‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மாமகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘நேற்று இன்று’.
இதுவொரு முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே நடக்கும் ஆக்சன் மற்றும் அட்வென்சர் திரைப்படம். இப்படத்துக்கு ஏற்கெனவே ‘கூத்து’ என்றுதான் பெயர் வைத்திருந்தார்களாம். ஆனால், அந்தத் தலைப்பை ஏற்கெனவே ஒருவர் சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்ததால், ‘நேற்று இன்று’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டார்களாம்.
இதில் விமல், ரிச்சர்ட், நிதிஷ், பரணி, ஹரீஷ், ஜெமினி பாலாஜி, நந்தகி, அருந்ததி ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் பிரசன்னாவும் வருகிறார். தினேஷ்ஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரேஹான் இசையமைத்திருக்கிறார். சி.எஸ்.பிரேம் எடிட்டிங். தியாகராஜன் கலை இயக்கம் செய்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் பத்மாமகன். மாலதி தயாரிக்க, தணிகைவேல் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் ‘யு-ஏ’ சான்றிதழ் தருவதாகச் சொன்னார்களாம்.. ஆனால், அக்காட்சிகளை நீக்கினால், கதையின் ஓட்டம் பாதிக்கும் என்பதால் ‘ஏ’ சான்றிதழை பெருமையுடன் பெற்றுக் கொண்டாராம் இயக்குநர் பத்மாமகன்.
இவருடைய முந்தைய படமான ‘அம்முவாகிய நான்’ படமும் ஏ சர்டிபிகேட்டுதான். அப்போதும் வரிவிலக்கு கேட்டு அரசுக்குப் போகவில்லையாம்.. “தியேட்டரில் ஓடக் கூடிய சிறந்த படங்களுக்கு வரிவிலக்கு எதற்கு..?” என்கிறார் இவர்.. “அம்முவாகிய நான் வரிவிலக்கு இல்லாமலேயே 2 கோடி ரூபாயை லாபமாக பெற்றுக் கொடுத்தது. படத்தை நல்லபடியா எடுத்துக் கொடுத்தாலே போதும்…” என்கிறார் சந்தோஷமாக..
இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கிய கதையை சஸ்பென்ஸ் திகில் கலந்த கதையாகச் சொல்கிறார் இயக்குநர் பத்மாமகன். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிடுவதற்காக பேசச் சென்றபோது, “உங்க படம் ஏ சர்டிபிகேட்.. பேமிலி கூட்டம் வராது.. அதுனால எங்களுக்கு வேண்டாம்…” என்றார்களாம்.. “இத்தனைக்கும் அதே மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஓடிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி, தெலுங்கு படங்களெல்லாம் ‘ஏ’ சர்டிபிகேட் படங்கள்தான். அதுக்கெல்லாம் வரும் கூட்டம்.. தமிழ்ப் படத்துக்கு வராதுன்னு சாதிக்கிறாங்க ஸார்..” என்கிறார் வருத்தத்துடன்..
படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் வெளியீட்டு உரிமையை பெறவும் யாரும் முன் வரவில்லையாம். இதனால் படத்தையே கைவிட்டுவிடலாம் என்ற முடிவில் இருந்தபோதுதான் தயாரிப்பாளர் தணிகைவேல் முன் வந்து தனக்குத் தைரியமும், ஊக்கமும் கொடுத்து சொந்தமாகவே வெளியிடலாம் என ஏற்பாடுகளைச் செய்து உதவியதாகக் கூறினார். இந்தப் படம் ஜூன் 13 அல்லது 20 தேதிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.