மோகனா மூவிஸ் மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் புதிய படம் ‘டிமான்ட்டி காலனி.’
படத்தின் பெயரைக் கேட்டு பலரும் முதலில் அதிர்ச்சியாகலாம். இப்படி நேரடி ஆங்கிலக் கலப்புடனான பெயரை வைத்திருப்பதால் இந்தப் படத்திற்கு வரி விலக்குக் கிடைக்காதே என்று எண்ணலாம்.
ஆனால் தூய தமிழில் பெயர் வைத்திருந்தால்கூட இந்தப் படத்திற்கு வரிவிலக்குக் கிடைக்காது என்று திரையுலகத்திற்கே தெரியும். ஏனெனில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு. போதாக்குறைக்கு படத்தை வாங்கி விநியோகம் செய்யவிருப்பது அமரர் இராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.. பிறகென்ன..?
ஏற்கெனவே இவர்கள் குடும்பத்தின் இன்னொரு கலையுலக வாரிசான உதயநிதி ஸ்டாலின் தயாரித்த, நடித்த படங்களுக்கும் வரிவிலக்குக் கிடைக்காமல் உதயநிதி ஸ்டாலின் சுப்ரீம் கோர்ட்வரைக்கும் சென்றிருக்கிறார். இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை..
ஆகவே, இந்த ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்திர்கு வரிவிலக்குக் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவதற்கு இவர்களென்ன அப்பாவிகளா..?
கிடைக்கவே வாய்ப்பில்லாதபோது எந்தப் பெயரை வைத்தால்தான் என்ன..? அதனால் படத்தின் கதைக்குப் பொருத்தமான.. கதைக்களம் நடைபெறும் இடமான அந்தக் காலனியின் பெயரையே தலைப்பாக வைத்துவிட்டார்களாம்..!
இதுதான் சமயோசித புத்தி என்பது..!