full screen background image

“என் பெரியப்பாதான் ‘மருது’ படத்தின் நிஜமான  ஹீரோ..!” – இயக்குநர் முத்தையா  

“என் பெரியப்பாதான் ‘மருது’ படத்தின் நிஜமான  ஹீரோ..!” – இயக்குநர் முத்தையா  

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை என்.அன்புச்செழியன் தயாரித்துள்ள புதிய படம் ‘மருது’. இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஸ்ரீதிவ்யா ஹீரோயினாகவும் நடி்ததுள்ளனர். முத்தையா இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநரான முத்தையா அளித்துள்ள விரிவான பேட்டி இது..!

“நான் ‘கொம்பன்’ படத்தை முடித்தவுடன் தயாரிப்பாளர் அன்பு அண்ணன் என்னை அழைத்து ‘எனக்கு நீங்கள் ஒரு படத்தை இயக்கித் தர வேண்டும்’ என்று கேட்டார். அவர் என்னை அழைத்ததே எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி கலந்த விஷயம்தான்.

நான் அவரிடம் இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, ‘இதில் விஷால் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியதும் உடனேயே விஷாலின் கால்ஷீட்டை வாங்கி தந்தார். எனக்கும் விஷாலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கு முன்பாக மூன்று முறை நான் முயற்சித்தும் அது நடக்கவில்லை. இந்த முறை அது அண்ணன் அன்புச் செழியனின் உதவியால் நிறைவேறியுள்ளது.

 IMG_8810

‘மருது’ மண் மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படம். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதை. தாய், தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கை கொடுப்பது பாட்டியாகதான் இருக்கும்.

அது மகன் வழி வந்த பேரன் பேத்தியாக இருந்தாலும் சரி, மகள் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி.. நம்முடைய பெற்றோர்களை தாண்டி நம் பாட்டி நமக்கு வாங்கி கொடுக்கும் பொருட்கள்.. நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாட்டி, பேரன் என்ற தவிர்க்க முடியாத உறவைப் பற்றி பேசும் படம்தான் இந்த ‘மருது’.

படத்தின் கதைக் களம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எப்போதும் அந்தப் பகுதி மிகவும் செழிப்பாக அழகாக இருக்கும். அங்கேதான் முழு படத்தையும் உருவாக்கியிருக்கிறோம்.

????????????????????????????????????

உலகத்தில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடல்வாகு தெறிப்பாகத்தான் இருக்கும். எல்லா ஊரிலும் முட்டைகளை சுமக்கும் ‘லோடுமேன்’ என்பவர்கள் இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கைக்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள். அவர்களைப் பார்த்தால் நார், நாராக நல்ல வளத்தியாக, வயிறு என்ற ஒன்றே வெளியே தெரியாத அளவு இருப்பார்கள்.

ஆனால் அவர்களுடைய வேலை, காலை 10  மணிக்கு ஆரம்பித்தது என்றால் இரவு 10 மணிவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு லோடு மேன் கதாபாத்திரத்தில்தான் விஷால் நடித்திருக்கிறார். விஷாலின் உடல் அமைப்புக்கும், முக அமைப்புக்கும் ஏற்ற கதாபாத்திரம் இந்த ‘மருது’. விஷால் இந்தக் கேரக்டருக்கு மிகச் சரியாக பொருந்தியிருந்தார்.

விஷாலின் இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னுடைய சொந்த பெரியப்பாவின் கேரக்டரை எடுத்து கொண்டேன்.  நிஜத்தில் என்னுடைய பெரியப்பா வேலைக்கு செல்லும்போது சட்டை ஏதும் அணிந்திருக்கமாட்டார். ஆனால் இந்தப் படத்தில் விஷால், முண்டா பனியன் அணிந்திருப்பது போல் மாற்றியிருக்கிறேன்.

????????????????????????????????????

சிங்கத்தை நாம் பார்த்தாலே மிரட்டலாக இருக்கும், சிங்கத்துக்கு அப்படி ஒரு ஆஜானுபாகுவான தோற்றம் உண்டு. புலி, தன்மானம் உள்ள ஒரு மிருகம். அதனால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவ்விரு மிருகங்களின் உருவங்களையும் பச்சை குத்திக் கொள்ள விரும்புவார்கள். 

ஏனெனில் என் பெரியப்பாவும் அப்படித்தான் இருந்தார். அவர் தன் கையில் சிங்கத்தையும், நெஞ்சில் புலியையும் பச்சை குத்தியிருப்பார். நான் சிறு வயதில் இருந்தே அதைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

நாம் ஒரு நாள் திரைப்படம் இயக்கும்போது இதே போல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அப்படி என்னுடைய பெரியப்பாவை போன்ற ஒரு கதாபாத்திரமாகத்தான் இந்த ‘மருது’வை உருவாக்கியிருக்கிறேன். 

