ஜெயம் ரவி – அரவிந்த்சாமி – ஹன்சிகா மோத்வானி மூவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது.
‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே.கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த ‘போகன்’ திரைப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கி இருக்கிறார்.
‘போகன்’ படத்தின் பாடல்கள் தற்போது இசை பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமானின் இசை மிகப் பெரிய பலம் என்று உறுதியாகவே சொல்லலாம்.
இந்தப் படத்தில் பணியாற்றியது பற்றிப் பேசிய இசையமைப்பாளர் டி.இமான், “இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன் என்று சொல்வதைவிட, எங்கள் கூட்டணியோடு மீண்டும் இணைந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். எங்களின் கூட்டணியில் தற்போது அரவிந்த்சாமியும் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம் பெற்ற புதுவிதமான கானா பாடலான ‘டண்டணக்கா’ பாடலை போல இந்த படத்திலும் ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ்த் திரையுலகின் நடிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யும்விதமாக ‘டமாலு டுமீலு’ பாடலை உருவாக்கினோம். இந்த பாடலுக்கு தன்னுடைய குரலால் மேலும் சிறப்பு சேர்த்து இருக்கிறார் பாடகரும், இசையமைப்பாளருமான அனிரூத்.
‘போகன்’ படம் இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருப்பதால், பின்னணி இசையில் நான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன். வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் ‘போகன்’ திரைப்படம் அதனை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது…” என்று உற்சாகமாக கூறினார்.











