“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்…” – நடிகர் சந்தானம் உறுதி..!

“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்…” – நடிகர் சந்தானம் உறுதி..!

2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில், சந்தானம் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’.

இத்திரைப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டின்’ இரண்டாம் பாகத்தையும் துவக்கினார்கள்.

இப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சந்தானமே  தயாரித்திருக்கிறார்.

இதிலும் சந்தானம்தான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிரத்தா சிவதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் ‘standup காமெடி’யில் புகழ் பெற்ற அய்யப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

‘சாகா’ மூலம் புகழ் பெற்ற ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, செஞ்சி மாறன் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

IMG_3627 (Large)

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் தீபக் குமார், இயக்குநர் ராம்பாலா, படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சந்தானம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பேசும்போது, “நான் சந்தானம் ஸாருடன் பணியாற்றும் இரண்டாவது படம் இது. அதே நேரம் இயக்குநர் ராம்பாலாவுடன் மூன்றாவது படம். இருவருடனும் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். இவர்களிடத்தில் வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். மேலும், சந்தானம் ஸாரும், ஒரு தயாரிப்பாளராக ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார்.  எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால்தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்…” என்றார்.

IMG_3617

இயக்குநர் ராம்பாலா பேசும்போது, “நான் கடந்த 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் பிறகுதான் சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எடுக்கலாம் என்று கூறினார். அதுதான் ‘தில்லுக்கு துட்டு’.

இந்தக் காலத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம். ஆனால், ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் 75 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. அதற்காக கேடயமும் பெற்றேன்.

மாறன், ஆனந்த், முருகன், சேது ஆகியோருடன் சேர்ந்து இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதினோம். ஷபீர் இசையில் இரண்டு பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. புதுமுகமான செஞ்சி மாறன் படத் தொகுப்பினை செய்திருக்கிறார்…” என்றார்.

கதாநாயகன் சந்தானம் பேசும்போது, “நீண்ட நாள் கழித்து பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு  அவர்களுக்கும் எனது நன்றி.

IMG_3652

என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் ரசிகர்கள் நீங்கள்தான் என்னுடைய முன் மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

படத்தில் ஷ்ரத்தா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணித்தான் அவரை நாயகியாகத் தேர்ந்தெடுத்தோம்.

‘மொட்டை’ ராஜேந்திரன்,  விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர்தான் எழுதியிருக்கிறார்.

‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம்.  அதுபோல, இப்படமும் முழுக்க, முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி கதையை உருவாக்கினோம்.

‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியதுபோல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.

கேமராமேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள்தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார். அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.

நடிகராக இருப்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதுதான் கஷ்டம். பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றித்தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன்.

வருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்குத்தான் தாமதம் ஆகிறது.

நான் இயக்குநரானால் முதலில் ஆர்யாவை வைத்துதான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதிதான் இயக்க வேண்டும். எந்தப் படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருக்கிறது…” என்றார்.

 

Our Score