படத்தின் கதாநாயகி ஸ்ரீதிவ்யா. என்னுடைய முதல் இரு படங்களில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்தார். இந்தக் கதைக்கு ஸ்ரீதிவ்யாதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். அவரைப் பார்க்கும்போது நம்ம வீட்டுப் பெண் போலவே தோன்றும். இதுதான் ஸ்ரீதிவ்யாவை இதில் நாயகி ஆக்கிய காரணம்.

IMG_8276

என்னுடைய படத்தில் அனைத்து கேரக்டர்களுமே முக்கியமானதாகத்தான் இருக்கும். அந்த வகையில், விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் என படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம்தான். 

என்னுடைய  முந்தைய படங்களை போல் அல்லாமல் இந்தப் படத்தில் காதலுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் உள்ளது. காதல் காட்சிகள்  நிச்சயம் அனைவரும் ரசிக்கும்  வண்ணம்  இருக்கும். படத்தில் கதையை மீறி எந்த ஒரு விஷயம் இருக்காது. படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் முக்கிய இடம் பிடிக்கும்.

விஷால் போன்ற மாஸான ஒரு நாயகனை வைத்து கொண்டு சண்டை காட்சிகள் இல்லை என்றால் எப்படி..?  கதையில் எமோஷனல் காட்சிகள் இருக்கும்போது கண்டிப்பாக சண்டை காட்சிகளும் இருக்குமே.!? என்னுடைய நாயகனை லோடுமேனாக.. சாராசரி மனிதனாக காட்டியிருக்கிறேன். இதனால் படத்தில் நிச்சயமாக அதிரடி சண்டை காட்சிகள் உண்டு.

????????????????????????????????????

‘மருது’ டீசரில் விஷால் தன் வாயில் அருவாளை கடித்து கொண்டு வருவது போன்ற காட்சியுண்டு. நிச்சயம் அது எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு காட்சியாக இருக்கும்.

ஏனென்றால், நான் ஒரு காட்சியை எடுக்கும்போது ஒரு கடைகோடி ரசிகனாக இருந்துதான் அந்த காட்சியை இயக்குவேன். அதனால் எனக்குப் பிடிக்கும் காட்சி, நிச்சயம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இசையமைப்பாளர் இமானுடன் என்னுடைய முதல் படத்திலேயே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. மொத்தம் நான்கு பாடல்கள். நான்கு பாடல்களுமே வித்தியாசமாகவும், வெவ்வேறு வகையான பாடல்களாகவும் இருக்கும். நான் இசையமைப்பாளர் இமானுடன் பணியாற்ற விரும்பியதே இது போன்று வெரைட்டியான பாடல்கள் அவரிடத்தில் கிடைக்கும் என்பதால்தான். நான் நினைத்தது போலவே பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன.

படத்தில் ‘ஒத்தக் சடை ரோசா’ என்ற ஒரு பாடல் உண்டு. அது ‘கருப்பு நிறத்தழகி’ பாடல் போல் மிகப் பெரிய வெற்றி பெறும். இந்தப் பாடலை காட்சியாக படத்தில் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். ‘கருவக் காட்டு கருவாயா’ பாடல் கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இருக்கும். ‘அக்கா பெத்த ஜட்கா வண்டி’ என்னும் பாடல் கமர்ஷியல் விஷயங்கள் நிறைந்த அருமையான ஒரு பாடலாக இருக்கும். ‘சூறாவளிடா’ என்னும் ஒரு பாடல் உண்டு, அது ‘மருது’ என்னும் கதாபாத்திரம் எப்படிப்பட்டவன் என்பதை விவரிக்கும் ஒரு பாடலாக இருக்கும்.

????????????????????????????????????

படத்தின் 2 முதல் 3-வது ரீலில் இருந்து கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிவரையிலும் கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரம் நடிகர் சூரியுடையது. அவர் இப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். என்னுடைய முதல் இரண்டு படங்களின்போது சூரியின் கால்ஷீட் எனக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் அவரை இந்தப் படத்தில் மிகச் சரியாக உபயோகப்படுத்தியுள்ளேன்.

நான் நல்ல படம் எடுக்கிறேனா  என்று கேட்டால் எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால் நிச்சயம் தவறான படத்தை இயக்கவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். இந்த ‘மருது’வும் அதை போன்ற ஒரு படம்தான்.

அனுபவங்கள் கூட, கூட நாம் செய்து முடிக்கும் வேலையின் நாட்கள் குறைய வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பை நான் திட்டமிட்டதைவிட மிக விரைவாக முடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. நிச்சயம் இந்த ‘மருது’வை தமிழக மக்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்..” என்றார் இயக்குநர் முத்தையா.

Our Score