ஏ.ஜி.எஸ். என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.
நவீன தொழில் நுட்பத்துடன் உலகத்தர தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இந்தப் படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, வி.டி.வி.கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பிஎனேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்ற, நிர்வாக தயாரிப்பை எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம் கவனிக்கிறார்.
இந்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செல்வின் ராஜ் சேவியர், இயக்குநர்கள் சிம்புதேவன், சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.
மாபெரும் வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு ஏ.ஜி.எஸ். என்டெர்டைன்மென்ட்டின் அடுத்த படைப்பாக வரவிருக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, இந்நிறுவனத்தின் 24-வது தயாரிப்பு ஆகும்.
ஏ.ஜி.எஸ்.ஸின் 23-வது திரைப்படமாக ‘லவ் டுடே’ இந்தி பதிப்பும், 25-வது படமாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’-ம், 26-வது தயாரிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன் 2’-ம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், “ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்…” என்று கூறினார்.
ஒரு புறம் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வரும் ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட், மறுபுறம் ‘லவ் டுடே’ போன்று வளர்ந்து வரும் மற்றும் புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அந்த வரிசையில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ அமையும் என்று பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.









