full screen background image

“சிவகார்த்திகேயனின் சம்பளம் எனக்குக் கட்டுப்படியாகலை..” – தனுஷின் பேட்டி..!

“சிவகார்த்திகேயனின் சம்பளம் எனக்குக் கட்டுப்படியாகலை..” – தனுஷின் பேட்டி..!

‘தங்க மகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய நடிகர் தனுஷ் பல சிம்பு, சிவகார்த்திகேயனுடன் பிரச்சினையா என்கிற பிரச்சினையான பல் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவருடைய பேட்டி இது :

நீங்கள்  தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கம்..? 

‘காக்கா முட்டை’ போன்ற தரமான படங்களை தயாரிக்க வேண்டும் மற்றும் திறமையானவர்களைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கம்.

திறமையாளர்கள் பலருக்கும் எங்களது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலமாக வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். என் தம்பி அனிருத்தின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பு கொடுத்திருக்கோம். இன்னும் பலருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். எல்லாவற்றையும் கூறினால் சொல்லிக் காட்டுவது போலாகிவிடும்.

இந்தியில் வெளியான ஒரு படத்தை அமலா பாலை கதாநாயகியாக வைத்து தமிழில் தயாரிக்க உள்ளேன்.

உங்களின் அடுத்தடுத்த படங்கள்..?

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் த்ரிஷா, ஷாமினி, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ஆகியரோடு  ‘கொடி’ படத்தில் நடிக்கிறேன்.  வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’யில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் அதன் படப்பிடிப்பு தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஒரு இந்திப் படத்திலும் நடிக்க இருக்கிறேன்.

உங்களுடைய படங்களில் அதிகமாக சிகரெட் பிடிப்பது போன்று காட்சிகள் வருகிறதே..?

எனக்கு ‘சிகரெட்’ பிடிக்கும் பழக்கம் கிடையாது. சினிமாவில் டைரக்டர்கள் நிர்ப்பந்திப்பதால் அது போன்ற காட்சிகளில் நடிக்கிறேன். நான் ஒரு நடிகன். டைரக்டர்கள் சொல்கிறபடி நடிக்க வேண்டியது என் கடமை. எனது ரசிகர்கள் நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, அதுபோல் ‘சிகரெட்’ குடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.

சிவகார்த்திகேயன் மீதுள்ள கோபத்தில்தான் விஜய்சேதுபதியை நீங்கள் வளர்த்து விடுவதாக சொல்கிறார்களே…?

சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. உண்மையென்னவென்றால் எங்கள் நிறுவனத்தால் சிவகார்த்திகேயனுக்கு இன்றைய மார்க்கெட்படியான சம்பளத்தைக் கொடுக்க முடியவில்லை. சிவாவும், நானும் இன்றும் நல்ல நண்பர்கள்தான். அவர் வளர்வதில் எனக்கும் பெருமைதான்.

சிம்புவுடன் ஏதும் பிரச்சனையா..?

அடிக்கடி சிம்புவுடன் பிரச்சனை என்ற கேள்வி வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சிம்புவும் நானும் இப்போதும் நல்ல நண்பர்கள்தான்.

‘விசாரணை’ படம் என்ன ஆச்சு..?

‘விசாரணை’ படத்தை பல விருதுகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அதனால் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளியாகும்.

‘மாரி’ படம் போல் மாஸ் படத்தை கொடுத்துவிட்டு, ‘தங்க மகன்’ என்ற குடும்ப படத்தில் நடித்ததன் காரணம்?

ஒரே மாதிரியான கதைகளில் தொடர்ந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. வித்தியாசமான கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். வில்லனாகவும் நடிக்க விரும்புகிறேன்..!

வெற்றி பெறுவதற்கு தேவையான  விஷயம் எது..?

பணம், உழைப்பு, அதிர்ஷ்டம் – இது மூன்றுமிருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மூன்று பேர்..?

முதலில் அம்மாதான். எந்த நேரத்திலும் என்னை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர். இரண்டாவது என் மனைவி ஐஸ்வர்யா. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். மூன்றாவது கடவுள். இவர்கள் மூன்று பேரும் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள்.

நீங்கள் தயாரித்த ‘நானும் ரவுடி’தான் படபிடிப்பில் நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் படபிடிப்புக்கு ஒழுங்காக வராமல் காதல் என்று சுற்றியதால் நயன்தாராவுக்கும் உங்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக செய்திகள் வெளி வந்துள்ளதே..?

‘நானும் ரடிவுதான்’ படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு நான் தான் சிபாரிசு செய்தேன். அந்த படத்துக்கான செலவு எதிர்ப்பார்த்ததைவிட அதிகரித்துவிட்டது.  இதனால் எனக்கு மனக் கசப்பு ஏற்பட்டது உண்மைதான். அந்தப் படத்தை முடிக்க நயன்தாரா பணம் கொடுத்தார் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. நான்தான் முழு பணத்தையும் செலவிட்டு படத்தை தயார் செய்தேன். படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு விக்னேஷ் சிவன் என்னை சந்திக்கவில்லை. ஆனால் போனில் பேசினார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 

ரஜினிக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னீர்களா..? 

ரஜினியின் தீவிர ரசிகன் நான். அப்புறம்தான் அவரது மருமகன். நல்ல ரசிகனாக எனது வாழ்த்துகளைச் சொல்லிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Our Score