மலையாள நடிகர் திலீப்பும், அவருடைய மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரும் ஒரு மனதாக தாங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி மனு செய்துள்ளனர்.
மலையாளியான மஞ்சுவாரியர் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய பள்ளிக் காலத்தில் அவருடைய குடும்பம் கேரளாவுக்கு குடி பெயர்ந்தது.. 1995-ம் ஆண்டு சாக்சியம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான மஞ்சுவாரியர் அடுத்த 4 வருடங்களில் 20 படங்களில் நடித்து முடித்தார்.
1998-ம் ஆண்டு சக நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மீனாட்சி என்ற ஒரேயொரு மகள் இருக்கிறார்.
சமீபமாக 2 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இருவரும் மன வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து கொண்டார்கள். மகள் மீனாட்சி தற்போது அப்பா திலீப்புடன்தான் இருக்கிறாள்.
திருமணத்திற்கு பின்பு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் சமீப ஆண்டுகளாக நடிக்க விரும்பியதாகவும் அதற்கு திலீப் தடை போட்டதால்தான் இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின..
இப்போது திலீப் கொச்சியில் மகள் மீனாட்சியுடன் வசித்து வர.. திருச்சூரில் உள்ள தனது தாய், தந்தையருடன் வசித்து வருகிறார் மஞ்சு வாரியர்.
பிரிவுக்கு பின்பு மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியான ‘How Old Are You’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். இது பெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் திலீப்புடன் இணைந்து வாங்கியிருந்த 80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சில நாட்களுக்கு முன்புதான் திலீப்பிடமே திருப்பிக் கொடுத்தார் மஞ்சு.
இந்த நிலையில் இன்று எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவருமே நேரில் ஆஜராகி ஒருமித்த மனதோடு விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிபதி இருவருக்கும் ஆறு மாத காலம் நேரம் கொடுத்திருக்கிறாராம். இந்த வழக்கு அடுத்த மாதம் 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறதாம்..!
நன்றி : ஏசியாநெட் நியூஸ் சேனல்