full screen background image

“என் ராசாவின் மனசிலே படமெல்லாம் ஒரு கதையா..?” – நடிகர் சத்யராஜ் கேட்ட கேள்வி..!

“என் ராசாவின் மனசிலே படமெல்லாம் ஒரு கதையா..?” – நடிகர் சத்யராஜ் கேட்ட கேள்வி..!

1991-ம் ஆண்டு ஏப்ரல் 13 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. நடிகர் ராஜ்கிரண் முதன்முதலாக ஹீரோவாகவும், மீனா தமிழில் முதல்முறையாக ஹீரோயினாகவும் நடித்திருந்த இந்தப் படம் இளையராஜாவின் இசைக்காகவும், படத்தின் கதைக்காகவும் மிகப் பெரிய ஹிட்டடித்தது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார்.

இந்தப் படம் பற்றிய பல விசயங்களை நேற்று முன்தினம் மாலையில் வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘பார்க்க தோணுதே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது பகிர்ந்து கொண்டார்.

அது இங்கே :

“என் ராசாவின் மனசிலே’ படத் தயாரிப்பு சமயத்தில் என்னையும் ராஜ்கிரணையும் ‘கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது’ என்றார்கள். அப்போது ராஜ்கிரண் பெரிய, பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை கதை சொல்ல அழைத்துச் சென்றார்.

en-raasavin-manasilea-movie-poster

விஜயகாந்திடம் அந்தக் கதையைச் சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். ‘இரவுப் பூக்கள்’  படத்தில் சத்யராஜ் நடித்துக் கொண்டிருந்தபோது அவரிடத்தில் இதே கதையைச் சொன்னேன். அவரும் மறுத்துவிட்டார். அவர்களுக்கு என் மேல் நம்பிக்கையே இல்லை.  

சத்யராஜ் ‘இதெல்லாம் ஒரு கதையா..?’ என்றார். ‘இப்படி சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா..?  நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன்..’ என்றார். ‘பாரதிராஜா எடுக்கிறாரே..?’ என்றேன் ‘அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா..?’ என்றார். நான் புதுமுகம் என்பதால் அப்போது யாரும் என்னை நம்பவில்லை. இப்படிப் பலவற்றை கடந்துதான் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தை எடுத்தேன்.

எல்லா அறிமுகங்களும் இப்படிப்பட்ட அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொண்டு பல போராட்டங்களை கடந்துதான் மேலே வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும்கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று.!? ஆனால்  அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும்.

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நான் முதலில் எழுதியிருந்த கதையில் ‘பெண் மனசு ஆழமுன்னு’ என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை. ஆனால் இளையராஜாவை அந்தப் பாடலை இசையமைத்துக் கொடு்த்தார். ‘இதற்கேற்ற காட்சிகள் இல்லையே என்றேன். ‘போய் எடு’ என்றார். 

அப்போது என்னவோ என் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத்தான் எனக்கு தோன்றியது. நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் நினைப்போம். அப்படித்தான் அன்றும் நாம் நினைத்தேன். ஆனால் அவருடைய அந்தப் பாடல்தான் அந்தப் படத்திற்கே மிகப் பெரிய பலமானது.” என்றார்.

Our Score