full screen background image

நடிகைகளிடம் மேக்கப்பை குறைக்கச் சொல்றதுக்கே பயப்படுவார் இயக்குநர் ஜனநாதன்..!

நடிகைகளிடம் மேக்கப்பை குறைக்கச் சொல்றதுக்கே பயப்படுவார் இயக்குநர் ஜனநாதன்..!

இன்றைக்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் விமர்சனங்களில் நடிகர்கள், இயக்குநருக்கு அடுத்து பாராட்டப்படுபவர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்தான்.

Cinematographer NK Ekambaram Working Stills (2)

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் கிராமத்தில், ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஏகாம்பரம். பொறியியல் படித்துவிட்டு எம்.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவருக்கு சினிமா மீது தீராத காதல்.. இதனால் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றார். வெளியில் வந்த பின்னர், பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவாவிடம் உதவியாளராக பணியாற்றினார்.

ஜனநாதன் இயக்கிய முதல் இரண்டு படங்களான ‘இயற்கை’, ‘ஈ’ படங்களில் ஏகாம்பரம்தான் ஒளிப்பதிவாளர். ஜனநாதனின் மூன்றாவது படமான ‘பேராண்மை’யில் ஏகாம்பரம் பணியாற்றவில்லை. அவர் அப்போது விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போனதால், ‘பேராண்மை’யில் அவரால் பணியாற்ற முடியவில்லை. எனினும் தனது உதவியாளர் சுரேஷூக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்து அவரை ஒளிப்பதிவாளராக உயர்த்தினார் ஏகாம்பரம்.

Cinematographer NK Ekambaram Working Stills (11)

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஏகாம்பரம் தனது திரையுலக அனுபவங்களையும், ‘புறம்போக்கு’ படத்தின் அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“இந்த ‘புறம்போக்கு’ படத்துக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். ஜனநாதன் இயக்கும் படங்களில் சம்பளம் குறைவாகத்தான் கிடைக்கும். ஆனால், அப்படங்கள் நம்மை அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டுபோய் விடும். ‘புறம்போக்கு’ படத்திலும் இதுதான் நடந்திருக்கிறது.

Cinematographer NK Ekambaram Working Stills (12)

இதற்கு முக்கிய காரணம், இயக்குனர் ஜனநாதன். ஒரு படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் இயக்குனரின் கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் மதிப்பளிக்க வேண்டும். உயிர் கொடுக்க உழைக்க வேண்டும். இந்தப் படத்தில் அதனை அப்படியே கடைப்பிடித்திருக்கிறேன்.

இது ஒளிப்பதிவாளருக்கு சவாலான படம். படத்தில் கஷ்டப்பட்ட சீன்கள் என்றால் குலுமணாலி பனிமலை, ராஜஸ்தான் பாலைவனம், சிறைச்சாலை செட் என மூன்று வித்தியாசமான களங்களில் படமாக்க வேண்டியிருந்ததுதான்.

Cinematographer NK Ekambaram Working Stills (15)

சிறைச்சாலை செட்டில்தான் அதிக காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும் காட்சிகள் ஒவ்வொன்றின் கோணமும், தோரணையும் வேறுவிதமாக இருப்பது போல பார்த்துக் கொண்டோம்.

ஒரு படத்தின் ஒளிப்பதிவு என்பது கதைக்கு உட்பட்டே இருக்க வேண்டும். இந்தப் படத்தின் திரைக்கதையை ஷூட்டிங்கிற்கு முன்பாகவே ஜனநாதன் என்னிடம் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.

முதல்ல ஆர்யா போர்ஷனைதான் ஷுட் பண்ணினோம். அதற்கப்புறம் விஜய் சேதுபதி போர்ஷனை சென்னையில எடுத்தோம். கடைசியாதான் ஜெயில் செட் போட்டு ஷாம் போர்ஷனை எடுத்தோம்.

Cinematographer NK Ekambaram Working Stills (3)

கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாயில் ஜெயில் செட்டை போட்டோம். அதுவும் கடைசி நேரத்தில் கூடுதல் செலவாக இன்னுமொரு 50 லட்சத்தையும் இழுத்திருச்சு. கலை இயக்குனருடன் பேசி ஜெயில் செட்டை ஒளிப்பதிவுக்கு ஏற்றாற்போல் கலர் கரெக்சன் செய்து கொண்டேன்.  ஷாம் இருக்கும் அலுவலகம் மட்டுமே கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்கும். மற்றபடி படத்தில் காட்டப்பட்டுள்ள சிறைச்சாலையை ஒரு செட் என்று யாருமே நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தத்ரூபமாக அமைத்திருந்தோம்.

பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்த படத்தை எடுத்தாலும், செலவை குறைச்சுக்கவேயில்ல ஜனநாதன் சார். ஷாமும், ஆர்யாவும் ஜெயிலுக்குக் கிளம்பும்  ஹெலிகாப்டர் ஷாட் எடுக்கறதுக்காக பெங்களூர் போனோம். நாங்க போன நேரம் எலெக்சன் டைம். எல்லா தலைவர்களும் ஹெலிகாப்டரை எடுத்துட்டு போயிட்டாங்க. வேற வழியில்லாம சில காட்சிகளை மட்டும் எடுத்துட்டு திரும்பிட்டோம். அதுலயே ஏகப்பட்ட செலவு. இருந்தாலும் ஜனநாதன் அதைப் பொறுத்துக்கிட்டாரு. தேர்தல் முடிஞ்சதும் மறுபடியும் அதே பெங்களுருக்கு போய் ஹெலிகாப்டர் ஷாட் எடுத்தோம். அந்த ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் வாடகை. நாள் முழுக்க வச்சுருந்து எடுத்தோம்..

கதாபாத்திரங்களின் மேக்கப்புக்கும் அதிக கவனம் எடுத்துக் கொண்டோம். விஜய் சேதுபதியின் முகத்தில் எப்போதுமே ஆயில் இருப்பது போன்றே இருக்கும். அதைத் தவிர்க்க நினைத்து சிலவற்றை செய்துதான் அதை நீக்கினோம். ஷாம் மட்டுமே கொஞ்சம் கலராகத் தெரிவார்.

படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது கார்த்திகா முழு மேக்கப்பில் வந்துவிட்டார். அவரிடத்தில் யார் போய் சொல்வது என்று குழப்பம். யாரும் போக மாட்டேன்றாங்க. அப்புறம் நானே போய் தயங்கித் தயங்கி.. அவங்களோட குயிலி என்கிற போராளியின் கேரக்டரை பத்தி எடுத்துச் சொல்லி இதுக்கு மேக்கப் இல்லாமல் இருக்கணும்னு சொல்லித்தான் மேக்கப்பை குறைத்தோம்.

Cinematographer NK Ekambaram Working Stills (10)

ஆனாலும், பனிமலைக் குகையில் அவர் வெடிகுண்டைப் பொருத்திக் கொள்ளும் காட்சியில் நடித்தபோது, வெளியே பயங்கர குளிர். அதனால் கார்த்திகாவின் முகத்தில் தோல் வறண்டு கொப்பளம் வந்திருச்சு. அதை மறைக்க அந்தக் காட்சியில் மட்டும் மேக்கப் போட்டு மறைச்சோம். அந்த சீன்ல கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா இது தெரியும்..

‘இயற்கை’ படத்துல நடிக்கும்போது குட்டி ராதிகாகிட்ட  மேக்கப்பை குறைக்கச் சொன்னப்ப அவர் அழுது ஒப்பாரியே வைத்துவிட்டார். அதிலிருந்து ஹீரோயின்ஸ் யார்கிட்டேயும் மேக்கப்பை குறைக்க சொல்லணும்னா இயக்குநர் ஜனநாதன் ரொம்ப சங்கடப்படுவார். நான்தான் ஆர்ட்டிஸ்ட்கிட்ட பேசுவேன். அந்த வகையில் நயன்தாரா பெஸ்ட்.  

‘ஈ’ படத்தின் ஷூட்டிங்கின்போது கிளப் காட்சிகளில் நடிக்கும்போது எவ்வளவு மேக்கப் வேண்டுமானாலும் போட்டுக்குங்க. ஆனா சேரிக்கு வந்த பின்பு மேக்கப் வேண்டாம் என்று நயன்தாராவிடம் சொன்னோம். நயன்தாராவும் அதைப் புரிஞ்சுக்கிட்டு மேக்கப் போடாமலேயே நடித்துக் கொடுத்தார்..” என்றார் முத்தாய்ப்பாக.

இதுவரையிலும் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் 18 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் ஏகாம்பரம்.

இவருடைய திரையுலகப் பயணப் பட்டியல் இதோ :

தமிழன் (தமிழ், 2002)

இயற்கை (தமிழ், 2003)

நீக்கு நேனு நாக்கு நுவ்வு (தெலுங்கு, 2003)

வேட்டம் (மலையாளம், 2004)

கள்வனின் காதலி (தமிழ், 2005)

ஈ (தமிழ், 2006)

பொறி (தமிழ், 2007)

கந்தசாமி (தமிழ், 2009)

டீ டானா டான் (ஹிந்தி, 2009)

துரோணா (மலையாளம், 2010)

சுறா (தமிழ், 2010)

காவலன் (தமிழ், 2011)

சிலா காஸியாபாத் (ஹிந்தி, 2013)

ஷார்ட்கட் ரோமியோ (ஹிந்தி, 2013)

போலீஸ் கிரி (ஹிந்தி, 2013)

காவல் (தமிழ், 2014)

புறம்போக்கு (தமிழ், 2015)

பாய் வெல்கம் டு இந்தியா (ஹிந்தி, 2015)

Our Score