டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகிறார்..!

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகிறார்..!

ஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை.’ இப்படத்தின் மூலம் இயக்குனர்  அஸ்லம் தயாரிப்பாளராகிறார்.  இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பாகன்’ படத்தினை இயக்கியவர்.  பெல்ஜியத்தில் வாழும் இந்தியர் ராமதாஸ், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்து படத்தைத் தயாரிக்கிறார்.

நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமின்றி, ‘ஆடுகளம்’ படத்திற்காக இவர், தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக அறிமுகமாவது பற்றி தினேஷ் கூறும்போது, “மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதற்கு முன் நிறைய பேர் என்னை நடிக்க அழைத்தபோதெல்லாம் மறுத்துவிட்டேன். ஆனால் இந்தக் கதை என்னை நடிப்புக்குள் இழுத்து வந்துவிட்டது. நடனத்தையும் தொடர்ந்து கொண்டு, கிடைக்கிற இடைவெளியில் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறேன். தினேஷ் மாஸ்டர் இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கிறார்னு கொளுத்திப் போட்டா யாரும் நம்பிடாதீங்க. நமக்கு டான்ஸ் பொழப்பு ரொம்ப முக்கியம் பாஸ்” என்று சிரித்துக்கொண்டே அடக்கமாகச் சொல்கிறார் மாஸ்டர்.

‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘கலகலப்பு’, ‘பட்டத்து யானை’, ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’ போன்ற படங்களில் நடித்தவர்.

‘சித்திரம் பேசுதடி’,  ‘அஞ்சாதே’, ‘மௌனகுரு’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ்முத்துசாமி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் ‘காதல்’ படத்தின் இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார்.

காளிரங்கசாமி இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மேலும் ‘பாகன்’ படத்தில் அஸ்லம் அவர்களிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் காளிரங்கசாமி. அப்போது அஸ்லம் இந்த ‘ஒரு குப்பைக் கதை’யினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தை தானே முன்வந்து தயாரிப்பதாகவும் தெரிவித்து அவரையே இயக்குனராக்கியுள்ளார்.

அதென்ன ‘ஒரு குப்பைக் கதை’? டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என்றால், “என்னப்பா படத்தை குப்பை படம்னு சொல்றேன்னு நிறைய பேர் கேட்டாங்க.. அவங்க அப்படி கேக்கும்போது அதுல ஒரு அக்கறை தெரிஞ்சது.. அதுவுமில்லாமல் இப்படி கேட்டுக் கேட்டே படம் எல்லாரிடமும் போய் சேர்ந்திரும்னு தெரிஞ்சிக்கிட்டேன். முதல்ல ஒரு படத்தின் தலைப்பு என்னடா இதுன்னு  சரியாவோ இல்ல தவறாகவோ மக்களைப் போய்ச் சேர்ந்திரணும்.. இது அப்படி பரவக் கூடிய ஒரு தலைப்பு.. படம் பார்க்கும்போது அல்லது படம் பார்த்துட்டு வெளியே வருகிற எல்லாரும்  இந்த படத்துக்கு இந்த தலைப்புதான் சரின்னு சொல்லிட்டுப் போவாங்க. அப்படியொரு கதை இருக்கு உள்ளுக்குள்ள..” என்கிறார் படத்தின் இயக்குனர்  காளிரங்கசாமி.

குப்பைக்குள் ஒரு வைரம் இருக்கிறதா என்பதை இந்தக் ‘குப்பை’ வந்தவுடன் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..!

Our Score