full screen background image

தாராள பிரபு – சினிமா விமர்சனம்

தாராள பிரபு – சினிமா விமர்சனம்

Screen Scene Media Entertainment Pvt. Ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சித்தார்த் ராவ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், தன்யா ஹோப் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் விவேக் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் சச்சு, அனுபமா குமார், ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – கிருஷ்ணா மாரிமுத்து, ஒளிப்பதிவு – எஸ்.கே.செல்வக்குமார், இசை – அனிருத் ரவிச்சந்திரன், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஊர்கா தி பேண்ட், சீன் ரோல்டன், விவேக் மெர்வின், பின்னணி இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – கிருபாகரன், கலை இயக்கம் – எஸ்.கமலநாதன், உடைகள் – பல்லவி சிங், கதை, திரைக்கதை – ஜூஹி சதுர்வேதி, வசனம் – சுபு, சுதர்சன் நரசிம்மன், கேஸ்டிங் இயக்குநர் – சரண்யா சுப்ரமணியன், ஒலிக் கலவை – வினய் ஹரிஹரன், ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமா, கிராபிக்ஸ் – நாக் ஸ்டூடியோஸ், வண்ணக் கலவை – சுரேஷ் ரவி, தயாரிப்பு நிர்வாகம் – மார்ட்டின், நிர்வாகத் தயாரிப்பாளர் – ஏ.கே.அனிருத், மக்கள் தொடர்பு – நிகில் முருகன். நேரம் : 2 மணி 32 நிமிடங்கள்.

2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ்ப் பதிப்புதான் இந்த ‘தாராள பிரபு’ திரைப்படம்.

கால்பந்து விளையாட்டு வீரான ஹரீஷ் கல்யாண் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் ஒரு இளைஞர். அவருடைய அம்மாவான அனுபமா குமாரும், பாட்டி சச்சுவும் ஆயுர்வேத மருந்துகளை விற்கும் கடை வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கடையில் ஒரு எண்ணெய்யை வாங்கிய நாயகி தன்யா ஹோப்பிடம் அதைக் கொடுப்பதற்காகச் செல்லும் ஹரீஸ், அவரைப் பார்த்தவுடன் காதலில் விழுகிறார். எழுகிறார். பின்பு தன்யாவையும் தன் காதலில் விழுக வைக்கிறார்.

வடசென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் என்னும் விவேக். இவரிடம் மெடிக்கச் செக்கப்புக்காக வருபவர்களிடம் விந்தணு தானம் பற்றிச் சொல்லி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வழியைச் சொல்கிறார் விவேக்.

விந்தனு தானத்திற்காக சரியான ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார் விவேக். யாரும் சிக்கவில்லை. கடைசியாக ஹரீஸ் சிக்குகிறார். அவர் பின்னாலேயே அலையோ அலை என்று அலைந்து ஒரு வழியாக ஹரீஷை விந்தனுவை தானம் செய்ய சம்மதிக்க வைக்கிறார்.

இதில் கிடைக்கும் பணத்தைப் பார்த்தவுடன் முதலில் மதிமயங்கும் ஹரீஷ் பின்பு இந்த தானத்தில் தீவிரமாக களமிறங்க.. அவருக்கும், டாக்டர் விவேக்கும் பணம் கொட்டோ.. கொட்டோவென்று கொட்டுகிறது.

இந்த நேரத்தில் ஹரீஷுக்கு கல்யாணமாகிறது. இதன் பின்பும் ஒரு பெரிய அரசியல்வாதிக்காக தனது உயிரணுவை தானம் செய்கிறார் ஹரீஷ். இதற்காக மிகப் பெரிய தொகை அவருக்குக் கொடுக்கப்படுகிறது. அவர் அதை வாங்க மறுத்ததால் விவேக்.. அந்தப் பணத்தை ஹரீஷின் பெயரில் பல்வேறு பங்குகளிலும், வங்கிகளிலும் முதலீடு செய்து வைக்கிறார்.

