பன்முக திறமையுள்ள கலைஞரான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி -2’ இந்த ஆண்டின் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.
இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்திற்காக தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய பி. வாசு இயக்கத்தில் 65-வது படமாக இந்த திரைப்படம் தயாராகிறது.
திகில் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம்.குமரன் தலைமை பொறுப்பு வகிக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில் – காமெடி திரைப்படமான இந்த ‘சந்திரமுகி-2’ படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘வேட்டையன்’ கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.
தற்போது இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.









