full screen background image

“தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன..?” – இயக்குநர் சீனு ராமசாமி சொன்ன விளக்கம்..!

“தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன..?” – இயக்குநர் சீனு ராமசாமி சொன்ன விளக்கம்..!

தமிழகத்தில் இன்றைக்கு வெளியாகும் படங்களுக்கு அடுத்த நாளே ‘சூப்பர் ஹிட் வெற்றி’ என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். அடுத்த மூன்றாவது நாளே அந்தப் படம் தியேட்டர்களைவிட்டு தூக்கப்படுகிறது.

இன்னும் சில படங்கள் 7 நாட்கள் கண்டிப்பாக ஓட்ட வைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தையே தொடுகின்றன. அரிதிலு, அரிதான படங்களே ஷிப்டிங் முறையில் 50 நாட்களைத் தொடுகின்றன.

ஆனால் இப்போது ஒரு படம் அதே ஷிப்டிங் முறையில் 100-வது நாளையே தொட்டுவிட்டது. நீண்ட நாட்கள் கழித்து இந்தப் பெருமையைப் பெற்றிருக்கும் படமாக அமைந்தது ‘தர்மதுரை’ திரைப்படம்தான்.

dharmadurai-100-day-celebrations-55

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஸ்டி டாங்கே, ராதிகா, ராஜேஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

கிராமத்து மனிதர்களை பற்றிய உணர்வுகளை சொல்லும் இந்தக் கதையில் மருத்துவத் தொழிலின் பெருமையையும், சொந்த உறவுகளின் இப்போதைய பாசத்தின் அளவுகோலையும் வெளிப்படுத்தியிருந்தது இந்தப் படம். இது கிராமம் முழுதும் அல்லாமல்  நகரங்களிலும் நூறு நாட்கள் ஓடி வசூல் புரிந்திருக்கிறது.

தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தைப் பெற்று தந்திருக்கிறது ‘தர்மதுரை’ திரைப்படம். படம் ஷிப்டிங் முறையில் 100 நாட்களைத் தொட்டதினால் படத்தின் நூறாவது நாள் விழாவை சமீபத்தில் வடழனி கமலா திரையரங்கில் நடத்தினார்கள்.

இந்த விழாவின் கூடவே படத்தின் தயாரிப்பாளரான ‘ஸ்டூடியோ-9’ ஆர்.கே.சுரேஷ் அடுத்து வெளியிடப் போகும் ‘அட்டு’ படத்தின் இசையையும் வெளியிட்டார்கள். இந்த இசைத்தட்டுக்களை வெளியிட ‘ஸ்டூடியோ-9’ சுரேஷ் தற்போது புதிதாக துவக்கியிருக்கும் ‘ஸ்டூடியோ-9 மியூஸிக்’ என்கிற புதிய நிறுவனத்தையும் துவக்கி வைத்தார்கள்.

படத்தில் பங்கு கொண்ட தமன்னா, சிருஷ்டி டாங்கே தவிர மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி  எஸ். தாணு, அனைவருக்கும் கேடயம் வழங்கினார் .

dharmadurai-100-day-celebrations-1

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் ‘ஸ்டூடியோ-9’ ஆர்.கே.சுரேஷ், “இந்த ‘தர்மதுரை’ படம் எனக்கு லாபத்தைக் கொடுத்ததோடு படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ஓவர் ப்ளோவை கிடைக்கச் செய்திருக்கிறது. இது தமிழ்ச் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்தில் சமீப ஆண்டுகளாக பார்க்க முடியாத செயல்.

அப்படி தங்களுக்கு லாபத்திற்கு மேல் கிடைத்த ஓவர் ப்ளோ தொகையை அந்த விநியோகஸ்தர்கள் எனக்கு அனுப்பி வைத்தார்கள். இதை எனக்குக் கிடைத்த மிகப் பெருமையாக நினைக்கிறேன். இது தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கும் சம்பவம் என்றும் சொல்லலாம்.

நான் படத் தயாரிப்பில் இறங்கியபோதே, எனது தயாரிப்புகள் அனைத்துமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எந்தவிதத்திலும் கம்பெனியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

அப்போதுதான் அண்ணன் சீனு ராமசாமி இந்தப் படத்தின் கதையை சொன்ன உடனேயே தயாரிப்புக்கு சம்மதித்தேன். அன்றைக்கு அந்தப் படத்தை துவங்கி வைத்தவர் அண்ணன் தாணுதான். இப்போது அதே தாணு அண்ணன் வெற்றி விழாவுக்கு வந்து இருப்பது சந்தோசம். அவருக்கும் நன்றி.

இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்தபோது நான் ‘மருது’ படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த கையோடு இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க வந்தேன். வந்த இடத்தில்தான் ‘மக்கா கலந்குதய்யா’ பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த்து. நான் அங்கே இருந்ததால் அந்தப் பாடலின் ஒரு சிறு காட்சியில் என்னையும் நடிக்க வைத்தார் இயக்குநர் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி அண்ணனும், சகோதரர் விஜய் சேதுபதியும் இதை வெற்றிப் படமாக்கிக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி…” என்றார்.

vijay sethupathy-1

படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதி பேசும்போது, “நான் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். இது  ‘தர்மதுரை’ படத்தின் நூறாவது நாள் விழாவாக இருந்தாலும், சீனு ராமசாமி அண்ணனின் நூறாவது விழா என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் கதை மீது அவர் நம்பிக்கை வைத்தார். எந்த கமர்ஷியல் விஷயங்களையும் சேர்க்காமல் இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்து அதையும் வெற்றிப் படமாக்கியிருக்கிறார். அதுதான் அவருடைய தன்னம்பிக்கை. அவருக்கு எனது நன்றி.

அடுத்து இந்தப் படத்தின் மீதும், என் மீதும், இயக்குநர் சீனு ராமசாமி மீதும் நம்பிக்கை வைத்து படத்தைத் தயாரித்து, தன் தோளில் தூக்கி சுமந்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஸுக்கு எனது நன்றி..” என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “இது எனக்கு மிக முக்கியமான நாள். ஏனெனில் நான் கலந்து கொள்ளும் முதல் நூறாவது நாள் விழா இதுதான்.

dharmadurai-100-day-celebrations-7

நான் இந்தக் கதையை சொன்ன உடனேயே அதை உணர்ந்து நல்லவிதமாக தயாரித்து  இன்றுவரை அதை தூக்கி சுமக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு நன்றி  சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படம் வெளிவராத நிலையிலும் என்னை நம்பி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்த தம்பி விஜய் சேதுபதிக்கு எனது நன்றி.

படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ராஜேஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எல்லோருமே அற்புதமாக நடித்தார்கள்.

மதுரைக்கு போயிருந்தபோது அங்கே பேருந்து நிலையத்தில் நான் பார்த்த இரண்டு பெண்களை புகைப்படம் எடுத்து அதை நடிகை ராதிகாவுக்கு அனுப்பி வைத்து, ‘உங்க கேரக்டர் இப்படித்தான் மேடம் இருக்கும்’ என்றேன். அவர் நான் எதிர்பார்த்தற்கும் மேலாக, அப்படியே அந்தக் கேரக்டராகவே வந்து நின்றார்.

இவர்களோடு அற்புதமான பாடல் வரிகளை கொடுத்த வைரமுத்து சார்.. திறமையாக ஒளிப்பதிவு செய்து கொடுத்த ஒளிப்பதிவாளர் சுகுமார், அற்புதமாக இசையமைத்துக் கொடுத்து யுவன் சங்கர் ராஜா… இப்படி எல்லோருடைய பங்களிப்பும் இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தது.

இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதற்கு மிக முக்கிய காரணம் தமிழகத்து மக்களிடம் இருக்கும் அற உணர்ச்சியும், நேர்மையும்தான். நல்ல படம் வந்திருக்கும்போது அதற்கு ஆதரவு கொடுக்காமல் இருக்கக் கூடாது என்கிற அறத்தின் காரணமாய் அவர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள்.

நான் கதைக்குத் தேவையில்லாமல் என் படத்தில் காமெடி, கமர்ஷியல் காட்சிகளை வைக்க மாட்டேன். இந்தப் படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை. அப்படியிருந்தும் இந்தப் படத்தை எல்லா பகுதியிலும் வெற்றி பெற வைத்த மக்கள், இதன் மூலமாக நல்ல படங்களை கொடுத்தால் அவைகள் கட்டாயம் ஓடும் என்ற நம்பிக்கையையும் தமிழ்த் திரையுலகத்திற்கு தந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு எனது கோடானுகோடி நன்றி…” என்றார் நெகிழ்ச்சியோடு.

Our Score