‘வாகை சூட வா’ படம் மூலம் பிரபலமாகி ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரான ஜிப்ரான், இப்போது ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்கிற இசை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
‘சிங்கபூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ துணையோடு, ‘காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற படத்திற்குத்தான் ஜிப்ரான் தற்போது இசையமைத்திருக்கிறார்.
புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இப்படத்தின் ஆறு பாடல்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. இந்த ஆறு பாடல்களையும் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர் ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்து. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயணத்தைத் தொடங்கி பூடான், மியன்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என ஆறு நாடுகளில் முப்பது நாட்கள் பயணம் செய்து வெளியிட்டது.
இந்தப் படம் தற்போது முழுமையாக தயாராகி ரிலீஸூக்கு தயாராகி விட்டது. சமீபத்தில் இந்தப் படத்தை சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு போட்டு காட்டியபோது மாணவர்களின் கைத்தட்டல் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளது தயாரிப்பாளர் தரப்பு.
பட வெளியீட்டையொட்டி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் அப்பாஸ் அக்பர், “நான் சிங்கப்பூர்வாசிதான் என்றாலும் எனக்கு தமிழ்நாடுதான் பூர்வீகம். சிங்கப்பூரில் பல டாகுமெண்டரி, விளம்பர படங்கள் எடுத்த அனுபவம் மட்டுமே கொண்ட எனக்கும் தமிழ் சினிமா ஒன்று – அதையும் சகல தரப்பினரும் ரசிக்கும்படியாக எடுக்க வேண்டுமென ஆசை இருந்தது. இப்போது அப்படி ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
இப்படத்தின் கதை என்னவென்றால், சென்னையைக் சார்ந்த ஒரு வளரும் இயக்குநர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடி வருகிறான். அங்கே அவன் சென்னையைக் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும், அதன் தொடர்ச்சியாக எற்படும் சம்பவங்களும்தான் இந்த ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் கதை. படம் முழுக்க, முழுக்க கமர்ஷியல் கலந்த பொழுது போக்கு படமாக உருவாகியிருக்கிறது..” என்றார்
இசையமைப்பாளர் ஜிபரான் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை பற்றியெல்லாம் யாரும் பெரிதாக நினைக்க வேண்டாம். சும்மா பொழுது போகும் அளவுக்கு நிச்சயமாக இருக்கும். ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி ரீசண்டா இந்த படத்தைப் பார்த்த காலேஜ் ஸ்டூடன்ஸ் நாங்க எந்த இடத்துக்கு கை தட்டுவாங்க..? எப்ப வாய் விட்டு சிரிப்பாங்கன்னு ஒரு கணக்கு போட்ட இடத்திலே எல்லாம் எங்க கணிப்பு தப்பவே இல்லை. மாணவர்கள் இந்தப் படத்தை அந்த அளவுக்கு ரசித்தார்கள்.. அதனால் படத்தை இந்த மாதமே வெளியிடப் போகிறோம்..” என்றார்.