full screen background image

டமால் டுமீல் – வரிவிலக்கு பற்றி கவலைப்படாத இயக்குநர்..!

டமால் டுமீல் – வரிவிலக்கு பற்றி கவலைப்படாத இயக்குநர்..!

திரையுலகில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் படத்தின் டைட்டிலுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று நாயாய் கத்தி வரும் சூழலிலும் ‘டமால் டுமீல்’ என்றே வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ. காரணம் கேட்டால்.. அதுதான் கதை என்கிறார். இவர் ஷங்கரிடம் இயக்கப் பணியைக் கற்றுக் கொண்டவராம்.

இந்தப் படத்தின் கதைக்கான பிளாஷ்பேக்கை அவர் சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..  “பெங்களூரில் ஒரு கொள்ளையன் ஏ.டி.எம். சென்டரில் ஒரு பெண்ணைத் தாக்கிவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதை சிசிடிவியில் பார்த்து நாடே அதிர்ந்து போனது.. அதுதான் இந்தப் படத்தின் மெயின் சப்ஜெக்ட்.  அப்படி கொள்ளையடித்துச் செல்லும் குழுவை விரட்டும் ஒரு குழு. அதுதான் ‘டமால் டுமீல்’. திரில்லர் டைப் படம்தான். ஆனா திரைக்கதையில் காமெடிதான்.. ஏன்னா இந்த மாதிரி படங்களை காமெடியோட கலந்து கொடுத்தால்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.  

ஆனால் கூடவே அவர் சொன்ன ஒரு தகவல்தான் இடிக்கிறது. அந்த பெங்களூர் சம்பவத்தில் அந்த நபரை பிடித்துவிட்டதாகச் சொன்னார். கொலையாளி பணத்துடன் மாட்டிக் கொண்டார் என்றார் இயக்குநர். ஆனால் இப்போதுவரையில் உண்மையான குற்றவாளி பிடிபடவில்லை என்பதுதான் உண்மை.

கதை ஓகே ஆனவுடன் ஹீரோவுக்காக ரொம்பவும் கஷ்டப்படவில்லையாம். இவர் பார்த்த சமயம் டிவியில் மங்காத்தா ஓடிக் கொண்டிருக்கிறதாம். அதிலும் வைபவ் நடித்த காட்சிகள் வர.. ஓகே.. இவரையே வைச்சு எடுத்திரலாம் என்று முடிவெடுத்தாராம் இயக்குநர். ஹீரோவுக்கு மங்காத்தாவால் கிடைத்த வாய்ப்பு..!

இதில் இரண்டு மெயின் வில்லன்களான கோட்டா சீனிவாசராவ் மற்றும் சாயாஜி ஷிண்டே இருவருக்குமிடையில் மாட்டிக் கொள்ளும் அப்பாவி திருடனாக வைபவ்…

“டமால் டுமீல்’ என்று பெயர் வைத்திருக்கிறீர்களே.. வரி விலக்குக் கிடைக்குமா?” என்று கேட்டபோது, அப்பாவியாய் “தெரியலை ஸார்..” என்றார். “பெயரை மாத்துவீங்களா..?” என்று கேட்டவுடன் “அப்படியொரு ஐடியாவே இல்லை ஸார்.. “இதுதான் இந்தப் படத்தோட கதைக்குப் பொருத்தமா இருக்கு..” என்கிறார். “அப்போ வரிவிலக்குக் கிடைப்பது கஷ்டமாச்சே” என்று அட்வைஸ் செய்தால், “பார்க்கலாம்..” என்று சிரிக்கிறார். இந்த விஷயத்துலெல்லாம் அட்வைஸ்தானே செய்ய முடியும்..

இன்னிக்கு அதுவும் போச்சு.. வரி விலக்கு அளிக்கும் சட்டத்துக்கே கோர்ட் தடை போட்டுவிட்டதால் இவங்க படத்தை ரிலீஸாக்கும்போது ஒருவேளை அது இருக்கோ.. இல்லியோ..?

ஹீரோ வைபவிற்கு இது புது அனுபவமாம். தனி ஹீரோவாச்சே.. ‘மங்காத்தா’ உட்பட இதுக்கு முன் நடித்த பல படங்களிலும் துணை நடிகராகவே நடித்திருப்பதினால் இதில் முனைந்து நடித்திருக்கிறாராம். “கண்டிப்பா இதுக்கப்புறம் நானும் ஒரு ரவுண்ட் வருவேன்னு நினைக்கிறேன்..” என்றார் நம்பிக்கையோடு.. இவர் நயன்தாரவோடு நடித்திருக்கும் ‘நீ எங்கே என் அன்பே’ படம் விரைவில் வெளியாகவிருப்பதால் அதையும் ஆவலோடு காத்திருப்பதாகச் சொன்னார்..

ஹீரோயின் ரம்யா நம்பீசனுக்கு தனக்கு நல்ல வேடம்ன்னு தெரிஞ்சால்தான் அதில் கமிட் ஆவாராம்.. அப்படியொரு படம்தானாம் இது.. எனக்குக் கிடைத்தே ஆகணும்ன்றது கண்டிப்பா கிடைக்கும். இதுல எனக்கு நம்பிக்கையிருக்கு.. மலையாளப் படங்கள்ல அதிகமாக நடிச்சு மாட்டிக்கிட்டதால தமிழ்ல அதிகம் படங்களை செய்ய முடியலை.. இனிமேல் செய்ய முயற்சிக்கிறேன்.. ஆனால் தமிழைவிட மலையாளத்தில் நடிப்பதுதான் எனக்கு பெரிய வசதியா இருக்கு.. என்றார்.. அதையும் மீறி நல்ல கதைகள் கிடைத்தால் நிச்சயம் தமிழில் தொடர்வேன் என்றார்.

பை தி பை.. கொசுறு செய்தி. இந்தப் படத்திலும் ரம்யா நம்பீசன் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். பாடலும் தொடரும், நடிப்பும் தொடரும் என்கிறார். ஒருவேளை பாடல் பாட வாய்ப்பு கிடைத்தால்தான் அதில் நடி்பபேன் என்று மறைமுகமாக கண்டிஷன் போடுகிறாரோ..?

டமால் டுமீலுக்கும் பிரியாணிக்கும் இடையில் ஒரேயொரு தொடர்பு.. இரண்டு படங்களிலுமே ஒரேயொரு ஷாட் மட்டும் ஒண்ணு போலவே இருக்கு. பிரியாணில கார்த்தி மண்டி போட்டு உட்கார்ந்திருக்க அவரது தலைக்கு துப்பாக்கி குறி வைத்திருக்கும். இதில் வைபவ் அதுபோல் அமர்ந்திருக்க துப்பாக்கி இவரது தலையையும் குறி வைத்திருக்கிறது..!

திரைக்கதை மட்டும் அது மாதிரியில்லாமல் இருந்தால் நல்லதுதான்..!

Our Score