‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது 2 நாட்கள் பிரேக் விட்டுத்தான் படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறதாம்..
இப்படித்தான் இன்றைக்கு 2 நாள் விடுமுறைக்கு பின்னர் ஹைதராபாத் அருகே ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் மின்னலாய் ஒரு செய்தி இணையத்தளங்களில் பரவத் தொடங்கின..
அது.. “சூப்பர் ஸ்டார்’ ரஜினி இன்றைக்கு நடந்த சண்டை காட்சியில் டூப் இல்லாமல் தானே நடிக்கிறேன் என்று சொல்லி அவ்வாறு நடிக்கும்போது திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். உடனேயே மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். மருத்துவர்கள் அவரை 2 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளதாக” தகவல்கள் பரவின.
உண்மை அமைதியாக நிற்கும்போது பொய், ஊரையே சுற்றி வரும் என்பார்கள்.. இந்த விஷயத்திலும் அதுவும் நடந்துவிட.. வேறு வழியில்லாமல் ‘லிங்கா’ பட யூனிட்டாரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
சற்று முன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.. “இது முற்றிலும் தவறான செய்தி.. ‘நம்முடைய சூப்பர் ஸ்டார்’ நல்ல நிலைமையில்தான் இருக்கிறார். உற்சாகத்துடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நேரத்தில் இது போன்ற அடிப்படை ஆதாரம்கூட இல்லாமல் செய்திகள் வருவது வருத்தத்திற்குரியது.. ரசிகர்கள் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம்..” என்று கூறியிருக்கிறார்.
இந்த ஷூட்டிங் முடியறதுக்குள்ள இன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ..?