full screen background image

“என் படம் நி்சசயம் மொக்கையாக இருக்காது…” – இயக்குநர் கேபிள் சங்கரின் தன்னம்பிக்கை பேட்டி..!

“என் படம் நி்சசயம் மொக்கையாக இருக்காது…” – இயக்குநர் கேபிள் சங்கரின் தன்னம்பிக்கை பேட்டி..!

பிரபல பதிவரான கேபிள் சங்கர் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

அவரது வலைத்தளமான www.cablesankaronline.com-ல் இடம் பெற்றிருக்கும் பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் இணையவுலகில் மிகப் பிரபலமானவை. அதேசமயம் கறாரானவை. வெட்டு ஒன்று; துண்டு இரண்டு ரகத்திலானவை.

அதே பாணியில் அவருடைய முதல் படமான ‘தொட்டால் தொடரும்’ படம் பற்றி அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

Cable-Sankar-still

கேள்வி : வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா..? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்துவிட முடியுமா..?

கேபிள் சங்கரின் பதில் : நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு, ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் கடைசியாக படம் இயக்க வந்திருக்கிறேன். ஒரு திரைப்பட விமர்சகனாக வெற்றி பெற்று, அந்த அடையாளமும் நிலைபெற்றுவிட்டதால்தான் என்னை நோக்கி இப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன.

கேள்வி : விமர்சகர்கள் எல்லாரும் படமெடுக்க முடியுமா..? சுப்புடுகள் விமர்சிக்கலாம். கச்சேரி செய்ய முடியுமா..?

கேபிள் சங்கரின் பதில் : நியாயமான கேள்விதான். எல்லா விமர்சகர்களுமே விமர்சகர்கள் என்ற அந்த ஒரு தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு படம் இயக்கிவிட முடியாது. ஆனால் விமர்சகர்கள் இயக்குநர்களாகியும் இருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் புரட்சிகரமான படங்களை இயக்கியவர்கள் பலரும் முன்பு விமர்சகர்களாக இருந்தவர்கள்தான்.

கேள்வி : சினிமா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?

கேபிள் சங்கரின் பதில் : நான் வலையுலகில் திரைப்பட விமர்சகன் என்கிற அழுத்தமான அடையாளத்தைப் பெற்றிருப்பதால்தான் இந்தக் கருத்து எழுகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல. நான் முன்பே சொன்ன மாதிரி திரைப்படத் துறையின் பல துறைகளில் ஈடுபட்டு அனுபவ அறிவைப் பெற்றிருக்கிறேன்.

தியேட்டர் நடத்தியிருக்கிறேன். படங்களை விநியோகம் செய்துள்ளேன். பல திரைப்படங்களின் கதை விவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். வசன உதவி, திரைக்கதை உதவி என்று திரைப்படங்களில் பணியற்றிய அனுபவமும் எனக்குண்டு. உதவி இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என்று பல தரப்பட்ட பணிகளையும் செய்துள்ளேன். ஏன் போஸ்டர்கூட ஒட்டியுள்ளேன்.

இன்னொரு பக்கம் சிறுகதைகள். குறுநாவல், குறும் படம். பாடல் இயற்றல், பாடகர் இப்படி பலவித அனுபவங்களும் எனக்குண்டு. ஆகவே என்னை வெறும் விமர்சகனாகப் மட்டுமே யாரும் பார்க்க வேண்டாம்.

கேள்வி : பல படங்ளை இரக்கமின்றி விமர்சனம் செய்த நீங்கள், உங்களது படத்தை மற்றவர்கள் அதேபோல் விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள்..?

கேபிள் சங்கரின் பதில் : நான் படத்தைத்தான் விமர்சனம் செய்துள்ளேன். தனிப்பட்ட யாரையும் நான் விமர்சனம் செய்ததில்லை. முதலில் இந்த அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு. என் படம் பற்றிய விமர்சனத்தை, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்னால் விமர்சிக்கப்பட்டவங்கள் பலரும் இப்போதும் என் நண்பர்களாக இருப்பவர்கள்தான். நான் விமர்சித்த இயக்குநரின் அடுத்த படத்தில் நானே பணியாற்றியுள்ளேன். விமர்சனத்தை  ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எனக்குண்டு.

கேள்வி : படம் இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இப்போது எந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறீர்கள்..?

கேபிள் சங்கரின் பதில் : என் படத்தின் விளம்பரம் வந்த போதும், போஸ்டர் வந்தபோதும், ஒற்றைப் பாடல் வெளியானபோதும் யாரும் விமர்சிக்கவில்லை. பலரும் பாராட்டினார்கள். இப்போதும் அதே நம்பிக்கையில்தான் காத்திருக்கிறேன்.

