நடிகர்கள் :-
நாயகன் – ஆர்.ஜே.பி
நாயகி – கேத்தி
வில்லன் – செந்தில்
நாயகன் தாத்தா – பவுன்ராஜ்
நாயகி அப்பா – அனந்த் ராம்
நாயகி அம்மா – கலாவதி
நண்பர்கள் – சபி, ஜிவி
தொழில் நுட்ப குழு விபரம்:-
தயாரிப்பு: ஆர்.ஜே.பி மீடியா
தயாரிப்பாளர்: கலாரவி
எழுத்து மற்றும் இயக்கம் : ஆர்.ஜே.பி
இசை: சங்கர் ராம்
ஒளிப்பதிவு : செல்வகுமார்
எடிட்டர்: வளர்பாண்டி
பாடலாசிரியர்: கவிகண்ணண்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வினோத்
மக்கள் தொடர்பு : சரண்
தமிழ் சினிமாவின் தற்போதைய டிரண்டுகளில் ஒன்றான ஆணவக் கொலை பற்றிய திரைப்படம் இது.
ஆதிக்க சாதியும் அவர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் பறை இசைப்பதை தொழிலாக கொண்டுள்ள ஒரு சாதியும் கலந்த ஊர் அது. அந்த ஊரில் தாய், தந்தையை இழந்து தன்னுடைய தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர்தான் படத்தின் ஹீரோ ராஜபாண்டி. இவரையும் இவரது பள்ளிக்குச் செல்லும் தம்பியையும் பறையடிக்கும் வேலையை செய்து காப்பாற்றி இருக்கிறார் அவருடைய தாத்தா.
இதே ஊரில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் ஹீரோயினின் அப்பா. இந்து சமய அறநிலைத்துறையில் வேலை பார்த்து வருகிறார். மிகுந்த சாதி பிடிப்பு கொண்டவர். சாதி வெறியும் படித்தவர். இவருடைய மகளான ஹீரோயின் திவ்யா என்ற கேத்தியும், ஹீரோ ராஜபாண்டியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்.
புதுமுக மாணவி என்று நினைத்து ஹீரோவும் அவரது நண்பர்களும் நாயகியை ராக்கிங் செய்கிறார்கள். இருவரும் ஒரே வகுப்பில் பி.காம். படிப்பதால் வகுப்பறையிலேயே இருவருமே ஒருவரை ஒருவர் கோபத்துடன் முட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஹீரோவின் குடும்ப பிரச்சனைகளையும், குடும்ப சூழ்நிலையும் புரிந்து கொள்ளும் ஹீரோயின் ஹீரோ மீது முதலில் பரிதாபப்படுகிறார். பின்பு காதல் கொள்கிறார். ஹீரோயின் தன்னை காதலிக்கிறார் என்பது தெரிந்த பின்பே ஹீரோவும் தன்னுடைய காதலை தொடர்கிறார்.
இந்தக் காதல் ஹீரோயினின் அப்பாவுக்கு தெரிய அவர் அவசரம் அவசரமாக தன் மகளுக்கு சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் செய்து விடுகிறார்.
இந்தத் திருமணம் பிடிக்காத நாயகி ஹீரோவிடம் ஊரைவிட்டு ஓடிப் போகலாம் என்று சொல்ல ஹீரோவும் சம்மதிக்கிறார். ஒரு நள்ளிரவில் ஹீரோயினை அழைத்துக் கொண்டு சென்னை செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு ஓடி வருகிறார் ஹீரோ. அங்கே எதிர்பாராதவிதமாக ஹீரோயினின் அப்பா அனுப்பிய ஆட்களிடம் இவர்கள் சிக்கிக் கொள்ள… இவர்களுக்கிடையில் அடிதடி தள்ளுமுள்ளு நடக்கிறது.
ரோந்து போலீசார் இதைப் பார்த்துவிட்டு இவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறார்கள். ஸ்டேஷனில் இரு தரப்பு பெற்றோரும் வருகிறார்கள். ஹீரோயினின் அப்பா திடீரென்று மனம் மாறி “இவங்களுக்கு நாங்களே ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்” என்று இன்ஸ்பெக்டரிடம் உறுதிமொழி சொல்ல… ஹீரோயின் தன் அப்பா, அம்மாவுடன் அவளது வீட்டுக்கு செல்கிறாள்.
