1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘அவ்வை சண்முகி’யில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனும் நடித்திருந்தார். ஆனால் அவருடைய கேரக்டருக்கு முதலில் நடிகர் திலகம் சிவாஜியிடம்தான் பேசினோம். ஆனால் அவர் தன்னால் இ்பபோதைக்கு நடிக்க முடியாது. ஜெமினியை நடிக்க வையுங்கள் என்று சொன்னதால்தான் ஜெமினி கணேசனை நடிக்க வைத்ததாக அந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.
நேற்று மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ‘ரெமோ’ படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் பேசும்போது ரவிக்குமார் இது பற்றியும் குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பாக மேலும் பேசும்போது, “இங்கே மேடையில் ஏறுவதற்கு முன்பாக சதீஷ் என்னிடம் பேசும்போது ஒரு விஷயத்தைச் சொன்னான். அதை இப்போது சொல்வதில் ஒண்ணும் பிரச்சினையிருக்க போவதில்லை. அதனால் சொல்கிறேன்.
‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் நடிப்பதாக இருந்தது.
நான்தான் போய் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். அப்போ அவரோட கேரக்டர் ஸ்கெட்ச் ரொம்ப ஜென்யூனான பெர்ஸன். ஜொள்ளுவிடுற மாதிரியெல்லாம் இல்லை. ரொம்பக் கண்ணியமாத்தான் அமைச்சிருந்தோம்.
அந்த நேரத்துல திடீர்ன்னு சிவாஜி ஸாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரில இருந்தார். அப்புறம் திரும்ப வீட்டுக்கு வந்தப்புறம் கேட்டோம்.
அப்போ அவர்தான் சொன்னார்.. ‘வேணாம்ப்பா.. உடம்பு ஒரு மாதிரியா இருக்கு. ஒத்துழைக்கலை.. நம்ம ஜெமினி இருக்கானே அவனை வைச்சு பண்ணுங்கப்பா.. அவன் அழகா இருந்தா போதும்.. ஆம்பளை, பொம்பளைன்னுல்லாம் பார்க்க மாட்டான்.. எல்லாரையும் லவ் பண்ணுவான்..’ என்று ஜெமினியை சிபாரிசு செய்தார். பின்புதான் ஜெமினி கணேசன் ஒப்பந்தமாகி அவருக்காகவே அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் திருத்தப்பட்டது..” என்றார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
நடிகர் திலகம் செய்தது சரியானதுதான். அது அவர் நடிக்க வேண்டிய கேரக்டரே இல்லை. ஜெமினிக்காகவே உருவாக்கியது போலத்தான் இருந்தது..! இதனை இவன் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வது நல்ல கலைஞர்களால்தான் முடியும். நடிகர் திலகம் ஒரு தீர்க்கதரிசிதான்..!