full screen background image

சென்னை பைல்ஸ் முதல் பக்கம் – சினிமா விமர்சனம்

சென்னை பைல்ஸ் முதல் பக்கம் – சினிமா விமர்சனம்

கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்த ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி,  ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஜி.ஆர். இசையமைத்திருக்கிறார். விஷால் படத்தொகுப்பு செய்துள்ளார். அனீஸ் அஷ்ரஃப் எழுதி, இயக்கியுள்ளார்.

கேரள பைல்ஸ் முதல் பக்கம் என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்து கேரளாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதேபோன்ற ஒரு கொலையை கண்டுபிடிக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் படம் இது என்பதால், இந்தப் படத்துக்கும் ஒரு கவன ஈர்ப்புக்காக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போலும்!

படத்தின் நாயகன் வெற்றி. மதுரையில் குடியிருக்கிறார். அவருடைய தந்தை புகழ் பெற்ற மர்ம கதை எழுத்தாளர். இறந்து போன  தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எங்களுடைய புத்தகத்தில் எழுதுங்கள் என்று சொல்லி மனிதம் பத்திரிக்கை குழுவினர் வெற்றியை அணுகுகிறார்கள்.

இதற்காக வெற்றி சென்னைக்கு வருகிறார். அந்த மனிதம் பத்திரிகையின் சீனியர் ரிப்போர்ட்டரான ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். வெற்றியின் தந்தையின் வாழ்க்கை கதையை இருவரும் இணைந்து எழுதுகிறார்கள். இதன் ஊடேயே இவர்கள் இருவரின் நட்பும் வளர்கிறது. கொஞ்சம் காதலும் துவங்குகிறது.

இந்த நேரத்தில் தற்செயலாக ஆட்டோவில் பயணிக்கும்போது திருடனான ரெடின் கிங்ஸ் கொடுத்த நகைகளை பக்கத்து அமர்ந்திருக்கும் இன்னொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெற்றி நான் அந்த நகையில் எடுக்கவில்லை என்கிறார். ரெடினைப் பிடிக்க வந்த இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா இருவரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்.

வரும் வழியில் ஒரு இடத்தில் ஒருவன் இறந்து கிடக்க அது ஆக்சிடென்ட் இல்லை. கொலை தான் என்று அடித்து சொல்கிறார் வெற்றி. வெற்றி சொன்னது போலவே அந்த கேசை கொண்டு செல்கிறார் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா. கடைசியில் வெற்றி சொன்னது போலவே அது கொலையாகி இருக்க கொலைகாரர்களையும் எளிதாக கண்டுபிடிக்கிறார்.

ஒரு கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை பிடித்துவிட்டதால் வெற்றி மீது தம்பி ராமையாவுக்கு பாசம் ஏற்படுகிறது. கிரைம் எழுத்தாளரின் மகன் என்பதால் க்ரைம்களை உடைக்கும் திறனும் வெற்றியிடம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தம்பி ராமையா அவரைத் தன் கூடவே வைத்துக் கொள்கிறார்.

இதே சமயம் சென்னையில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகளுக்கான காரணம் தெரியவில்லை. அந்தக் கொலைகளுக்கு இடையிலான தொடர்புகளும் தெரியவில்லை. இந்த கொலைகளை விசாரிக்கவும் வெற்றியை தன் கூடவே வைத்துக் கொள்கிறார் தம்பி ராமையா.

வெற்றியின் உதவியோடு சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாக அவிழும் நேரத்தில் தம்பி ராமையாவின் மகள் தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கான காரணம் என்ன என்று விசாரிக்க விசாரிக்க கொலைகாரன் யார் என்பதும் கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வருகிறது.

உண்மையில் அந்த கொலைகாரன் யார்..? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்…? தம்பி  ராமையாவின் மகள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்…? இந்த விஷயங்களுக்கெல்லாம் விடைதான் இந்த சென்னை பைல்ஸ் முதல் பக்கம் என்ற திரைப்படம்.

வெற்றி எப்போதுமே அனாவசியமாக 5 மீட்டருக்கு மேல் நடிக்க மாட்டார். இந்தப் படத்திலும் அப்படித்தான் அவருக்கு என்ன வருகிறதோ அதை மட்டுமே செய்திருக்கிறார். சண்டை காட்சிகளில் பரபரப்பாக சண்டையிட்டிருக்கிறார். படத்துக்கு படம் அவருடைய சண்டையிடும் வீரமும், வேகமும் கூடுகிறது. ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் அதையும் தன்னுடைய ஒரு சிரிப்பினால் கடந்து செல்கிறார் என்பதுதான் நமக்கு சோதனையாக இருக்கிறது.

