இப்போதெல்லாம் புதுமையான முறையில் கதை, திரைக்கதை எழுதுகிறோம் என்கிற பெயரில் பல புதுமையான வடிவமைப்பில் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது ‘தாயம்’ திரைப்படம். இந்தப் படத்தின் காட்சிகள் முழுவதும் ஒரேயொரு அறையில் நடப்பது போலவே படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
பியூச்சர் ஃபிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக ஹீரோயின் அய்ரா அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – பாஜி, இசை – சதீஷ் செல்வம், படத் தொகுப்பாளர் – சுதர்சன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – முத்தமிழ், அருண்ராஜா காமராஜ். பாடகர்கள் – எம்.சி.ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி, அல்போனேஸ் ஜோசப், ஒலிப்பதிவு – கார்த்திக். எழுத்து, இயக்கம் – கண்ணன் ரங்கசாமி.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர், “படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக இருந்த்து. அதோடு இயக்குநரின் திறமை மீதும் எனக்கு நம்பிக்கையிருந்ததால் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.. நிச்சயமாக இந்தப் படம் மற்ற திகில், சஸ்பென்ஸ் படங்களிலிருந்து வேறுபட்டிருக்கும்..” என்றார் நம்பிக்கையோடு.
ஒளிப்பதிவாளர் பாக்யராஜ் பேசும்போது, “ஒரே ரூம்லதான் முழு படத்தையும் எடுத்திருக்கோம். ஆனால் அந்த அறையில் நீங்களெல்லாம் சற்றும் யோசிக்காத கோணத்திலெல்லாம் கேமிராவை வைத்து படம் பிடித்துள்ளோம். இந்த படம் பார்க்கும் போது ஒரு இடத்தில்கூட உங்களுக்கு அலுப்பே வராது..” என்று உறுதியோடு சொன்னார்.
இயக்குநர் கண்ணன் ரங்கசாமி பேசுகையில், “படம் பார்க்கும் ரசிகர்கள் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்க முடியாதளவுக்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. செம த்ரில்லிங்கான ஒரு விஷயத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கோம்.
ஒரு நேர்காணலுக்காக வரும் எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் என்ன நேர்காணலுக்கு சென்றார்கள்..? அது எப்படி முடிவடைகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.
ஒரே ஒரு அறையிலேயே ஒட்டு மொத்த படமும் படமாக்கப்பட்டிருந்தாலும், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகும்.
படத்தின் தரத்திற்காக படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் கிரீஸ் – மாசிடோனியா நாட்டின் புகழ் பெற்ற F.A.M.E.S ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் செய்திருக்கிறோம்.
இந்தப் படத்துக்காக ஒரு வித்தியாசமான் மாஸ்க் உருவாக்கி உள்ளோம். படத்தின் மிக முக்கியமான மிரட்டலான விஷயம் அதுதான்.
எல்லாவற்றுக்கும் மேலாக தயாரிப்பாளருக்கு அனுசரணையாக வெறும் 17 நாள்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரையில் முதல் வெற்றி என்றே சொல்லலாம்..” என்கிறார் மகிழ்ச்சியோடு..!
இந்தப் படத்தை காஸ்மோ வில்லேஜ் நிறுவனத்தின் சிவக்குமார் வெளியிடுகிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.