full screen background image

சித்தா – சினிமா விமர்சனம்

சித்தா – சினிமா விமர்சனம்

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன் பிறகு கடந்த 23 வருடங்களாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் சித்தார்த், அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறார்.

இப்போது தன்னுடைய சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சித்தா’.

இந்தப் படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரமான சஹஷ்ரா்ரீ, S.ஆபியா தஸ்னீம், பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – S.U.அருண் குமார், முகப்பு பாடல் – சந்தோஷ் நாராயணன், பாடல் இசை – திபு நைனன் தாமஸ், பின்னணி இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – பாலாஜி சுப்ரமணியம், படத் தொகுப்பு – சுரேஷ் A.பிரசாத், கலை இயக்கம் – C.S.பாலச்சந்தர், பாடல் வரிகள் – விவேக், யுகபாரதி & S.U.அருண் குமார், ஒலி வடிவமைப்பு – வினோத் தணிகாசலம், சண்டைப் பயிற்சி இயக்கம் – டேஞ்சர் மணி, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்., தயாரிப்பு – சித்தார்த்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான எஸ்.யு.அருண்குமார்தான் இந்த ‘சித்தா’ படத்தையும் இயக்கியிருக்கிறார்.

 பழனி நகராட்சியில் சூப்பர்வைசராக இருக்கிறார் சித்தார்த். இவருடைய அண்ணன் மகள் சுந்தரி. ஆனால் சிங்கா’ என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கிறார் சித்தப்பா சித்தார்த். அதேபோல் சுந்தரியும் சித்தப்பா சித்தார்த்தை ‘சித்தா’ என்று சுருக்கமாகவும், செல்லமாகவும் அழைக்கிறார். சித்தார்த்தின் அண்ணன் இறந்துவிட்டதால் அவருடைய அண்ணியான அஞ்சலி நாயரும் சித்தார்த்துடனேயே இருக்கிறார்.

சித்தார்த்தின் பழைய காதலியான நிமிஷா சஜயன் திடீரென்று பழனிக்கு வந்து அதே நகராட்சியில் துப்பரவுப் பணியாளராக வேலைக்கு சேர்கிறார். கருத்து வேறுபாடுகளை களைந்து சித்தார்த்தும், நிமிஷாவும் காதலித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் திடீரென்று சுந்தரி காணாமல் போக பித்துப் பிடித்தாற்போல் ஆகிறார் சித்தார்த். போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது. மறுபக்கம் தனது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நண்பருடன் இணைந்து சித்தார்த்தும் சுந்தரியைத் தேடுகிறார்.

இறுதியில் சுந்தரி கிடைத்தாளா இல்லையா..? அவளைக் கடத்தியது யார்..? எதற்காகக் கடத்தினார்கள்..? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் சுருக்கம்.

இந்தப் படத்தில் சித்தார்த்,  நிமிஷா, அஞ்சலி நாயர் போன்றவர்கள்தான் சினிமா அனுபவம் உள்ளவர்கள். ஆனால், மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் இதுவரை எந்தவொரு கேமரா அனுபவமும் இல்லாதவர்கள். ஒரு காட்சியில் அல்ல.. ஒரு வரி வசனம் பேசி நடித்திருப்பவர்களுக்குகூட முறையான பயிற்சி அளித்த பின்புதான் நடிக்க வைத்திருக்கிறார்களாம். அந்த உழைப்புக்கும், சின்சியாரிட்டிக்கும் படத்தில் பலன் தெரிகிறது.

சித்தார்த்தே இந்தப் படத்தில் புதிதாகத்தான் தெரிகிறார். சித்தார்த் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 21-வது வருடத்தில் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் அருண் குமார், சித்தார்த்தை மீண்டும் ஒரு நடிகராக அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தில் சித்தார்த்தை மிக சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

நண்பனின் அண்ணனை அடித்துவிட்டு குற்றவுணர்ச்சியில் நண்பனிடம் வந்து தயங்கி நிற்கும்போதும், அதே நண்பனிடம் செய்யாத குற்றத்திற்காக அடி வாங்கிக் கொண்டு கலங்குவதும்.. “சித்தா தொட்டாலுமா?” என்று குழந்தை கேட்கும்போது அதைக் கேட்டுவிட்டு சித்தார்த் காட்டும் உணர்ச்சிப் பிரவாகமும்…!! அசத்திவிட்டார் சித்தார்த். இதற்கு அவருடைய உடல் மொழியும், குரல் வளமும்கூட ஒத்துழைத்துள்ளது.

இன்னொரு பக்கம் நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி விட்டார். அவர் முதல் காட்சியில் எப்படி தோன்றுகிறாரோ, அதேபோல்தான் இறுதிவரையிலும் நடித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் ஏற்றம் இறக்கம் இல்லாமல்,  அந்த கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டுள்ளார்.

இறுதிக் காட்சியில் தனக்கு நேர்ந்த ஒரு பாலியல் கொடுமையைப் பற்றிச் சொல்லிவிட்டு சித்தார்த்தை பார்த்து “கையை எடுடா..” என்று ஆக்ரோஷமாக பேசும் காட்சியில் உணர்ச்சியைத் தூண்டிவிட்டிருக்கிறார் நிமிஷா. அதோடு அவர் டென்ஷனாகும்போது அவருக்கு வரும் வலிப்பு நோயைக் காட்டும் காட்சியில் இப்படியொரு நடிப்பாய்யா என்று நம்மை ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறார்.

