மணிரத்னம் இயக்கும் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகின்றது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக துவக்கத்தில் விஜய், மகேஷ் பாபு, நயன்தாரா, சிம்பு என பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம். ஆனால் பலரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் படத்தில் சிம்பு இடம் பெறாததற்குக் காரணம் ஜெயம் ரவிதான் என்ற வதந்தி கோடம்பாக்கத்தில் இன்றுவரையிலும் பேசப்பட்டு வருகிறது.
“சிம்பு இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்” என ஜெயம் ரவி கூறியதால்தான் மணிரத்னம் இப்படத்தில் சிம்புவை நடிக்க வைக்கவில்லை என்ற அந்த வதந்திக்கு காரணம் சொல்லியிருந்தார்கள்.
இது குறித்து சமீபத்தில் ஜெயம் ரவியிடம் கேட்டபோது, “சிம்புவை நான் ஏன் நடிக்கக் கூடாது என சொல்லப் போகிறேன். அப்படி நான் சொன்னால் மணிரத்னம் கேட்பாரா..?
நானே பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு ரோலில்தான் நடிக்கிறேன். அப்படி இருக்கையில் சிம்பு நடிக்க வேண்டாம் என நான் எப்படி மணிரத்னம் போன்ற ஒரு பெரிய இயக்குநரிடம் சொல்ல முடியும்…?
இந்தச் செய்தி பரவ ஆரம்பித்ததும் சிம்பு எனக்கு போன் செய்தார். அப்போது, “நீ அப்படியெல்லாம் செய்திருக்க மாட்ட என எனக்கு தெரியும். எனவே இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே” என கூறினார்” என்றார் ஜெயம் ரவி.