தமிழ்ச் சினிமாவில் புதிய அலையைத் தோற்றுவித்த தனுஷ்-செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைகிறது.
நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய அண்ணன் செல்வராகவன்.
இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’, 2006-ம் ஆண்டு ‘புதுப்பேட்டை’, 2011-ம் ஆண்டில் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்திருந்தார் தனுஷ்.
இப்போது 5-வது முறையாக மீண்டும் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றப் போகிறார்.
பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் இசையமைப்பளராக யுவன் சங்கர் ராஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே இன்றைய இளைய தலைமுறையினரால் மறக்க முடியாத பாடல்கள். இந்தக் கூட்டணி இதிலும் ஹிட் அடிக்கும் என்று நம்பலாம்.
என்ன.. இதில் இருக்கும் ஒரேயொரு வருத்தம்..?! இந்தக் கூட்டணியில் இதுவரையிலும் இடம் பெற்றிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் இல்லையே என்பதுதான்.
இது குறித்து தனது டிவிட்டரில் செய்தியை வெளியிட்ட தனுஷ், “செல்வராகவன், யுவன், அரவிந்த் கிருஷ்ணா.. நல்லது.. நல்லது.. நான் இவர்களுடன்தான் துவங்கினேன். மீண்டும் இவர்களுடனேயே இணைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நான் இன்று இங்கே இருப்பதற்குக் காரணம் என்னை உருவாக்கிய எனது அண்ணன் செல்வராகவன்தான். இந்த முறையும் நான் நிச்சயமாக அவரை திருப்தி செய்வேன் என்று நம்புகிறேன்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.