தமிழ்த் திரைப்பட துறையில் அடுத்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக தொழிலாளர்கள்தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிப்பார்கள். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக முதலாளிகளாகிய தயாரிப்பாளர் சங்கமே வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. QUBE, UFO, PXD உள்ளிட்ட சில முறைகளில்தான் படங்கள் துல்லியமான அழகான வடிவத்தில் திரையிடப்பட்டு வருகின்றன.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்கள் ஒரு தியேட்டருக்கு இவ்வளவு என்று பணம் கட்டி வருகிறார்கள். சமீப நாட்களாக இத்தொகையே மிகப் பெரிய செலவினமாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களிடம் வெளியீட்டிற்கான கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி கேட்டார்கள். அவர்கள் இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து வந்தார்கள்.
இந்த நிலைமையில் தமிழகத்தை முந்திக் கொண்டு மலையாளம், ஆந்திரம், கர்நாடகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் சங்கங்களும், திரையுலக அமைப்புகளும் சேர்ந்து இந்த டிஜிட்டல் அமைப்புகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
சென்ற மாதமே இது குறித்து எச்சரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அனுப்பிய திரைப்பட அமைப்புகள் இப்போது முறைப்படி ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதையொட்டி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இதனை ஏற்று தாங்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது.
இதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“தொடர்ந்து பல வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டு மொத்தமாக மார்ச்-1-ம் தேதி முதல், எங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும்வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையுலகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே!!
இந்த நிலை மாற, நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்..”
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள் “நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் திரைத்துறையினர்தான் பேச்சுவார்த்தைக்கு முன் வர மறுக்கிறார்கள்…” என்று புகார் கூறியுள்ளனர்.
இந்த வாரத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்..!