கச்சத் தீவை மீட்க அடுத்தக் கட்ட போராட்டம் – இயக்குநர் விக்ரமன் அறிவிப்பு..!

கச்சத் தீவை மீட்க அடுத்தக் கட்ட போராட்டம் – இயக்குநர் விக்ரமன் அறிவிப்பு..!

இலங்கை ராணுவ இணையதளத்தில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு செய்தி வெளியானது. இது, தமிழ்நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக, அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெரும்பாலானவர்கள் கறுப்பு உடை அணிந்திருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.

‘‘இலங்கை தமிழர்களுக்காகவும், மீனவர்கள் பிரச்சினைகளுக்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கச்சத்தீவு, தமிழர்களின் தீவு. தமிழர்களுக்கு சொந்தமான அந்த தீவை மீட்பதற்காகவும் முதல்-அமைச்சர் குரல் கொடுத்து வருகிறார். ராஜபக்சே போர் குற்றவாளி என்றும், இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதன் உறுத்தல்-அச்சம் காரணமாகவே முதல்-அமைச்சரை பற்றி இலங்கை அரசு அவதூறு செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்’’ என்றார் சரத்குமார்.

நடிகர் விஜய் பேசும்போது, ‘‘இலங்கை தமிழர்களின் பிரச்சினை மற்றும் தமிழ் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அவரை பற்றி இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான இணையதளத்தில் அவதூறு செய்தி வந்து இருக்கிறது. இதை, ஒரு தாயை தவறாக பேசியதாகவே கருதுகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களின் கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்…’’ என்றார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது “முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ராஜபக்சே, பிரதமர் நரேந்திர மோடியிடமும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்…’’ என்றார்.

டைரக்டர் கே.பாக்யராஜ் “இந்த விஷயத்தில், மத்திய அரசு மவுனம் சாதிப்பது வருத்தமாக இருக்கிறது…” என்று கூறினார்.

நடிகர்-டைரக்டர் பார்த்திபன் பேசும்போது, “அம்மா என்ற உறவு தெய்வீகமானது. அந்த உறவை கொச்சைப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்…” என்றார்.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய ராஜபக்சேவை மன்னிக்கக் கூடாது. தண்டிக்க வேண்டும்…” என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பேசும்போது, “அரசியலில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முதல்-அமைச்சரை பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருப்பதும், திரையுலகின் அனைத்து பிரிவினரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதும், ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது, இலங்கை அரசுக்கு தரும் முதல் எச்சரிக்கை…” என்றார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஒரு ஆரம்பம்தான். அடுத்து, கச்சத்தீவை மீட்பதற்காக மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்…” என்றார்.

இயக்குநர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “சென்னையில் இலங்கை தூதரகம் உள்ள சாலையின் பெயரை, ‘தமிழ் ஈழ சாலை’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், இப்ராகிம் ராவுத்தர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், பிலிம் சேம்பர் பொருளாளர் கே.முரளிதரன், டிஜிட்டல் பட அதிபர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், திரைப்பட பாதுகாப்பு பேரவை தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர்கள் கில்டு செயலாளர் ஜாகுவார் தங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன செயலாளர் ஜி.சிவா, முன்னாள் தலைவர்கள் வி.சி.குகநாதன், ‘பெப்சி’ எஸ்.விஜயன், டைரக்டர்கள் சங்க பொருளாளர் வி.சேகர், பட அதிபர்கள் முக்தா சீனிவாசன், எஸ்.தாணு, சிவசக்தி பாண்டியன், கே.பிரபாகரன், காஜா மைதீன், பிரமிட் நடராஜன், எடிட்டர் மோகன், பி.எல்.தேனப்பன், எச்.முரளி, எல்ரெட் குமார், ஜான்மேக்ஸ், நடிகர்கள் பிரபு, சூர்யா, ஸ்ரீகாந்த், ஜீவா, விக்ரம் பிரபு, ஜித்தன் ரமேஷ், விவேக், கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், ஹரிகுமார், நவீன் சந்திரா, ஆரி, ஜே.கே.ரித்திஷ், நிழல்கள் ரவி, சரவணன், அஜய்ரத்னம், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், தம்பி ராமையா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், தாமு, வையாபுரி, நடிகைகள் குயிலி, ஆர்த்தி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, ஆர்.சுந்தர்ராஜன், கஸ்தூரிராஜா, சரண், எழில், பேரரசு, ஜனநாதன், பவித்ரன், ஏ.வெங்கடேஷ், சந்தானபாரதி, கே.நட்ராஜ், மனோஜ்குமார், பிரவின்காந்த், லியாகத் அலிகான், ஈ.ராமதாஸ், நாஞ்சில் பி.சி.அன்பழகன் பாடல் ஆசிரியர்கள் சினேகன், தாமரை, திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க தலைவர் விஜயமுரளி மற்றும் ஏராளமான திரையுலக கலைஞர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Our Score