நாயகி ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளே ஆனாலும் வருவது தெரியவில்லை.. போவது தெரியவில்லை.. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். இவரை முந்தைய படங்களில் இயக்குநர்கள் மிக அழகாக பயன்படுத்தி இருந்தார்கள். அதோடு இவருக்கான பிளஸ் பாயிண்ட்டே இவருடைய குரல்தான். அந்தக் குரலுக்கும் அதிக வேலை கொடுக்காமல் ஏனோதானோ என்று இவரை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தம்பி ராமையாதான் படம் முழுவதும் வந்து ஸ்கோர் செய்து இருக்கிறார். முதல் சில காட்சிகளில் காமெடியான இன்ஸ்பெக்டராகவே வெளிப்பட்டு இருக்கிறார். ஒரு காமெடி இன்ஸ்பெக்டர் போலிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் சீரியஸாகி கடைசியில் சீரியஸ் இன்ஸ்பெக்டராக மாறிவிட்டார்.

தன்னுடைய மகளுக்கும், தனக்குமான பாசத்தைக் காட்டி அழுகும்போதும் தந்தை மகள் பாசத்தை காட்டும் காட்சிகளிலும் மனிதர் ஒரு பொறுப்பான அப்பாவாக கண்முன்னே தெரிகிறார். இந்தப் படத்தை தாங்கிப் படித்திருப்பது தம்பி ராமையா மட்டும்தான்.

தம்பி ராமையாவின் மனைவியாக நடித்த சிந்துஜா தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அழகான அம்மா. இனி வரும் காலங்களில் தமிழ் சினிமா துறையினர் இவரைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய மகளாக நடித்தவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய பாசம் வெளிப்படும் தருணமும் இறுதியில் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு தன்னைத்தானே நொந்து கொள்ளும் காட்சிகளிலும் ஒரு அழகான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இந்தப் படத்தை தயாரித்து அதில் வில்லனாகவும் நடித்திருக்கும் மகேஷ் தாஸ் தன்னுடைய உடல் அமைப்பால் மட்டுமே நம்மை மிரட்டி இருக்கிறார். அவருடைய முகமும். உடலும் ஒரு வில்லனுக்குரிய தகுதியை பெற்று இருக்கிறது. இவர் ஏன் கொலையாளியாக ஆனார் என்பதற்கான காரணம் மிக வலுவாக படத்தில் வைக்கப்பட்டிருப்பதால் இவருடைய கதாபாத்திரத்தை நம்மால் ரசிக்க முடிக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் தன்னுடைய கேமராவில் சென்னை முழுவதையும் சுற்றி சுற்றி படம் பிடித்திருக்கிறார். மீடியம் பட்ஜெட் படங்களுக்கு உரித்தான ஒளிப்பதிவுதான் என்றாலும் இதைவிடவும் தரமாக கொடுத்திருக்கலாம்.

பாடல்கள் கதையை நகர்த்துவதற்காக உதவி இருக்கின்றன. ஆனால் ஒரு பாடல் கேட்கும் ரகம். படத் தொகுப்பாளரான விஷால் தன்னால் முடிந்த அளவுக்கு காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார். நான் லீனியர் முறையில் சில இடங்களில் காட்சிகள் இருப்பதால் கொஞ்சம் கவனம் தவறினால் படம் மொத்தமாக பிரியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. ஆனால் அந்த இடத்தில் கச்சிதமாக காட்சிகளை நறுக்கி தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விஷால்.

ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்து பார்த்து சலித்து போன கதைதான் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை மூலமாக இந்தப் படத்தை வித்தியாசமாக காட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர் அனீஸ் அஷ்ரப்.

இதில் பாதி அளவில் அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். ஆனால் கொலைகாரன் யார் என்பதை முதலிலேயே காட்டி விட்டார்கள். நேரு ஸ்டேடியத்தை மையமாக வைத்து நடந்த சம்பவம்தான் இந்த கொலைகளுக்கு காரணம் என்பதையும் முன்கூட்டியே சொல்லி விட்டதாலும் ஒரு பரபரப்பும், ஒரு படபடப்பும், ஒரு எதிர்பார்ப்பும் நம்மிடையே இல்லாமல் போய்விட்டது.

குறைகளே இல்லாமல் படங்களை எடுக்கவே முடியாது. அந்த வகையில் இந்தப் படமும் பட்ஜெட் என்ற மிகப் பெரிய விஷயத்தை தாண்டி இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்

அவருடைய இந்த முயற்சிக்கு நமது பாராட்டுக்கள்.

RATING : 3 / 5

Our Score