இந்தப் படத்தை வைட் கார்ப்பெட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி தயாரிக்க, P.G மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.G.முத்தையா இணை தயாரிப்பு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். மேலும், மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்க, P.G.முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத் தொகுப்பாளராக அருள் E.சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும், கலை இயக்குநராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தினை நீண்ட நாட்கள் திரைத்துறையில் பத்திரிகையாளராக பணியாற்றியவரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார்.
‘தேஜாவு’ என்பது பிரெஞ்சு மொழியில் இருக்கும் ஒரு வார்த்தை. நாம் நம் கண் முன்னே காணும் ஒரு சம்பவம் முன்பேயே ஓரிடத்தில் நிகழ்ந்தது போல நமக்குத் தோன்றும். இன்னும் சில நேரங்களில் ஓரிடத்திற்குப் புதிதாக போகும்போது அந்த இடத்திற்கு ஏற்கெனவே நாம் வந்தது போன்ற உணர்வு நமக்குள் தோன்றும். இந்த உணர்வுக்குப் பெயர்தான் ‘தேஜாவு’.
இதேபோலத்தான் ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கொலை சம்பவத்தை மீண்டும் அதேபோல் நிகழும்படி உருவாக்குகிறார்கள். அவர்கள் யார்.. இது எதற்கு.. என்கிற கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘தேஜாவு’ படத்தின் கதை.
ஒரு நள்ளிரவில் கொட்டுகின்ற மழையில் தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் சுப்ரமணி என்பவர், யாரோ தன்னிடம் அனாமதேய நம்பரில் இருந்து பேசி மிரட்டுவதாக போலீஸீல் புகார் கொடுக்கிறார். “காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று போலீஸ் அவரை அனுப்பி வைக்கிறது.
ஆனால் அந்த நள்ளிரவிலேயே ஒரு பெண் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தன்னை 3 பேர் கடத்தி வந்ததாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் சொல்கிறார். அதே நம்பரில் இருந்து அடுத்த போன் சுப்ரமணிக்குப் போயிருப்பதை அறிந்து போலீஸ், சுப்ரமணியைத் தேடி வந்து விசாரிக்கிறது.
அங்கே சுப்ரமணி எழுதி வரும் கதையிலும் இதேதான் இருக்கிறது. கதையின் நாயகியான ‘பூஜா’ என்ற பெயருள்ள பெண்தான் உண்மையில் கடத்தப்பட்டிருக்கிறார். அவளும் 2 முறை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து உதவி கேட்டிருக்கிறாள். அதெப்படி ஒருவன் எங்கோ நடக்கும் கதையை வீட்டில் அமர்ந்தபடி எழுத முடியும் என்று போலீஸ் குழம்பிப் போயிருக்க..!
அந்த நேரத்தில் காணாமல் போன அந்த பூஜா, போலீஸ் பெண் டி.ஜி.பி.யான மதுபாலாவின் மகள் என்பது தெரிய வர டிபார்ட்மெண்ட்டே அதிர்ச்சியாகிறது. இந்தப் பிரச்சினையை கமுக்கமாக விசாரிக்கும்படி தலைமை டி.ஜி.பி. மதுபாலாவிடம் சொல்ல அதன்படியே செய்கிறார் மதுபாலா.
மகளைக் கண்டு பிடிக்க, ‘விக்ரம் குமார்’ எனும் அண்டர் கவர் அதிகாரியை வரவழைக்கிறார் மதுபாலா. பூஜாவைக் கண்டு பிடிக்க தன் விசாரணையைத் துரிதமாகத் தொடங்கும் விக்ரமும், எழுத்தாளர் சுப்பிரமணி எழுதுவது எப்படி அப்படியே நடக்கிறது என்று குழம்பிப் போகிறார்.
தொடர்ந்து போலீஸ் விசாரிக்க, விசாரிக்க.. அது அப்படியே சுப்ரமணியின் கதையிலும் வருகிறது. இடையில் ஒரு கால் டாக்சி டிரைவர் வந்து கதையைத் திருப்பிவிடுவதைப் போல ஒரு புகாரை கொடுக்க திடுக்கிடும் திருப்பமாக கதையும், நாமும் நிமிர்ந்து உட்கார்கிறோம்.
விக்ரம் குற்றவாளியை நெருங்க… சுப்ரமணி தொடர்ந்து எழுதும் கதையும் உதவியாய் இருக்க.. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை சுருக்கம்.
இப்போதுதான் ‘டி பிளாக்’ என்ற படத்தில் அருள்நிதி சிறப்பான தனது நடிப்பைக் காண்பித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு முறை சிறப்பான நடிப்பைக் இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார் அருள்நிதி.
கடைசி டிவிஸ்ட் வரும்வரையிலும் மிக அழுத்தமாக தான் குற்றத்தைக் கண்டுபிடிக்க வந்த அதிகாரிபோல நடிப்பைக் காண்பித்துவிட்டு கிளைமாஸ்க்கில் தான் யார் என்பதை தனது கோப முகத்திலேயே காட்டியிருக்கிறார் அருள்நிதி. இவர் இது போன்று தொடர்ந்து தனக்கு செட்டாகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் நன்றாக இருக்கும்.