சித்தார்த்தின் அண்ணியாக அஞ்சலி நாயர். மார்ச்சுவரியில் இருப்பது தன் மகள் இல்லை என்பது தெரிந்து வெகு இயல்பாக படபடப்பு தாங்காமலும், குறையாமலும் பேசும் இடத்தில் சோகத்தைக் கொடுத்திருக்கிறார். அதேபோல் மகளுக்கு எது குட் டச் எது பேட் டச் என்று சொல்லிக் கொடுக்குமிடத்தில் தனியான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

சுந்தரியாக நடித்த சிறுமியும், பொன்னியாக நடித்த சிறுமியும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். வில்லனாக நெற்றியில் விபூதியுடன் வலம் வரும் அந்த நடிகர் இந்த ஒரு படத்திலேயே “யாருய்யா இந்தாளு..?” என்று கேட்க வைத்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பெண், மிக இயல்பாக வசனம் பேசி நடித்து நம்மைக் கவர்கிறார். மேலும் படத்தில் நடித்திருக்கும் போலீஸ் உயரதிகாரிகள் உட்பட அனைவருமே நடிப்பதே தெரியாமல் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் ஒரு கேரக்டர் போலவே படம் நெடுகிலும் ஒரே மாதிரியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறது. நிபு நைனன் தாமஸின் இசையில் காதல் பாடலும், குழந்தையைத் தேடும்போது ஒலிக்கும் பாடலும் கேட்பதற்கு சுகமாகவும், வரிகள் கேட்கும்விதத்திலும் இசையுடன் அமைந்திருக்கிறது. சிச்சுவேஷனை கெடுக்காத வண்ணம் பின்னணி இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர்.

இந்தப் படம் குழந்தை கடத்தல், சஸ்பென்ஸ், திரில்லர் டைப் கதைதான் என்றாலும் அதை திரைக்கதையில் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்கள். கடத்தல் சம்பவத்தை சினிமாத்தனமாக சொல்லாமல், மிக இயல்பாக நடப்பதுபோல படமாக்கியிருக்கிறார்கள்.

இதுவொரு சர்வதேச படம் என்றே சொல்லலாம். அனைத்து  நாட்டு மக்களுக்கும் பொதுவான கதை. இது ஒரு கடத்தல், திரில்லர் பாணி படம் என்று சொல்லலாம். ஆனால், அதை முழுவதும் சினிமாத்தனமாக சொல்லாமல், மிக எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவுக்கும், அவரது அண்ணன் மகளுக்குமான பாசப் பிணைப்புதான் கதை, ஆனால், அதை மட்டுமே கதையாக சொல்லாமல், சமூகத்தில் நடக்கும் ஒரு குற்றத்தைக் கையில் எடுத்து, அதற்கு எந்தவித ஒப்பனையும் இன்றி, அப்படியே மிக அழகான ஒரு உலகத்தை இயக்குநர் இதில் கொடுத்திருக்கிறார்.

சித்தார்த் – நிமிஷா இடையிலான அழகான காதலும், சித்தப்பா, அண்ணன் மகள் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசப் போராட்டமும் ஒரு அழகியலாக இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து ஒரு இயல்பான கதையை இதுவரையிலும் யாரும் சொல்லாத வடிவத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்களோ, அதுபோன்ற உணர்வினை ரசிகர்களுக்கும் கடத்தியிருக்கிறார்கள் படக் குழுவினர்.

படத்தின் துவக்கத்தில் முதல் 10 நிமிடங்களுக்கு படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது போல்தான் கதை நகர்கிறது.

அதன் பிறகு படம் ரசிகர்களைப் பெரிதும் கட்டிப்போடும் விதத்தில் ஒரசீராகப் பயணிக்கிறது. ஒரு நிமிடம்கூட கவனம் சிதறாமல் படத்துடன் பயணிக்க வைக்கிறது இயக்குநரின் சிறப்பான இயக்கம். இடைவேளைக்குப் பிறகு அனைவரையும் சீட் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குநர்.

இதன் படைப்பு நேர்த்தியில் இயக்குநர் குழு தங்களது முழு அனுபவத்தையும், உழைப்பையும் கொட்டி இருப்பதால் சித்தார்த்தின் 23 வருட உழைப்பில் உருவான சிறப்பான, தகுதியான திரைப்படம் இது என்று அடித்துச் சொல்லலாம்.

“இதைவிட ஒரு நல்ல படத்தை இனிமேல் யாராலும் எடுக்க முடியாது…” என்று நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்தக் கருத்து மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் படைப்பாக்கங்கள் ஒன்றையொன்று மிஞ்சி வரத்தான் செய்யும். இது இயற்கை. அந்த வகையில் இதை மிஞ்சிய திரைப்படமும் வரத்தான் போகிறது. நாமும் பார்க்கத்தான் போகிறோம்..!

RATING : 4.5 / 5

Our Score