனையாளர், ‘ங்’ – இங்கிதம் தெரிந்தவர், ‘கு’ – குவாலிட்டியானவர். இதுதான் அந்த ‘குரங்கு’க்கு அர்த்தம்…” என்றார்.
பார்த்திபன் மேலும் பேசும்போது, “இந்த படத்தின் கதாநாயகி, டெல்னா டேவிஸை எல்லோரும் நமது பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள். என் பக்கத்து வீட்டில் டெல்னா டேவிஸ் மாதிரி யாரும் அழகாக இல்ல. எனவே டெல்னா டேவிஸ் அவர்களே.. நீங்கள் என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை ‘என் பக்கத்து வீட்டு பொண்ணு’ன்னு பெருமையா சொல்லிப்பேன்…” என்றார்.