டி.ஜி.பி. ஆஷா பிரமோத்தாக மதுபாலா நடித்துள்ளார். மகளைக் காணாமல் தவிக்கும் ஒரு தாயின் பரிதவிப்பைத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஆனால் போலீஸ் டிரெஸ்ஸில் காணப்பட வேண்டிய அந்தக் கம்பீரம் அவரிடத்தில் இல்லை. இவருடைய தோற்றத்துக்கு போலீஸ் கேரக்டர் செட்டாகவில்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்தில் இருக்கும் ஒரேயொரு குறை இதுதான்.
அவரது அழகான மகள் பூஜாவாக, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். இவருக்குப் பெரிதாக ஸ்கோப் இல்லை. எழுத்தாளர் சுப்பிரமணியாக, கன்னட நடிகர் அச்யுத் குமார் பிரமாதமாக நடித்துள்ளார். ஒரு எழுத்தாளனுக்கே உரித்தான திமிரையும், பெருமையையும் அவ்வப்போது காட்டி வரும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யமானது. இவருக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
இவரைக் கண்காணிக்கும் கான்ஸ்டபிள் ஏழுமலையாக நடித்திருக்கும் காளி வெங்கட்டும், அந்தச் சின்னக் கதாபாத்திரத்திலும் தன் நடிப்பை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். 2 காட்சிகள் என்றாலும் தன் இருப்பை கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார் நடிகர் ‘மைம்’ கோபி.
படத்தில் நடிகர்களையும் தாண்டி நம்மை ஆக்கிரமித்திருப்பது ஜிப்ரானின் பின்னணி இசைதான். ‘அட்டகாசம்’ என்பதற்கு வேறொரு வார்த்தை இருந்தால் அதையும் இங்கே போட்டுக் கொள்ளுங்கள். துவக்கக் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் ஜிப்ரான் தனிக்காட்டு ராஜாவாக படத்தில் வலம் வந்திருக்கிறார்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் அழகு. மீடியம் பட்ஜெட் படத்துக்கேற்றவாறு.. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களை மனதில் வைத்து ஒளிப்பதிவினை நிறைவு செய்திருக்கிறார். காமிரா வொர்க்கில் ஸ்முருதி வெங்கட் இருக்கும் கார் வட்ட வடிவத்தில் சுற்றோ சுற்றென்று சுற்றி நிற்கும் காட்சியில் நம்மையும் நெர்வஸாக்கிவிட்டார் ஒளிப்பதிவாளர்.
2 நிமிடங்கள் திரையைப் பார்க்கவில்லையென்றால்கூட படம் புரியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்த இந்தப் படத்தை, படத் தொகுப்பாளர் கச்சிதமாகப் புரிந்து கொண்டே நறுக்கித் தந்திருக்கிறார்.
ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த திருப்தியைத் தந்திருக்கிகிறது இந்த ‘தேஜாவு’ படம். முறைகேடாக அதிகாரத்தை அடைய நினைப்பவர்கள் தங்களது கடமையில் இருந்து வழுவிச் சென்றால், அந்த மனிதருக்கு கேடு எப்படி வரும் என்பதையும் இந்தப் படம் மதுபாலாவின் மூலமாகச் சொல்கிறது.
முதல் காட்சியிலேயே படத்தின் கதையைச் சொல்லிவிட்டார் இயக்குநர். முதல் பிரேமிலேயே கதையை நகர்த்தத் துவங்கிவிட்டார் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன். இதுதான் இந்தக் காலக்கட்டத்திய இளம் இயக்குநர்கள் அறிய வேண்டிய பாடம்.
அடுத்து என்ன நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கும்வகையில் திரைக்கதையில் சஸ்பென்ஸை கூட்டிக் கொண்டே சென்றிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையின் ஓட்டத்தில், முடிச்சுகள் ஒவ்வொன்றையும் தானாகவே அவிழும்படி அவர் அமைத்திருக்கும் காட்சியமைப்புகள் மிக, மிக சுவாரஸ்யம்.
அனைத்துக் கதாபாத்திரங்களுமே தத்தமது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருப்பதால் இறுதிவரையிலும் இந்த சஸ்பென்ஸ் காப்பாற்றப்பட்டிருக்கிறது. மதுபாலாவின் முன் கதைச் சுருக்கத்தையும் தாண்டிய ஒரு டிவிஸ்ட்டை இயக்குநர் அருள்நிதியிடம் கொடுத்து வைத்திருந்ததுதான் மிகப் பெரிய சஸ்பென்ஸ்.
முதல் பட இயக்குநர்களுக்கு வெற்றி கிடைப்பது அபூர்வம். ஆனால் அந்த அபூர்வ கணத்தை இந்தப் படத்தின் வாயிலாக மிக அலட்சியமாகக் கைப்பற்றியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் தர வேண்டுமாய் நாம் எதிர்பார்க்கிறோம்..!!!
RATINGS : 4.5 / 5