இதன் பின்பு என்ன நடந்தது?.. இவர்கள் திருமணம் நடந்ததா இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
ஆர்.பி.ஜே. என்ற ராஜபாண்டிதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ. மூன்று பொறுப்புகளையும் இவர் ஒருவரே செய்திருக்கிறார். புதுமுக நடிகராக தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார். இவரே இயக்குனர் என்பதால் அனைத்தையுமே இவர் சரிபார்க்க முடியாது என்பதால் கொஞ்சம் கொஞ்சம் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளரின் உதவியால் தன்னுடைய நல்லதொரு நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
ஹீரோயின் தன்னை காதலிக்கிறாள் என்பதுகூட அறியாத அளவுக்கு, தெரியாத அளவுக்கு, புரியாத வகையில்… அறிவோடு இருக்கும் ஹீரோ தன்னை ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதால் அவளுடைய ஆசையைத் தான் நிறைவேற்றிய தீர வேண்டும் என்ற அந்த நினைப்பில் ஹீரோயினின் வீட்டுக்குள்ளே நுழைந்து ஹீரோயினை கட்டிப் பிடித்து “நீதான் என் மனைவி.. நம்ம கல்யாணம் பண்ண போறோம்” என்று உறுதியாக சொல்லிவிட்டு போகும்பொழுது நிஜமாகவே நம்மை கை தட்ட வைத்துவிட்டார்..!
அதேபோல் இறுதி கட்சியில் ஹீரோயினை பார்க்க வந்து அவர் கதறுகின்ற அந்த கதறல்… ஒரு எளிமையான ஒரு கிராமத்து காதலன் என்ன இருப்பானோ எப்படி இருப்பானோ.. என்ன செய்வானோ என்பதை அந்த இறுதி கட்சியில் கதறி அழுது நம்மையும் கண்கலங்க வைத்து விட்டார். ஆனாலும் சிறந்த இணை இயக்குனர்களை உடன் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
படத்தின் மிகப் பெரிய பலமே ஹீரோயின் திவ்யாவாக நடித்த கேத்திதான். புதுமுக நடிகை என்பதும் இல்லாமல், கிராமத்து முகமாக.. கேமராவுக்கேற்ற முகமாகவும் தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருடைய அழகான நடிப்பை வேறு வேறு கோணங்களில் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.
தன்னை ராகிங் செய்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தைரியமாக அவர்களை எதிர்த்து பேசும் அந்த ஸ்டைலும், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவின் அப்பாவியான பேச்சிலும், செயலிலும் மனதை பறிகொடுக்கும்போது இந்தக் காதல் தப்பில்லையே என்று ஒரு பக்கம் நம்மை சொல்ல வைத்திருக்கிறார்.
அப்பா, அம்மாவின் உருட்டல், புருட்டல்களைத் தாங்கிக் கொண்டு அந்த நேரத்திலும் காதலனுக்கு போன் செய்து “பயமாயிருக்கு… என்னை எப்படியாவது காப்பாற்றி எங்கேயாவது கூட்டிட்டு போ” என்று அவர் கெஞ்சுகின்றபோது ஒரு உண்மையான காதலியாகவே நமக்கு தெரிகிறார்.
இறுதிக் காட்சியில் அம்மாவுக்கு அடுத்தபடியாக தன்னுடைய காதலனை நினைத்துப் பார்க்கும் அந்த கடைசி சில நொடிகளில்… நம்முடைய மொத்த பார்வையையும் தன் பக்கம் இழுத்துவிட்டார் ஹீரோயின் கேத்தி. இவருடைய நடிப்பாற்றலுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹீரோயின் நண்பராக நடித்தவர் தான் காதலிக்கும் பரமு என்ற பெண்ணிடம் தன்னுடைய காதலை சொல்வதற்காக நாயாக அலைந்து கடைசியாக அந்த பரமு என்ற பெண் “உனக்கும், எனக்கும் செட்டாகாது. இந்த ஊரில் ஜாதி பிரச்சனை பெருசா இருக்கு. அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கடந்து போவோம். நீ யாரையாவது உன் ஜாதியில் பார்த்து திருமணம் செய்து கொள். நானும் அப்படியே இருந்து கொள்கிறேன். கடைசிவரையிலும் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்” என்று ரொம்பவும் மெச்சூராக பேசிவிட்டு போகின்ற அந்தப் பெண்ணை மனதாரப் பாராட்டலாம்.
ஹீரோவின் தாத்தாவாக நடித்த அந்த எளிய மனிதர் இறுதிக் கட்சியில் சுடுகாட்டில் அவர் பாடுகின்ற “எங்கே போற” என்ற அந்த பாடல் விலைமதிப்பில்லாதது. அவ்வளவு அழகானது. உருக்கமானது.. கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது அந்தப் பாடலும் அந்த தாத்தாவின் பாச நடிப்பும்.
ஹீரோயினின் அப்பாவும், அம்மாவும் சாதிய கட்டுப்பாடுகளுக்குள்ளும் அந்த அடக்குமுறைகளுக்கும் சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தவிக்கும் நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் ஹீரோயிநின் கதையை முடிப்பதற்காக உறவினர்கள் வீட்டுக்குள் போகும்போது அதன் அர்த்தம் புரிந்து ஹீரோயினின் கதறுகின்ற அந்த கதறல் நிச்சயம் தமிழ்நாட்டில் பல ஊர்களில், பல வீடுகளில் நடந்த நிகழ்வுதான். இப்பொழுதாவது சாதிப் பிடிப்புள்ளவர்கள் திருந்தமாட்டார்களா என்ற நம்மை நினைக்க வைத்திருக்கிறது இவர்கள் இருவரின் நடிப்பும்..!
