full screen background image

சிறகன் – சினிமா விமர்சனம்

சிறகன் – சினிமா விமர்சனம்

MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் துர்கா பேட்ரிக் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில், கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம்,  எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் வெங்கடேஷ்வராஜ்.S.

ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுதான். மற்ற கிரைம் திரில்லர் படங்களைவிட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் படமாக  உருவாக்கியிருக்கிறார்கள்.

பஞ்சன் சிறகன்எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும். அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும், இந்த வகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி, ஒரே நாளில் முடிகிறதோ அதேபோல், இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால் இந்தப் படத்திற்கு சிறகன்என்று பெயர் வைத்தார்களாம்.

ஒரு நாள் இரவில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜீவா ரவியின் மகன் காணாமல் போய்விடுகிறார். போலீஸ் தேடி வருகிறது. அதே இரவு நேரம், தனியாக இருக்கும் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞரான கஜராஜை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்தி வருகிறது. அவரை போலீஸ் காப்பாற்றும்போது, எம்.எல்.ஏ.வான ஜீவா ரவியை ஒரு இளம் வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், அந்த வழக்கறிஞரை தன்னைத் துரத்தி வந்த ரவுடிக் கும்பலே கொலை செய்துவிட்டதாகவும் சொல்கிறார் கஜராஜ்.

இந்த சம்பவங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலிக் புலன் விசாரணை செய்கிறார். அவர் விசாரிக்க, விசாரிக்க புதிய புதிய விஷயங்கள் தெரிய வருகிறது. இறுதியில் தெரிவது என்ன..? ஜீவா ரவியை கொலை செய்தது யார்..? கஜராஜை துரத்தியது யார்..? என்ற கேள்விகளுக்கெல்லாம் கிடைக்கும் விடைதான் இந்த ‘சிறகன்’ திரைப்படம்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் கஜராஜ் பல்வேறுவிதமான நடிப்புக்களை கொடுத்திருக்கிறார். முதல் சில காட்சிகளில் அவர் மீது சந்தேகம் வருவது போலவே நடித்துவிட்டு பின்பு “அதெல்லாம் இல்லை. நான் மிஸ்டர் கிளீன்” என்பதுபோல சாதித்திருப்பது சிறப்பு.

மகன் காணாமல் போன சோகம், விரக்தி, இயலாமையுடன் குழப்பமான மனநிலையுடன் நடந்து கொள்ளும் ஜீவா ரவியும் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் மாலிக்காக நடித்திருக்கும் வினோத் இன்னொரு பக்கம் தன்னுடைய சொந்தக் கதையில் இருக்கும் டிவிஸ்ட்டை கவனிக்க மறந்து வேலையில் தீவிரமாக இருக்கிறார். மேலும், ராணுவ வீரராக நடித்திருக்கும் அனந்த் நாக், சேட்டை செய்யும் மாணவனாக நடித்திருக்கும் பாலாஜி என்று பலரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள். 

பெண் ஆசிரியர்களாக நடித்திருக்கும் ஹர்ஷிதா ராமும், பௌசி ஹிதாயாவும் நமது பரிதாபத்தைப் பெற்றுவிட்டார்கள். முன் பாதியில் கோமாவில் படுத்துக் கிடந்தும், பின் பாதியில் பள்ளி ஆசிரியையாகவும் அழகாகத் தோன்றும் பவுசியா ஹிதயாவின் தோற்றமும் ரசிக்க வைத்திருக்கிறது.

மாணவன் பாலாஜியால் பாதிக்கப்படும் ஹர்ஷிதா ராமும் தனது இயல்பான அமைதியான குணத்தினால் பயந்துபோகும்போது இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

மாணவர்களின் தொடர் மிரட்டலுடன் தனக்கு ஆதரவு கொடுத்த பவுசியா தன் கண் எதிரேயே தாக்கப்பட்ட அதிர்ச்சியில் ஹர்ஷிதா தன் முடிவைத் தானே தேடிக் கொள்வதெல்லாம் சோகக் காவியம்.

அனைத்துக் கதாப்பாத்திரங்களையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் தொழில் நுட்பத்தில்தான் கொஞ்சம் கோட்டைவிட்டுவிட்டார்.

மீடியம் பட்ஜெட் படம் என்றாலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவில் வெளிச்சமே இல்லை. ஒளிப்பதிவாளர் சேட்டை சிக்கந்தரின் ஒளிப்பதிவு தரமில்லாதது என்று அடித்துச் சொல்ல்லாம். அதேபோல் இது போன்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு உயிராக இருந்திருக்க வேண்டிய K.ராம் கணேஷின் பின்னணி இசையும் சொதப்பலாகியிருக்கிறது!

எங்கயோ துவங்கும் கதை, பல இடங்களுக்கும் வலதும், இடதுமாக சென்று கடைசியாக ஓரிடத்தில் வந்து நின்று  முடிச்சவிழுக்கும்போது “அட.. கச்சிதமா முடிச்சிட்டாங்கய்யா…” என்று நாம் பாராட்டத்தான் வேண்டியுள்ளது. இப்படியொரு திரைக்கதையை எழுதியமைக்காக இயக்குநர் வெங்கடேஸ்வராஜூக்கு நமது பாராட்டுக்கள்.

திரைக்கதையில் புதுமையைச் செய்து படத்தை ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் வெகுஜன ரசினுக்கும் புரியாத வகையில் சிறகன்’ என்று இந்தப் படத்துக்குத் தலைப்பு வைத்திருப்பதுதான் மிகப் பெரிய குறை. தியேட்டருக்கு ரசிகனை இழுத்து வருவதைப் போல தலைப்புகளை வைத்தால்தான் குறைந்தப்பட்ச வருகையாவது கிடைக்கும். புதிய இயக்குநர்கள் இதைக் கவனித்தில் கொள்வது அவசியமாகும்.

ஆனாலும், சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள், காவல்துறையில் என்ன பதவி வகிக்கிறார்கள் என்பதை நமக்குச் சொல்லாமலேயே விசாரிக்க முனையும் அதிகாரிகள்.. படார், படாரென்று காட்சியை முடிக்கும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளைப் புகுத்தியிருத்தல் என்று எளிமையான கதையாடல் இருந்தாலும் சஸ்பென்ஸை கடைசிவரையிலும் கொண்டு சென்று காண்பித்திருக்கும் இந்தப் புதிய முயற்சிக்கு நம்முடைய பாராட்டுக்கள்..!

RATING : 3.5 / 5 

Our Score