அந்த நேரம் தன்யாவின் கர்ப்பப்பை சக்தியில்லாததாக இருப்பதால் அவரால் குழந்தை பெற முடியாது என்கிற உண்மை தெரிய வருகிறது. இதனால் வருத்தமடையும் ஹரீஷும், தன்யாவும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று நினைத்து அதைச் செயல்படுத்துகிறார்கள். விவேக் அடையாளம் காட்டிய ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.  

இந்த நேரத்தில் ஹரீஷின் பல லட்சம் ரூபாய் முதலீடு பற்றி சந்தேகங்கொண்ட  வருமான வரித்துறை ஹரீஷை சுற்றி வளைக்கிறது. சந்தேகத்திற்கிடமான பண வரவு என்கிற நோக்கில் ஹரீஷை போலீஸூம் விசாரிக்கிறது. விசாரணையின்போது தனது மனைவியிடம் தனது உயிரணு தான தொழிலைப் பற்றிச் சொல்லிவிடுகிறார் ஹரீஷ்.

இதனால் கோபமடையும் அவரது மனைவியான தன்யா ஹரீஷைவிட்டுப் பிரிகிறார். அவர்கள் தத்தெடுத்த குழந்தையை அவர்களது பிரிவைக் காட்டி ஹோமின் பொறுப்பாளரும் அழைத்துச் சென்றுவிட.. கணவன், மனைவி இருவருமே மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் இருந்து இவர்கள் எப்படி மீண்டார்கள்.. இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.. குழந்தை மீண்டும் அவர்களிடத்தில் வந்து சேர்ந்ததா என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

கடந்த 2000-மாவது ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பிரபலமான விந்தணு தானம் மூலமான மருத்துவ சிகிச்சையினால் இன்றைக்கு இந்தியாவில் லட்சம் குழந்தைகளுக்கு மேல் பிறந்துள்ளார்கள். வாடகைத் தாய் முறையும் இருக்கிறது என்றாலும் தானே சுமந்து பெறுவது தனி சுகம்தான் என்று நினைக்கும் தாய்க்குலங்களை திருப்திபடுத்தவே இந்த முறையிலான சிகிச்சை முறையும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதனை வைத்து காமெடி கலந்து விரசமில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் ஹீரோ டாக்டர் கண்ணதாசனாக நடித்திருக்கும் விவேக்தான் என்று சொல்வதில் தவறேயில்லை. அந்த அளவுக்கு படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். இவருடைய ஒவ்வொரு டயலாக்கிற்கும் திரையரங்கமே குதிக்கிறது.. கொஞ்சம் பிசகினாலும் ஆபாச வசனமாக மாறும் அபாயம் இருந்தும் பல அசைவ விஷயங்களையும் கண்ணியமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதை அழகாக டெலிவரி செய்திருக்கிறார் விவேக்.

தனது நீண்ட கால அனுபவத்தின் சாட்சியமாக வசன டெலிவரி.. காமெடி கலந்த பஞ்ச் டயலாக்குகள் என்று தனது டிரேட் மார்க் காமெடி கம்பெனியை படம் முழுவதும் கொரானா வைரஸ் போல் பரவி விட்டிருக்கிறார் விவேக். இதற்கு இவருக்கு பெரும் துணையாய் இருந்திருக்கிறார் இவரது உதவியாளராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி.

படம் முழுவதும் சொல்ல வந்ததையே திரும்பத் திரும்பச் சொல்லும் சூழலில் ஒரு பிரச்சாரப் படமாக போயிருக்க வேண்டியதை.. தனது நகைச்சுவை பேச்சினால் மடைமாற்றி சிந்திக்கக் கூடிய வகையில் கருத்தாழமிக்க படமாக மாற்றியிருக்கிறார் விவேக். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

ஹரீஷ் கல்யாணுக்கு இது மிகவும் முக்கியமான திரைப்படம். அவருடைய தற்போதைய உருவத்திற்கும், வயதுக்கும் மிகப் பொருத்தமான வேடம் என்பதால் இயல்பாகவே அந்தக் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். முதற்பாதியில் விளையாட்டுத்தனமாகவே இதில் ஈடுபட்டவர் பின்பு தனக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்னும் போது கலங்கி நிற்கும் காட்சிகளில் பார்வையாளர்களின் பரிதாப உணர்வைப் பெற்றுக் கொள்கிறார்.

