இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மொத்தக் கதைத் திருட்டுக்களும் வெளியானது..!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மொத்தக் கதைத் திருட்டுக்களும் வெளியானது..!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்தின் கதைப் பிரச்சினை ஒரு வழியாக நீதிமன்றத்தின் மூலமாக முடிவடைந்தாலும், அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் இது போன்ற கதைத் திருட்டு பிரச்சினைகள் எழுந்ததாக தமிழ்த் திரைப்படவுலகின் உதவி இயக்குநர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இது பற்றி அவர்கள் தரப்பில் கூறிய செய்திகள் பல வாட்ஸ் அப் குழுமங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன.

முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படம் ‘தீனா.’ இந்தப் படத்தின்  கதை  R.நித்யகுமார் என்ற இயக்குநரின் கதை. இவர் K.சுபாஷ், S.J.சூர்யா, ஆகியோரிடம் இணை இயக்குநராகவும்.. பிறகு நடிகர் அருண் விஜய் நடித்த, ‘வேதா’திரைப்படத்தையும் இயக்கியவராவார்.

முருகதாஸ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ‘ரமணா’. இந்தப் படத்தின் கதை நந்தகுமார் என்ற இயக்குநரின் கதை. இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகர், மற்றும் P.வாசுவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். விஜயகாந்த் நடித்த ’தென்னவன்’ திரைப்படத்தை இயக்கியவர்.

இந்த நந்தகுமார், K.T.குஞ்சுமோனின் மகன் ஹீரோவாக நடித்த ‘கோட்டீஸ்வரன்’ என்ற படத்தை இயக்கும்போது, A.R.முருகதாஸ் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முருகதாஸ் இயக்கிய மூன்றாவது தமிழ்த் திரைப்படம் ‘கஜினி.’ இந்தப் படத்தின் கதை ‘மெமொன்டோ’ என்ற ஒரு ஆங்கில படத்திலிருந்து திருடப்பட்டது.

இதே படம் ஹிந்தியிலும் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வெளியானது.

a.r.murugadoss-2

‘மெமொண்டோ’ படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான கிறிஸ்டோபர் நோலன் இதைக் கேள்விப்பட்டு “யாரோ ஒரு சில்லறைப் பய என் படத்தை காப்பியடிச்சு ஹிந்தில படம் எடுத்திருக்கானாமே..?” என்று நடிகர் அனில் கபூரிடம் கேட்டதாக அவரே ஒரு டிவி பேட்டியில் கூறியிருக்கிறார்.

முருகதாஸ் இயக்கிய ‘ஏழாம் அறிவு’ படத்தின் கதைக் கருவையும், சில காட்சிகளையும் தான்தான் முருகதாஸிடம் சொன்னதாக ‘அறம்’ படத்தின் இயக்குநரான கோபி நயனார் கூறியிருக்கிறார்.

முருகதாஸ் தெலுங்கில் நேரடியாக இயக்கிய ‘ஸ்டாலின்’ படத்தின் கதையும், ‘கஜினி’ படத்தில் இடம் பெற்ற காதல் போர்ஷனும் மணிவண்ணன், சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இயக்குநர்களிடம் இணை இயக்குனராய் இருந்த சந்திரசேகரின் சொந்தக் கதையாம். இதுவும் இவரிடமிருந்து அநியாயமாய் திருடப்பட்டது என்கிறார்கள்.

முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தின் கதை வாசு என்கிற உதவி இயக்கநரிடமும், பிரேம்குமார் என்ற உதவி இயக்குநரிடமும் களவாடப்பட்டதாம். இவர்களில் உதவி இயக்குநரான வாசு என்பவர், அஜீத் நடித்த பல படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணி புரிந்தவராம்.

முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் முழு கதையும் தன்னுடையது என்று அறம் படத்தின் இயக்குநர் கோபி நயனார் கூறியிருக்கிறார். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது.

மேலும், அன்பு ராஜசேகர் என்பவர் தனது ‘தாக பூமி’ என்கிற குறும்படத்தை தன்னுடைய அனுமதியில்லாமல் ‘கத்தி’ படமாக உருவாக்கிவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றம் சுமத்தி, இன்னமும் அதற்காக போராடி வருகிறார்.

a.r.murugadoss-1

முருகதாஸ் இயக்கிய நேரடி தெலுங்கு படமான ‘ஸ்பைடர்’ படத்தின் கதையும் அவருடையது இல்லையாம். இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாம்சன் சைத்தானியா என்கிற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டதாம்.

கடைசியாக ‘சர்கார்’ திரைப்படம். இந்தப் படம் இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது என்று மிகப் பெரிய அளவுக்கு பேசப்பட்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடைசியாக சமரசப் பேச்சு மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி கதைக்காக ‘நன்றி’ என்கிற பெயரில் வருண் ராஜேந்திரனின் பெயரை போடுவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இந்தக் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்பதும் தெளிவாகிவிட்டது.  

ஆக மொத்தம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களிலும் சொந்தக் கதையையே பயன்படுத்தவில்லை என்றும், அடுத்தவர்களின் கதையைத் திருடித்தான் படமாக்கியிருக்கிறார். கோடி, கோடியாக சம்பாதித்திருக்கிறார் என்றும் தமிழ்த் திரையுலகத்தில் உதவி, இணை இயக்குநர்கள் பலரும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அது யாருடைய கதையாக இருக்கும் என்பதுதான் இப்போதைய தமிழ்த் திரையுலகத்தின் ஹாட் டாபிக்..!

Our Score