கேள்வி : படத்தின் கதை என்ன?

கேபிள் சங்கரின் பதில் : தேவையில்லாத ஒரு விஷயத்தில் கதாநாயகி தெரிந்தே சிக்கிக் கொள்கிறாள். அதிலிருந்து அவள் தப்பிக்க கதாநாயகன் எப்படி உதவுகிறான் என்பதே கதை. இதுவொரு உண்மைச் சம்பவத்தின் தழுவல்.

கேள்வி : உங்கள் படத்தின் கதையைப் போல, நீங்களும் தெரிந்தே பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘தொட்டால் தொடரும்’ தலைப்பை எடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளீர்களே?

கேபிள் சங்கரின் பதில் : நாவல் வேறு மீடியம். சினிமா வேறு மீடியம். எத்தனையோ பாடல் தலைப்புகள், நாவல்களாக வந்துள்ளன. அப்போது யாரும் பேசவில்லை. சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ கதையின் தலைப்பு படமாக வந்தது. அதே கதையை படமாக எடுத்தபோது, ‘ஆனந்த தாண்டவம்’ என்றுதான் பெயர் வைத்தார்கள்.

‘தொட்டால் தொடரும்’ படத்தைப் பொறுத்தவரை அது பற்றி படமெடுக்கும் முன்பே பட்டுக்கோட்டை பிரபாகரிடம் சொன்னேன். முடித்த பிறகும் சொன்னேன். தயாரிப்பாளர் படத்தின் கதையைக் கேட்டார். முன்று தலைப்புகள் சொன்னேன். இதுதான் பொருத்தமாக இருப்பதாக கூறி பதிவு செய்து விட்டார்.

கேள்வி : உங்கள் படம் மொக்கை படமாக இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்..?

கேபிள் சங்கரின் பதில் : என் படத்தை சில வகைகளில் வித்தியாசம் உள்ள படம் என்று கூறலாம். நிச்சயம் மொக்கை படமாக இருக்காது.

கேள்வி : எல்லாப் படங்களை பற்றிப் பேசும்போதும் வித்தியாசம்  என்றுதானே கூறுகிறார்கள்..?

கேபிள் சங்கரின் பதில் : என் படத்தைப் பற்றி  நானே பெரிதாகக் கூற விரும்பவில்லை. ஆனால் நல்ல எண்டர்டெய்னராக இருக்கும். போரடிக்காது. நான்  பல்வேறு வகையினர், பல தரப்பு   நண்பர்களிடம் படத்தைப் போட்டுக் காட்டியுள்ளேன். யாரும் குறை சொல்லவில்லை.. என்னைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்த்தால் நிச்சயமாக படம் பிடிக்கும். என் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து வருமளவுக்கு நான் இன்னும் வளரவில்லை.

படம் பார்த்த இயக்குநர் பி.வாசு. மூத்த நடிகை எம்.என்.ராஜம் போன்றோர், ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்தோம்’ என்றார்கள். அதுவே எனக்கு திருப்தியாக உள்ளது.

கேள்வி : இது எந்த வகையான படம்?

கேபிள் சங்கரின் பதில் : லவ் வித்  த்ரில்லர். ஆக்ஷனும் இருக்கும். நிச்சயமாக க்ளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். எதிர்பாராதபடி இருக்கும்.

கேள்வி : படம் இயக்கும்போது விமர்சகராக இருந்தீர்களா..? அல்லது வியாபாரியாக இருந்தீர்களா..? .

கேபிள் சங்கரின் பதில் : சினிமா என்பது  வருமானத்தில்  நிச்சயமற்ற தொழில்தான். சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் வியாபாரம்தான். தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை. இதில் நான் விமர்சகராகவும் இல்லை. வியாபாரியாகவும் இல்லை. எனக்குள் இருக்கும் படைப்பாளி சொன்னபடிதான் எடுத்துள்ளேன்.

கேள்வி : இந்தப் படத்தினால் யாருக்கு நல்ல பெயர் கிடைக்கவிருக்கிறது..?

கேபிள் சங்கரின் பதில் : சினிமாவே ஒரு டீம் ஒர்க்தான். நாயகன் தமன், நாயகி அருந்ததி, காமெடியன் பாலாஜி இப்படி அவரவர் வேலையில் அவரவர் அளித்திருக்கும் பங்களிப்பின்படி நல்ல பெயர் நிச்சயமாகக் கிடைக்கும்.  மிகப் பெரிய பெயரும், புகழும் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகருக்கே கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Our Score