full screen background image

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை உடைத்த பிலிம் சேம்பர் தேர்தல்..!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை உடைத்த பிலிம் சேம்பர் தேர்தல்..!

ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் போன்று எந்த நேரத்திலும் கழன்று கொள்ளும் வகையில் கூட்டணி அமைத்திருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக அமைப்பு, இன்று நடைபெற்ற பிலிம் சேம்பரின் தேர்தல் கலவரத்தில் சிதறு தேங்காயாக உடைந்துவிட்டது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கேயாரின் தலைமையில் ஒரு டீம் இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த அணியில் மூத்தத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல்ராஜா, கில்டு தலைவர் கிரிதர்லால், கலைப்புலி ஜி.சேகரன், அன்பாலயா பிரபாகரன், கே.பாலு, ஜாக்குவார் தங்கம், ஞானவேல், கமீலா நாசர். மலையாளப் பட அதிபர் விஜயகுமார், டைரக்டர் வீ.சேகர், நடிகர் எஸ்.வி.சேகர், ஏ.எல்.அழகப்பன், இயக்குநர் மனோஜ்குமார் ஆகியோர்  உள்ளனர்.

பிலிம் சேம்பர் தேர்தலில் பங்கேற்கும் எதிரணியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், பட அதிபர் கே.முரளிதரன், பட அதிபர்கள் எஸ்.தாணு, அழகன் தமிழ்மணி, ஏ.எஸ்.பிரகாசம், பிலிம் சேம்பர் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாக்காரா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு-ஆதரவு என்ற இரு அணி கூட்டத்திலும் கலந்து கொண்டு அதிசயமான உறுப்பினராகக் காட்சியளித்தார் பிரமிட் நடராஜன்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தாணு அணியினரை வரிந்து கட்டிக் கொண்டு கேயார் தலைமையில் அணி அமைத்து எதிர்த்த டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், அழகன் தமிழ்மணி, கே.எஸ்.சீனிவாசன் ஆகியோர் இந்த பிலிம் சேம்பர் தேர்தலில் அதே தாணுவுடன் கை கோர்த்துள்ளனர்.

இன்னொரு திடீர் திருப்பமாக இதுவரையிலும் தாணுவுக்கு லெப்ட் அண்ட் ரைட்டாக இருந்த பட அதிபர் பி.எல்.தேனப்பன் இந்த பிலிம் சேம்பர் தேர்தலை புறக்கணிப்பது என்ற கேயார் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்து நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு வந்திருந்தது ஆச்சரியமான விஷயம்..

சென்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட தயாரிப்பாளர் கே.முரளிதரன் இந்த பிலிம் சேம்பர் தேர்தலில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரை சென்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எதிர்த்தவர்கள், அடிதடி அளவுக்கு கொண்டு சென்றவர்களெல்லாம் இப்போது இந்த பிலிம் சேம்பர் தேர்தலில் இவரை ஆதரிக்கிறார்கள்..

நேற்றைக்கு இரு அணி கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரமிட் நடராஜனும், புறக்கணிக்கப் போகிறோம் என்ற கேயாரின் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பாலயா பிரபாகரனும் இன்று காலை நடந்த பிலிம் சேம்பர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் இப்போது நடைபெற்று வரும் வாக்குப் பதிவு மதியம் 3 மணிவரை நடைபெறும். ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்பு உடனேயே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அநேகமாக தேர்தல் முடிவுகள் மற்ற மாநிலத்தவர்கள் நினைத்தபடியேதான் வரும் என்று அனைவருமே நம்புகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது அரசியல் கட்சிகளெல்லாம்.. அரசியல்வாதிகளெல்லாம் இந்தச் சினிமாக்காரர்களிடம் தோற்றார்கள் என்றே சொல்லலாம்..!

Our Score