full screen background image

பாலாவின் அடுத்தப் படத்தில் மூன்று ஹீரோக்களா..?

பாலாவின் அடுத்தப் படத்தில் மூன்று ஹீரோக்களா..?

இந்தக் கொரோனா காலத்தில் எந்தப் பேச்சும், மூச்சும் இல்லாமல் இருந்த ஒரே இயக்குநர் பாலாதான்.

அவர் இயக்கிய ‘வர்மா’ படம் ஓடிடியில் வெளியானபோதுகூட அவர் தரப்பில் ஒரு சிறிய முணுமுணுப்புகூட எழவில்லை.

அவர் அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டில் மும்முரமாக உள்ளார் என்றும், அதை முடித்துவிட்டுத்தான் வெளியில் வருவார் என்றும் செய்திகள் உலா வந்தன.

இப்போது அதையும் தாண்டி அந்தக் கதைக்கேற்ற நாயகர்களையே அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

அந்த மூன்று ஹீரோக்களும் சூர்யா, ஆர்யா, அதர்வா என்கிறது இப்போதைய தகவல். இந்த மூவருமே பாலாவின் இயக்கத்தில் ஏற்கெனவே நடித்த அனுபவம் உள்ளவர்கள். அதனால் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லைதான்.

ஆனாலும் ஆர்யா, அதர்வா பரவாயில்லை.. கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்து கொள்வார்கள். ஆனால், சூர்யா எங்கேயிருந்து வருவார் என்று தெரியவில்லை. அவரோ வரிசையாக திரைப்படங்களைக் கையில் வைத்திருக்கிறார். இப்போது ஜோதிகாவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசலு’க்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதில் கொஞ்சம் கேப் கிடைத்தாலும் தப்பிக்க முடியாது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பாண்டிராஜின் படமும் சூர்யாவுக்காகக் காத்திருக்கிறது.

இதற்கிடையில் பாலாவிடம் போக வேண்டும். அங்கே இருக்கிற ஒரே சிக்கல்.. படம் எப்போது முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தப் படத்துக்காக போடப்படும் கெட்டப்பையும் மாற்ற முடியாது. இடியாப்பச் சிக்கல் என்பது இதுதான்..!

சூர்யா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

Our Score