ஜி.எஸ்.சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம் ‘காம்ப்ளக்ஸ்’.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடிக்கிறார். நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடித்தவர்.
மேலும் ஆரத்யா, ‘ஆடுகளம்’ நரேன், எம்.எஸ்.பாஸ்கர், பவா செல்லத்துரை, ‘குக் வித் கோமாளி’ சுதர்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவினை பர்வேஷ் செய்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களை ஞானகரவேல், பாலா சீத்தாராமன் இருவரும் எழுதியுள்ளார்கள். படத் தொகுப்பை சதீஷ் சூர்யா செய்கிறார். மாய பாண்டியன் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
படத்திற்கு கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன். இவர் இயக்குநர் பாலாவிடம் ‘நாச்சியார்’, ‘வர்மா’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்தக் ‘காம்ப்ளக்ஸ்’ படம் பற்றி இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் பேசும்போது, “உருவ கேலி செய்வது தவறு என்று சுட்டிக் காட்டும் கதையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு. எல்லா காலகட்டத்திலும் உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள்கூட வருகிறது. மேலும், இதை வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளே எடுத்திருக்கிறார்கள்.
அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசிவிட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலும், உன்னை யாராவது உருவ கேலி செய்தால் அதை பொருட்படுத்தாமல் நீ வெற்றி பெற்று விட்டால் பிறகு உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று தவறான அறிவுரையும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது.
ஆகையால், உருவ கேலி செய்வது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படத்தை எடுத்திருக்கிறேன்.
பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்புவரை முதல் மதிப்பெண் வாங்கும்வரை நானும் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன். இங்கு வெற்றி பெற்ற அனைவருமே ஒரு காலத்தில் உருவ கேலி செய்யப்பட்டவர்கள்தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் முருகதாஸ் ஆகிய வெற்றியாளர்களின் சாதனைக்கும், உருவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கேலி பேசுபவர்களுக்கு அறிவுரை கூறும் படமாக இருக்காது. மாறாக கேலிக்கு ஆளாகுபவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
என் கதையில் உள்ள கேரக்டருக்கு பொருந்தக் கூடியவரை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதற்காக, உருவம் குறைவுள்ள மனிதரை வைத்து இயக்கி இருக்கிறேன்.
விருதுக்கான கலை படமாக இல்லாமல், மக்களுக்கான கமர்ஷியல் படமாக இதை எடுத்திருக்கிறேன். மேலும், உருவ கேலி என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகளாவிய அனைத்து இடங்களிலுமே உள்ளது. மற்ற சமுதாய பிரச்சனைகளைவிட முக்கியமாக முதலில் பேச வேண்டிய பிரச்சனை இதுதான்.
உருவ கேலி மட்டுமல்ல, அவர்கள் அணியும் உடைகளில் இருந்து அனைத்து விஷயங்களிலுமே இந்த கேலி இருக்கிறது. உருவ கேலிக்கு ஆளானவர்கள் பலரை நேரடியாக நான் சந்தித்துப் பேசினேன்.
அந்நேரத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனவலி, வேதனை, அழுகை என்று அவர்களோடு பேசியதில் தெரிந்து கொண்டேன். பிறகு இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதுபோன்ற விஷயங்களை ஏன் ஊக்குவிக்கிறார்கள் என்பதை ஆழமாக யோசிக்கும்போது, ஒருவர் குண்டாக இருக்கிறார் அல்லது ஒல்லியாக இருக்கிறார் என்றால் அவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தன்னுடைய உடலை குறைத்துக் கொள்ளலாம். அல்லது எடையை கூட்டிக் கொள்ளலாம். மற்றும் கருமை நிறத்தில் இருப்பவர்கள் தங்களை சிகப்பாக்கி கொள்ள சிகப்பழகு கிரீம் பூசிக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியின் இடையில் வரும் விளம்பரங்கள்தான் இதனை ஊக்குவிக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.
மக்களை உளவியல் ரீதியாக பயன்படுத்தி இதற்குப் பின் ஒரு பெரிய வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. இதை இந்தப் படத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.
திருநெல்வேலி மற்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம்.. மற்ற பணிகளை இன்னும் 50 நாட்களில் முடித்து விடுவோம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும்…” என்றார் இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்.