மனைவி, அம்மா, டாக்டர் விவேக் என்று இவர்கள் மூவருக்குள்ளும் மாட்டிக் கொண்டு அவர் படும்பாட்டை சோகம் இழையோட படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே படத்தின் பிற்பாதியில் ஹரீஷின் நடிப்பு மிகவும் கவர்கிறது. தான் தத்தெடுத்த குழந்தையே தன்னுடையதுதான் என்பதை அறியும்போதும்..  கிளைமாக்ஸ் காட்சியில் 49 குழந்தைகளும் தன்னுடைய குழந்தைகள் என்றும் அறியும்போதும் அவர் காட்டும் முகபாவனைகளில் நகைச்சுவை பறக்கிறது..! இயக்குநரின் இயக்குதல் திறமைக்கு இந்த இடங்களும் ஒரு சான்று.

நாயகி தன்யா ஹோப்பின் அலட்டல் இல்லாத நடிப்புக்கு ஒரு ஜே போடலாம். படத்தின் பிற்பாதியில் தன்னுடைய இயலாமையை நினைத்து அவர் வருத்தப்படுவதும்.. தனக்குத் தெரியாமலேயே செய்த தானத்திற்காக கணவரைப் பிரிந்திருக்கும் சூழலில் அவருடைய நடிப்பும் பாராட்ட வைக்கிறது. அந்தக் கணத்தில் நம் மனதில் அந்தக் கனத்தை ஏற்றியிருக்கிறார் தன்யா.

பொதுவாக பாட்டிகள்தான் பழம் பஞ்சாங்கமாகவும், அம்மாக்கள் நவநாகரீகமாகவும் இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் அப்படியே உல்டாவாகி அம்மா அனுபமா குமார் பழம் பஞ்சாங்கமாகவும், பாட்டி சச்சு நவநாகரிகமாகவும் இருப்பது ஒரு சுவையான திரைக்கதை.

இதேபோல் தன்யாவின் வீட்டில் இருக்கும் அப்பா, அக்காளுக்கும் ஒரு தனியாக கேரக்டர் ஸ்கெட்ச்சினை கொடுத்து அவர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

செல்வக்குமாரின் ஒளிப்பதிவில் படம் முழுவதுமே கண்ணைக் கவரும்வகையிலேயே அமைந்துள்ளது. ஹனிமூன் பாடல் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார் ஒளிப்பதிவாளர். கிளைமாக்ஸ் காட்சியில் 49 குழந்தைகள் விளையாடும் காட்சியை ஒட்டு மொத்தமாய் படம் பிடித்து மனதில் இடம் பிடித்திருக்கிறார் செல்வக்குமார்.

ஹிந்தியில் கிரிக்கெட் வீரனாக இருந்ததை இதில் கால்பந்து வீரனாக்கியிருக்கிறார்கள். சிற்சில காட்சிகளை மூலத்தில் இருந்து நீக்கிவிட்டு அவற்றை தமிழுக்கேற்றாற்போல் மாற்றி செப்பனிட்டிருக்கிறார் இயக்குநர். இதற்கு உறுதுணையாய் இருந்த திரைக்கதை, வசனகர்த்தாக்கள் சுப்பு, சுதர்சன் நரசிம்மன் இருவருக்கும் நமது பாராட்டுக்கள்.

5 இசையமைப்பாளர் என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பரத் சங்கரின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இசை ஒலிப்பதே தெரியாத அளவுக்கு வைத்திருக்கிறார்கள்.

முதலில் இன்றைய காலக்கட்டத்தில் இந்தப் படத்தை தைரியமாக தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

நாகரிகம் வளர, வளர மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு நோய்களில் குழந்தையின்மை என்பதும் ஒரு நோய்தான் என்பது இங்கே பலருக்கும் தெரிவதில்லை. பிள்ளை இல்லை என்றால் தத்தெடுக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர.. மருத்துவ ரீதியாக இதனை சரி செய்ய கணவன், மனைவி இருவருமே நினைப்பதில்லை.

