full screen background image

டியர் ரதி – சினிமா விமர்சனம்

டியர் ரதி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்எல்பி மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கண்ணதாசன், மோகனா மஞ்சுளா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சரவண விக்ரம் மதன், ஹஸ்லி அமான் ரதி, ராஜேஷ் பாலச்சந்திரன் வரதன், சாய் தினேஷ் காட்வின், யுவராஜ் சுப்ரமணியன் ஷெரிப், பசுபதி ராஜ் கிருபாகரன், சரவணன் பழனிச்சாமி எஸ்.. சம்பத், தமிழ் ​செல்வன் ராம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விநியோகஸ்தர்: உத்ரா புரொடக்ஷன்ஸ், இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன், படத்தொகுப்பு: பிரேம் பி, ஒலி: கடம் சிவா, கலை: ஜெய் ஜே திலீப், ஆடை: சிந்து, ஒப்பனை: ஸ்வேதா இந்து, டிஐ: விநாயகம், பத்திரிக்கை தொடர்பு: சக்தி சரவணன், படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரவீன் கே மணி.

.டி. துறையில் வேலை செய்யும் ஹீரோ மதன் என்ற சரவணன் விக்ரம் நிறையவே கூச்ச சுபாவம் உள்ளவர். அதிலும் பெண்கள் என்றாலே ஓடுபவர். பெண்களிடம் எப்படி பேசுவது பழகுவது என தெரியாமலேயே தனக்கு வந்த இரண்டு காதல்களையுமே இழந்துவிட்டார் மதன்.

இவருடைய கூச்ச சுபாவத்தை போக்கவும், கல்யாணத்துக்கு தயாராகவும் இவருடைய நண்பர் மதனை ஒரு விபச்சார விடுதிக்கு அழைத்து வருகிறார்.

அங்கே ஹீரோயின் ரதியை சந்திக்கிறார் மதன். எதற்கு வந்தோம் என்பதே மறந்து போய் ரதி அவரிடம் மனம் விட்டு பேச இவரும் பதிலுக்கு மனம் விட்டு பேசுகிறார்.

இந்த பேச்சுவார்த்தை ஒரே இரவில் முடியக் கூடாது என்று நினைக்கும் மதன் ரதி தன்னுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால், தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்கிறார். ரதியும் இதற்கு ஒத்துக்கொள்ள மறுநாள் தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி மதனிடம் கூறுகிறார்.

ஆனால் அன்றைய நாள் இரவில் தற்செயலாக போலீஸ் எஸ்..யான சம்பத்துடன் ரதி தங்க நேரிடுகிறது. மறுநாள் காலை மதன் ஓடோடி வர ரதியும் அவருடன் இணைந்து ஓடுகிறார். கூடவே சம்பத்தின் கைத் துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு போகிறார்.

இன்னொரு பக்கம் ரதியை ஒரு தலையாய் காதலித்து வரும் ரவுடியும் ரதியை தேடி வருகிறான். ரவுடியும் சம்பத்தும், இணைந்து கூட்டணி வைத்து ரதியை தேடி அலைகிறார்கள். மதனின் நண்பனை இருவரும் விசாரிக்க அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்கிறார்.

இன்னொரு பக்கம் மதனோடு பயணித்துக் கொண்டிருக்கும் ரதி தன் மனதில் இருந்த சில ஆசைகளை வெளிப்படையாக சொல்ல, அதை மதன் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்க ரதி மிகப் பெரிய சந்தோஷத்தை அனுபவிக்கிறாள்.

ரதியைத் தேடி அலையும் ரவுடி கும்பல் மதனை கொலை செய்யும் எண்ணத்தில் இருக்க, சப் இன்ஸ்பெக்டர் சம்பத்தோ தனக்கு அவள் வைத்திருக்கும் தன்னுடைய துப்பாக்கியை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிறார்.

இப்படியொரு திரைக்கதையோடு போய்க் கொண்டிருக்கும் அந்த இரவில் என்ன நடந்தது? மதனும், ரதியும் இணைந்தார்களா..? துப்பாக்கி சம்பத்தின் கையில் வந்து சேர்ந்ததா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் சரவண விக்ரம் இந்த படத்தில் மதன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதை இவருடைய முதல் திரைப்படம் என்பதால் இயக்குநர் என்று சொன்னாரோ அதை உள்வாங்கிக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார். ஆனால் படம் முழுவதும் வசனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் இவரது நடிப்பு அவ்வளவாக வெளிப்படவில்லை.

