மெகா தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படம் ‘ஜென்டில்மேன்-2.’
ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்து அசத்தினார். மேலும் இரண்டு கதாநாயகிகளாக நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயரையும் அறிவித்திருந்தார்.
ஆனால் படத்தின் இயக்குநரை மட்டும் இதுவரையிலும் அறிவிக்காமல் இருந்தார். இயக்குநர் யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட வட்டாரத்திலும் சர்ச்சைகளும் யூகங்களுமாக சஸ்பென்ஸ் தொடர்ந்தது.
தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து இயக்குநர் பெயரை அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
நானி கதாநாயகனாக நடித்த வெற்றி படமான ‘ஆஹா கல்யாணம்’ படத்தினை இயக்கிய A.கோகுல் கிருஷ்ணாவை ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் இயக்குநர் என்று அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.
இயக்குநர் A.கோகுல் கிருஷ்ணா ஏற்கனவே பிரபல இயக்குநரான விஷ்ணுவர்த்தனிடம் ‘பில்லா’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘சர்வம்’, ‘பட்டியல்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவசாலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் ஹீரோ, மற்றும் தொழி்ல் நுட்பக் கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.