பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?

பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?

“இயக்குநர் பாலா என்றொருவர் இருந்தாரே.. அவர் இப்போது என்ன செய்கிறார்..?” என்ற கேள்வி பல பத்திரிகையாளர்களிடத்தில் சினிமா ரசிகர்களால் தற்போது கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாலா கடைசியாக இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் சமீபத்தில்தான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியதால் பாலாவுக்கும், விக்ரமுக்குமான பல வருட நட்பு சட்டென்று முறிந்தது. தன்னால் வளர்ந்த விக்ரம், தயாரிப்பாளருடன் சேர்ந்து தன்னைப் புறக்கணித்ததை பாலாவால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

இதையடுத்து விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த தனது அடுத்த ஸ்கிரிப்ட்டை தூக்கியெறிந்த பாலா.. வேறொரு கதையை தற்போது தயார் செய்துவிட்டாராம். நடிகர்கள் தலையசைத்துவிட்டால் ஷூட்டிங்கிற்குப் போகலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் நடிகர்கள்..?

தற்போதைக்கு தன்னை குருவாக நினைத்து மரியாதை காட்டும் அதர்வாவிடம் இது பற்றிப் பேசியிருக்கிறாராம் பாலா. கூடவே படத்தில் உதயநிதி ஸ்டாலினும் இருக்கப் போகிறார் என்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் வேடத்திற்கு முன்பு ஆர்யா மற்றும் சூர்யாவிடம் பேசிப் பார்த்தார்களாம். அவர்கள் மறுத்துவிடவே உதயநிதியிடம் சான்ஸ் போயிருக்கிறது.

பாலாவின் திரைப்படம் என்றால் படம் முடியவே ஒரு வருடத்திற்கு மேலாகும்.. கெட்டப்பை மாற்றவே முடியாது என்பதால் கைவசம் இருக்கும் படங்களையெல்லாம் முடித்துவிட்டு வருவதாக அதர்வா சொல்லியிருப்பதாகத் தகவல். இந்தப் படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கப் போவதாகவும் கூடுதல் தகவல்.

எப்படி, எந்த ரூபத்தில், எந்தக் கோலத்தில் வந்தாலும் பாலாவின் ரசிகர்கள் அவரை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Our Score