full screen background image

“ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்படும்” – ‘கோமாளி’ நாயகன் ஜெயம் ரவி அறிவிப்பு

“ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்படும்” – ‘கோமாளி’ நாயகன் ஜெயம் ரவி அறிவிப்பு

வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.வேலனின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘கோமாளி’. இந்தப் படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவைப் பற்றி கிண்டல் செய்திருந்தார்கள். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கோபத்தையும், ஆத்திரத்தையும் கிளப்பியது. அதோடு நடிகர் கமல்ஹாசனும் இதைப் பார்த்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே.வேலனுக்கு போன் செய்து தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

இதையடுத்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.வேலனும், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியை நீக்கிவிடுவதாக அறிவித்தனர்.

இதற்குப் பிறகும் ரஜினி ரசிகர்கள் அடங்காமல், சமூக வலைத்தளங்களில் நடிகர் ஜெயம் ரவியை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் நடிகர் ஜெயம் ரவியும் இந்தக் ‘கோமாளி’ படத்தில் இடம் பெற்ற, ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக தனது வருத்தத்தைத் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதுதான் :

நான் நடிக்க ஆரம்பித்தபோதிலிருந்தே  என்னைப் பற்றிய நேர்மையான, தூய்மையான பிம்பம் இருப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறேன்.

அதனால்தான் இதுவரை நான் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கவில்லை. என்னுடைய எண்ணங்களும் நிலைப்பாடுகளும் நான் ஏற்றிருக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டிருக்குமேயன்றி, எல்லைகளைத் தாண்டியவையாக ஒருபோதும் இருந்ததில்லை.

எல்லோரிடத்திலும் இனிமையாகவும், புரிதலோடும் பழகும் நண்பனாகவே இருந்து வருகிறேன். எல்லோராலும் விரும்பப்படும் பரஸ்பரத் தோழனாகவே திரையுலகில் வலம் வருகிறேன்.

நான் நடித்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

வெளியாவதற்கு முன்னரே இந்தப் படம் ஒரு முழு நீள, மகிழ்ச்சி ததும்பும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பப் படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறது.

இந்த முன்னோட்டத்துக்கு  மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருந்தாலும், அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான  குறிப்பிட்ட ஓர் அம்சம், தலைவரின் ஒரு சில ரசிகர்களின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டதை உணர்ந்துள்ளேன். 

அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தைக் காண மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் நானும் காத்திருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது நடிப்பும் ஸ்டைலும் எங்கள் இயல்பிலேயே ஊறிப் போயிருப்பதும் தவிர்க்க இயலாத விஷயங்களாகும். அப்படியிருக்கும்போது அவரையோ, அவரது ரசிகர்களையோ எந்தவிதத்திலும் அவமதிக்கும் எண்ணம் எங்களுக்குத் துளியும் கிடையாது.

முன்னெப்போதைக் காட்டிலும் அவர் மேல் கூடுதல் பாசம் செலுத்திய தருணம், அவர் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டியபோது ஏற்பட்டது. எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார்.

இருந்தபோதும்,  எந்தவிதமான  உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியால் அவரது ரசிகர்களில் ஒரு சிலர் கசப்புக்கு ஆளாகி, எதிர்மறைப் பின்னூட்டங்கள் இட நேர்ந்த காரணத்தால், அந்தப் பகுதியைப் படத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கவுள்ளோம் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

15.8.2019 அன்று திரையரங்குகளில் ‘கோமாளி’யாக உங்களைச் சந்திக்கும் தருணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நன்றி.

வணக்கம்.

Our Score