ரதியை காதலிப்பதை மனதிற்குள் வைத்துக் கொண்டு அதை சொல்ல முடியாமல் தவிப்பதும், ரதியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி அதை பார்த்து சந்தோஷப்படும் நேரத்திலும், இறுதிக் காட்சிகள் தப்பித்து தப்பித்து ஓடுகின்ற எலி, பூனை திரைக்கதையிலும் கொஞ்சம் நம்மை பார்க்க வைத்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் ஹஸ்லி அவான் அப்படி ஒன்றும் பெரிய அழகில்லை. ஆனால் கேமராவுக்கேற்ற முகம். தேவையான நேரங்களில் அவருக்கு குளோசப் காட்சிகளை வைத்து பரவாயில்லாமல் அவரை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ரவுடியாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரனின் வில்லத்தனம் ரசிக்கும்படி இருந்தாலும் உடன் நடித்தவர்களின் ரியாக்ஷன் மொக்கையாக இருந்ததால் அந்தக் காட்சிகள் பாராட்டுகளை பெறவில்லை.

மேலும் படத்தில் நடித்திருந்த யுவராஜ் சுப்பிரமணியன், பசுபதி ராஜ், சரவணன் பழனிச்சாமி, தமிழ்செல்வன், தினேஷ் என்று பலரும் தங்களால் முடிந்த நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் திரையில் ஒலித்தன. ஆனால் நம் காதுகளில் அவ்வளவாக விழவில்லை. ஆனால் பின்னணி இசையில் கொஞ்சமேனும் தூங்குபவர்களை எழுப்பி விடுவதைப் போல அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பின்பு அதிகமான காட்சிகள் துரத்தலாக இருப்பதால் அந்த சேஷிங் காட்சிகளை மட்டும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒழிப்பதிவாளர் லோகேஷ் இளங்கோவன்.

இயக்குநர் கொண்டு வந்து கொடுத்த பூட்டேஜ்களை வைத்து தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு படமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் பட தொகுப்பாளர் பிரேம்.

படத்தின் கதை முதலிலேயே வில்லங்கமானது என்பதால் காமத்தின் முதல் படியான அந்த காதலை சரியான முறையில் ரசிகர்களுக்கு கடத்துவதற்கு இயக்குநரால் முடியவில்லை. பாதி படத்திற்கும் மேலாக காமம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதை எப்படி காதலாக மாற்றுவது என்பதில் இயக்குநர் குழம்பி போய்விட்டார் போலும்! அதனாலயே ஹீரோ, ஹீரோயினுக்குமான காதலை பாதி பாதியாக சொல்லி முடித்திருக்கிறார்.

ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் இருக்கிறது. ஆனால் அதை அவர் வெளிப்படுத்த தைரியம் இல்லாமல் இருக்கிறார். இப்படியே கடைசிவரையில் படத்தைக் கொண்டு போயிருப்பதால் தியேட்டரில் நிஜ காதலர்களுக்குக்கூட இந்தப் படம் பிடிக்காத ஒரு சூழலை உருவாக்கி விட்டது.

வசனங்களை பக்கம் பக்கமாக எழுதி வைத்து அனைவருமே சொற்பொழிவு கட்டுவதைப் போல வசனத்தை பேசிக்கொண்டே போக நமக்குத்தான் ரொம்பவே டயர்டாகிவிட்டது.

படத்தை துவக்கத்திலேயே பாலியல் தொழில் இந்தியாவில் எப்படி உருவானது அதை வளர்த்து எடுத்தது யார் என்கின்ற வரலாற்று உண்மையை எல்லாம் சொல்லிவிட்டு பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அதன் மீது எந்தவிதமான வெறுப்பு இல்லாமல் தாங்களாகவே மனம் உவந்து அந்த தொழிலை செய்வது போல வசனத்தை வைத்து தீட்டி இருக்கிறார் இயக்குநர்.

காதலிக்க வேண்டும் என்று நினைக்கும் ஹீரோவுக்கு வழியில் தொழிலாளியாக இருந்தாலும் அவள் மீதும் தனக்கு காதல் வந்துள்ளது. அவளும் ஒரு பெண்தானே என்றெல்லாம் சீரியஸாக பேச வேண்டிய வசனங்களை சொல்ல வேண்டிய விஷயத்தை பிளாக் காமெடி என்கின்ற ஒரு குழப்பத்தில் சொல்லி இருக்கிறார். இதுவே படத்தை நம்மால் முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விட்டது.

ஒரு குழப்பமான திரைக்கதையில் காதலுக்கு என்று சில நிமிடங்களை மட்டுமே ஒதுக்கி வைத்துவிட்டு மீதம் முழுக்க பாலியல் தொழிலையும், ரவுடிகளின் வாழ்க்கையும் சேர்த்து சொல்லி இருப்பதால் நமக்கு மூன்று வித கதைகளை ஒருசேர பார்த்த களைப்புதான் தோன்றியது.

இயக்குநர் அடுத்த படத்தில் ஒரு தெளிவான முடிவையெடுத்து குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு நல்ல கதையுடன் வந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 3 / 5

Our Score