தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை மிரட்டுகிறார்கள் என்றும், இது தொடர்ந்தால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மேலும் உடையும் என்று தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானதுதான்.
அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன்.
புது சங்கங்கள் உருவாவதென்பது கால மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டது. ஒன்று பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து கொள்கைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது மற்ற சங்கங்களுடன் கலந்து செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதை விடுத்து மற்ற சங்கங்களையும் அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, இவை சார்ந்த துறையையே மொத்தமாக நிர்மூலமாக்கிவிடும்.
இதற்கு சான்றாக TFPC புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. இது காலம்வரை TFPC இதற்கு இணையான இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து தயாரிப்பாளர்களுக்கு சேவையாற்றி வந்துள்ளது. இதை இந்த புதிய நிர்வாகம் கற்றுக் கொள்ள வேண்டும்.
TFAPA-ல் உள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இந்த 3 சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர். பதவி, அதிகாரம் என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால், சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு சேவை புரியத்தான் இருக்கின்றன. இதை TFPC திரும்பவும் உணர வேண்டும்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு TFPC என்றுமே ஒரு தாய்ச் சங்கமாகும். சமீபத்தில் TFAPA உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து மிரட்டியும், எங்களது சங்க நிர்வாகிகளின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் TFPC இன்னும் பல கூறுகளாக உடைந்து அதன் பொலிவை இழக்கக் காரணமாக தற்போதைய நிர்வாகம் இருக்கும் என்பதையும், என் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும்பட்சத்தில் அதை முதல் ஆளாக எதிர்த்து நிற்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.