‘சீயான்’ விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்குகிறார்.
இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22-வது தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளது.
‘சீயான்-61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை செல்வா தொகுக்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனத்தை சாண்டி மேற்கொள்கிறார். பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.
படத்தில் இடம் பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T.சிவா, S.R.பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V.குமார், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சர்பட்டா பரம்பரை’ என தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை அளித்து, கவனம் ஈர்க்கும் இயக்குநரான பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், முதன்முறையாக சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.