இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது..!

இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது..!

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது இந்த ஆண்டு பிரபல மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குநரான கே.விஸ்வநாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று டெல்லியில் மத்திய அரசு அறிவித்தது.

காசிநாதுனி விஸ்வநாத் என்ற இயற்பெயருடைய கே.விஸ்வநாத் ஆந்திராவில் 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று கிருஷ்ணா நதிக்கரையோரம் இருக்கும் பேடபுள்ளிவாறு என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர்.

மிக இளம் வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்தவர், ஆரம்பத்தில் சென்னையில் இருந்த ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் சவுண்ட் என்ஜீனியராகத்தான் வேலை செய்திருக்கிறார். பின்பு படங்களை இயக்க வேண்டும் என்று விரும்பி கே.பாலசந்தர் மற்றும் கே.பாபு ஆகியோரிடம் உதவியாளராக சேரவும் விரும்பியிருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பில்லாமல் ராம்நாத்திடம் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

1965-ம் ஆண்டு ‘ஆத்ம கெளரவம்’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் எடித.நாகேஸ்வரராவ் ஹீரோவாக நடித்திருந்தார். அன்றிலிருந்து அவர் கடைசியாக இயக்கம் செய்த 2010-ம் ஆண்டு வரையிலும் 42 தெலுங்கு படங்களையும், 10 ஹிந்தி படங்களையும், ஒரேயொரு மலையாளப் படத்தையும் இயக்கியிருக்கிறார். தமிழில் இவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

ஆனால் இவரது புகழ் பெற்ற தெலுங்கு படங்கள் பலவும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இன்றுவரையிலும் மிகப் புகழ் பெற்றவையாய் திகழ்கின்றன. 1979-ல் வெளிவந்த ‘சங்கராபரணம்’ தமிழில் இதே பெயரிலேயே டப் செய்யப்பட்டு வெளியாகியது.

1983-ல் தெலுங்கில் இவர் இயக்கிய ‘சாகர சங்கமம்’ படம் தமிழில் ‘சலங்கை ஒலி’யாக வெளிவந்து சக்கைப் போடுபோட்டது.

1985-ல் இவர் தெலுங்கில் இயக்கிய ‘ஸ்வாதி முத்யம்’ படம் தமிழில் ‘சிப்பிக்குள் முத்து’வாக வெளியாகி வெற்றி பெற்றது.

1995-ம் ஆண்டு இவர் தெலுங்கில் இயக்கிய ‘சுவர்ண சங்கல்பம்’ என்ற படமே ‘பாசவலை’ என்கிற பெயரில் தமிழில் வெளியானது.

நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் இவர் என்பதால் கமலுக்காகவே அவருடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்துவது போல் இவர் கதை எழுதி இயக்கியிருந்த ‘சலங்கை ஒலி’யும், ‘சிப்பிக்குள் முத்து’வும், ‘பாசவலை’யும் கமல்ஹாசனுக்கு இன்றளவும் பெருமை சேர்க்கும் படங்களாக இருக்கின்றன.

2010-க்கு பின்பு வயோதிகம் காரணமாக படங்களை இயக்காமல் இருந்தவர், நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் இதுவரையிலும், ‘குருதிப் புனல்’, ‘காக்கைச் சிறகினிலே’, ‘முகவரி’, ‘பகவதி’, ‘புதிய கீதை’, ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’, ‘உத்தமவில்லன்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் இயக்கிய ‘சங்கராபரணம்’ திரைப்படம் 1981-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பெசான்கான் சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு பெற்றது.

இவர் இயக்கிய 1980-ல் ‘சங்கராபரணம்’, 1982-ல் ‘சப்தபடி’, 1987-ல் ‘ஸ்வாதி முத்யம்’, 1990-ல் ‘சுத்ரதருலு’, 2005-ல் ‘ஸ்வரூபாஷிகேம்’ ஆகிய படங்கள் தேசிய விருதினைப் பெற்றன.

1989-ல் இவருடைய கதையில் வெளியான ‘ஈஸ்வர்’ திரைப்படம் சிறந்த கதைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றது.

இதுவரையிலும் 8 முறை சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த சாதனையாளருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

சிறந்த இயக்குநருக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை 2 முறையும், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான நந்தி விருதை ஒரு முறையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான நந்தி விருதை ஒரு முறையும், சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதை ஒரு முறையும் பெற்றிருக்கிறார் இயக்குநர் கே.விஸ்வநாத்.

இந்திய அரசு இவருக்கு 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

பொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி(1974), பய்டி ஜெய்ராஜ்(1980), எல்.வி.பிரசாத்(1982), பி.நாகிரெட்டி(1986), நாகேஸ்வரராவ்(1990), டி.ராமாநாயுடு(2009) ஆகியோர்களுக்கு பின்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 7-வது நபராக தாதா சாஹேப் பால்கே விருதினை பெறுகிறார்  இயக்குநர் கே.விஸ்வநாத்.

தாதாசாஹேப் பால்கே விருது தங்கத் தாமரை பட்டயத்துடன், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் கொண்டது.

வரும் மே 3-ம் தேதி புதுதில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், இந்த விருதினை கே.விஸ்வநாத் அவர்களுக்கு வழங்குவார்கள்.

மூத்த கலைஞர், இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்..!