படத்தின் தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர் தன்னுடைய வேலையை சரியாகவே செய்திருக்கிறார். அவருடைய சிறந்த ஒளிப்பதிவின் காரணமாக கேமரா கோணங்களில் ஹீரோயினை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் சோகத்தின் அத்தனை அழுத்தங்களையும் தாங்கிக் கொண்டு இருக்கும் நாயகி கிளைமாக்ஸ் கட்சியில் படும் துயரமே மொத்தப் படத்தின் பாரத்தையும் தாங்கி இருக்கிறது.
இசையமைப்பாளர் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் அதில் இரண்டு பாடல்களும் நம் மனதிலேயே நிற்கின்றன. பின்னணி இசை அபாரம் என்றே சொல்லலாம். அதிலும் பல காட்சிகளில் இசையே இல்லாமல் மெளனிக்க வைத்திருக்கிறார். சில இடங்களில் ஒலிக்கும் தீம் இசை அட்டகாசம். அதோடு கடைசியாக அந்த தாத்தா பாடும் பாடல் நம் மனதையும் உருக வைத்துவிட்டது.
நல்ல கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று இருக்கும் இந்தப் படத்தில் தொழில் நுட்பம் ரொம்பவே பின் தங்கியிருப்பது ஆச்சரியமாகவும் உள்ளது.
படத்தை அவசரமாக எடிட் செய்து கொண்டு வந்தார்களோ என்று நினைக்கத் என்றும் அளவுக்கு படத் தொகுப்பில் பல தவறுகள். அதோடு டப்பிங் பேசுவதிலும் பல தவறுகள். பல வசனங்கள் உதடுகளில் ஒட்டவில்லை. அவசரம் அவசரமாக படத்தை உருவாக்கியது போல தெரிகிறது. இந்தக் குறையை சரி செய்து தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கலாம். இவ்வளவு அவசரமாக கொண்டு வர வேண்டுமா?
தமிழகத்தை உலுக்கிய இளவரசன் – திவ்யா காதல் கதையை சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர். அதனால் ஹீரோயினுக்கு திவ்யா என்று பெயர் வைத்துவிட்டு ஹீரோவுக்கு இளவரசன் பெயரை வைக்காமல் ஒதுங்கி இருக்கிறார். நாட்டு நிலைமையை நன்கு உணர்ந்தவர்போல் இருக்கிறது. பரவாயில்லை.
ஆனாலும் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு ஆணவக் கொலைகளை நிஜத்துக்கு நெருக்கமான வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அவருடைய தயாரிப்பு என்பதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு.. தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். புதுமுக இயக்குநர் என்பதால் இந்த அளவுக்கு எடுத்தமைக்காகவே இயக்குநரை நம் பாராட்டுகிறோம்.
ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே காதல் தேவையா என்ற கருத்தை அவசியம் முன் வைத்திருக்க வேண்டும். அதை இயக்குநர் செய்யவில்லை. இன்னொரு பக்கம் கல்லூரியில் ராக்கிங் செய்வது.. வகுப்பறையில் மது அருந்துவது போன்ற காட்சிகளை எல்லாம் இந்தப் படத்தில் காட்டி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதையெல்லாம் தவறு என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை இளைஞர்களின் ஒரு துடிப்பாக காட்டியிருப்பது எந்த விதத்திலும் ஏற்கக் கூடியதல்ல. ஆணவக் கொலையைவிடவும் கொடூரமான செயல் இயக்குநர் செய்திருப்பது. இந்தக் காட்சிகளை நீக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
எவ்வளவுதான் போராட்டங்கள்.. எதிர்ப்புகள்.. வசவுகள்.. கைதுகள்.. வழக்குகள்.. தண்டனைகள்.. தீர்ப்புகள் என்று வந்தாலும் இந்த ஆணவக் கொலை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்தியாவிலேயே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதை சரிப்படுத்த இன்னும் ஒரு கால் நூற்றாண்டு ஆகும் என்று எதிர்பார்க்கிறோம் அதற்கு வசதியாக இப்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற இளைஞர்களின் மனதில் ஜாதி பிரச்சனையை அது ஒரு நோய் என்பதாக சொல்லி அதை நீக்க வேண்டும் என்றவிதத்தில் இது போன்ற திரைப்படங்கள் அவசியம் ஜெயிக்க வேண்டும்.
இது மாதிரியான கதைகளில்… இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும்… ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமை. நிச்சயமாக ஆதரிப்போம்.
இந்தப் புதிய படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.
RATING : 3.5 / 5









