தனது புதுமையான கதை சொல்லல் மூலம் புதிய ‘திகில்’ மற்றும் ‘சஸ்பென்ஸ்-மிஸ்டரி’ வகை திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி. அதேசமயம், அவரது முதல் படமான ‘முந்தினம் பார்த்தேனே’ மெல்லிய காதல் கதை, அதுவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது.
தற்போது அவரது சிஷ்யரான கிருஷ்ணா பாண்டி இந்த அனைத்து வகை படங்களின் கலவையாக, தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘எம்பிரான்’ படத்தை ஒரு சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தை பஞ்சவர்ணம் ஃபிலிம்ஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.பஞ்சவர்ணம் மற்றும் வி. சுமலதா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தில் ரஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி.சந்திரமௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ப்ரசன் பாலா (இசை), எம்.புகழேந்தி (ஒளிப்பதிவு), டி.மோனோஜ் (எடிட்டர்), மாயவன் (கலை), தீனா-விஜய் சதீஷ் (நடன இயக்குனர்), டான் அசோக் (சண்டை பயிற்சி), கபிலன் வைரமுத்து (பாடல்கள்) மற்றும் ஜெய் (ஆடை) ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்தப் படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் பஞ்சவர்ணம், “உண்மையில், என்னை ஒரு தயாரிப்பாளராக அல்லாமல், ஒரு பார்வையாளராக உடனடியாக கவர்ந்த விஷயம் காதல் மற்றும் திகில் வகை படங்கள்தான்.
‘காதல்’ என்பது வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். ‘திரில்லர்’ என்பது உற்சாக உலகத்துக்கு நம்மை அழைத்து செல்வது. குறிப்பாக இந்த அம்சங்கள். ‘சஸ்பென்ஸ்’ உடன் கலக்கும்போது, அது திரைப்படம் பார்க்கும் அன்பவத்தையோ, அல்லது நாவல் வாசிக்கும் அனுபவத்தையோ தீவிரப்படுத்துகிறது. இயக்குநர் கிருஷ்ணா பாண்டி மிகவும் திறமையானவர், அவர் கதை சொன்னபோதே எங்களை கவர்ந்துவிட்டார்…” என்றார்.