ஸ்ரீமகானந்தா சினிமஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’.
இயக்குநர் எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே… அனைவருக்கும் வணக்கம்.
இங்கே தயாரிப்பாளர் பேசும்போது தான் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருப்பதாக சொன்னார். கஷ்டப்பட்டு வந்தால்தான் இதையெல்லாம் அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு, தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன்தான் இந்த பாரதிராஜா.
சினிமா லவ்வபல் வேர்ட். இது யாரையும் கைவிடாது. நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கன்னா.. அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும்போது அதில் ஒரு தாக்கம் வேண்டும்.. அப்படி இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
இந்தப் படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும்போது தன்னடக்கத்தோடு பேசினார். அதுதான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள். ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அதைக் கக்கத்தில்தான் வைக்க வேண்டும். நான் அப்படித்தான் செய்வேன்.
என்னை ‘இயக்குநர் இமயம்’, அப்படி இப்படினு சொல்லுவாங்க. அது அவங்களுக்குத்தான். அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்.

இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும். ஆனால், இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லாருமே நம்முடைய சகோதரர்கள்தான். எனவே அனைத்தையுமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
இதில் நடித்திருக்கும் பசங்களைப் பார்க்கும்போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. படம் நம்ம ‘அலைகள் ஓய்வதில்லை’ போல இருக்குமோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும்போல தோன்றுகிறது.
உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள்.. என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
இதில் தயாரிப்பாளரின் மகனும் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அவருடைய அப்பாவும், அம்மாவும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப் பெரிய விஷயம்.
நிலம், நீர், காற்று இந்த மூன்றும்தான் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு நம்முடைய அப்பா, அம்மாதான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே, அவர்களை நாம் எந்தத் தருணத்திலும் மறக்கக் கூடாது.
இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம். நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். படத்தின் பெயர் ‘கம்பெனி’ என்பதால் இந்தப் படம், ‘கிழக்கிந்திய கம்பெனி’ போல மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா இசை குறுந்தகடை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.









