முன்னாள் நடிகையும், பிரபல நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுக்கிறார்.
தமிழ்த் திரையுலகின் மூத்த நடன இயக்குநரான ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம், ‘சார்லி சாப்ளின்’ படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்தார். ‘ஸ்டைல்’ என்கிற தமிழ்ப் படத்திலும் நடித்திருந்தார்.
பின்பு திருமணமாகி அமெரிக்கா சென்றவர் 3 வருடங்களில் திரும்பவும் சென்னை வந்து திரையுலகில் தற்போது வெற்றிகரமான ஒரு நடன இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்போது இவர் இயக்குநராக மாறியிருக்கிறார். திரையுலகில் நடனமாடும் பெண்களின் வாழ்க்கைக் கதையொன்றை அடிப்படையாக கொண்டு ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை உருவாக்கப் போகிறாராம்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் காயத்ரி ரகுராம், “ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையக் கதையாக கொண்ட படம்தான் இந்த ‘யாதுமாகி நின்றாய்’.
இந்த கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும் பல கதைகள் உண்டு. அவைகளை இந்த உலகம் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் அழுகுரல் நமது உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட்டாக வேண்டும்.
குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் ஒரு சிறுமி, சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் தன் வாழ்க்கையில் பயணிக்கிறாள். ஆனால், நினைத்ததற்கும் முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளையும், அவலங்களையும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே இந்தப் படத்தின் திரைக்கதையாகும்.
தாமரை என்ற நடனப் பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது யாதுமாகி நின்றாள்.
இது நம்பிக்கையின் கதை.. ஒரு அப்பாவி இளம் பெண்ணின் கதை.. மனதால் உணரப்பட வேண்டிய இக்கதை திரையுலகில் தனித்து நிற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார் தன்னம்பிக்கையோடு.
படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.