‘ஆம்பள’ படத்திற்கு தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை சிட்டி 15-வது சிவில் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை சிட்டி 15-வது சிவில் கோர்ட்டில், சாய் சினி சர்கியூட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கோபாலன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் “எங்கள் நிறுவனம் ‘துட்டு’ மற்றும் ‘ஆம்பள’ என்ற பெயர்களில் 2 திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதில் ‘துட்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது.
‘ஆம்பள’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. ‘ஆம்பள’ படத்தில் முரளிகிருஷ்ணா என்பவர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இந்த ‘ஆம்பள’ என்ற தலைப்பை, கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கமான, கில்டில் முறையாக பதிவு செய்துள்ளேன்.
ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரித்ததால், ‘ஆம்பள’ படத் தயாரிப்பு பணி காலதாமதம் ஆனது. இதுவரை நான் 44 லட்சம் ரூபாய் வரையிலும் இந்தப் படத்திற்காக செலவு செய்துள்ளேன்.
நடிகர் விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி வருகிறார். இதையடுத்து, இந்த விவகாரத்தை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டு நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி உள்ளிட்டோரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
விஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்தை வருகிற 15-ம் தேதி வெளியாக உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படம் ‘ஆம்பள’ என்ற தலைப்பில் வெளியானால், எனக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, ‘ஆம்பள’ என்ற பெயரில் படத்தை வெளியிட விஷால் பிலிம் சர்க்யூட் நிறுவனம் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயமங்களம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வி.மனோகர், டி.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். விஷால் தரப்பில் ஆஜரான வக்கீல், பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு “மனுதாரரின் வாதத்துக்கு போதிய ஆதாரம் இல்லை” என்று சொல்லியும், “கில்டு அமைப்பில் பதிவு செய்யும் படங்களுக்கு சென்சார் அனுமதியில்லை..” என்று சொல்லியும் கோபாலனின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இதனால் கடைசிகட்ட டென்ஷன் குறைந்து நிம்மதியாகியுள்ளது விஷால் டீம். சொன்னபடி நாளை ஆம்பள ரிலீஸ் உறுதியாகிவிட்டது..!