கரு முட்டை உருவாகாத பிரச்சினை.. கர்ப்பப் பை வலுமில்லாமல் இருப்பது போன்றவை பெண்களுக்கு வரக் கூடிய முக்கியமான குழந்தையின்மைக்கான பிரச்சினைகள். ஆண்களுக்கு சக்தி படைத்த உயிரணு உருவாவதில் சிக்கல் என்பதுதான் மிகப் பெரிய பிரச்சினை.

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் அதனை மிக எளிதாக தீர்ப்பதுதான் இந்த விந்தணு தானம். இப்போதுவரையிலும் பொது வெளியில் விந்து என்ற சொல்லே புழக்கத்தில் இல்லை. அதைப் பற்றிப் பேசுவதே அசிங்கம் என்று நினைக்கும் ஒரு சமூகத்தில் அதனை தானமாகப் பெற்று.. தன்னுடைய கரு முட்டையுடன் இணைத்து தானே அதனை சுமந்து ஒரு பெண் பெற்றெடுப்பது என்பது குடும்பமே முக்கியம் என்று நினைக்கும் தென்னந்தியாவில் இன்னமும் பரவலாக வரவில்லை. பேசப்படவும் இல்லை.

இப்போதும் இந்தியாவில் வாடகைத் தாய் முறைதான் மிகப் பிரபலமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பணம் படைத்தவர்கள். இந்தச் சூழலில் ஏழை மக்களிடத்தில்கூட இது பிரபலமாகாத நிலையில் இப்படியொரு படத்தைக் கொண்டு வந்தமைக்காக இந்தப் படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குழந்தையில்லாமல் தவிக்கும் பெரும்பாலான தம்பதியினரின் மன உளைச்சல்.. குழந்தைகளுக்காக அவர்கள் செய்யக் கூடிய விஷயங்கள்.. எதிர்பார்ப்புகள்.. விந்தணு தானம் பற்றிய அறிவு, புரிதல்.. விளக்கவுரை.. இவற்றுடன் குடும்பக் கதை.. முக்கியமாக காமெடி கலந்த திரைக்கதை.. வசனங்கள் என்று அனைத்தையும் கலந்து கமர்ஷியல் கம்மர்கட்டாக வெளிவந்திருக்கிறது இத்திரைப்படம்.

ஒரு பக்கம் இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டேயிருக்க.. குழந்தையில்லாமல் தவிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கும் மருத்துவமனைகள்.. புரியாத பாணியில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்.. பணத்தை மட்டுமே மையமாக வைத்து மருத்துவத்தில் ஈடுபடும் மருத்துவர்கள்.. இவர்களோடு குழந்தையில்லை என்று வருத்தப்படுவதைவிட ஒரு அனாதைக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதென்பது சாலச் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார் இதன் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.

இது போன்ற கதைகளில் தமிழகத்தில் கொஞ்சம் சூதானமாகத்தான் மக்களை அணுக வேண்டும் என்பதற்காக ‘விந்து’ என்ற சொல்லைக்கூட படத்தில் ஒரு முறைகூட பயன்படுத்தாமல் ‘ஸ்பெர்ம் தானம்’ என்றே கடைசிவரையிலும் சொல்லி சமாளித்திருக்கிறார் இயக்குநர்.

இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தான் என்றாலும் தமிழில் சொல்லும்போது அது வெளியுலகத்தில் தவறாகப் படுமோ என்று நினைத்து ஆங்கிலத்தில் சொல்வது போலவே வைத்திருக்கிறார் இயக்குநர்.  

இந்தத் தயக்கம்தான் மக்களை இது போன்ற அறிவியல் உண்மைகளையும், மருத்துவ வசதிகளையும் அறியமுடியாதபடிக்கு தள்ளியிருக்கிறது.

இப்போதைய தலைமுறையினர் அறிய வேண்டிய ஒரு விஷயத்தை தயக்கமில்லாமல், அவர்கள் விரும்பும்வகையில் கொடுத்திருக்கும் இத்திரைப்படம் மிக, மிக வரவேற்கத்தக்கதுதான்..!

Our Score